கூகுள் செய்திகளின் இந்திப் பதிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிப் பதிப்புகளும் வரும் என்கிறார்கள். இந்தியில் ஒருங்குறி அல்லாத பிற எழுத்துருக்களில் அமைந்திருந்த தளங்களின் தகவல்களையும் ஒருங்குறிக்கு மாற்றி வெளியிடும் பொறுப்பை கூகுளே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தினமலர், தினகரன், விகடன் போன்ற தளங்கள் ஒருங்குறியில் செய்தி வெளியிடுவதற்கான அறிகுறிகளை காணாதிருக்கையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்தபட்சம் செய்தியோடைகளையாவது வழங்க இது போன்ற முன்னணி செய்தித் தளங்கள் முன்வரவேண்டும்.
தற்போது MSN தமிழ், Yahoo தமிழ், Thatstamil ஆகிய செய்தித்தளங்களே செய்தியோடைகளை வழங்குகிறது. அதிலும் thatstamilன் செய்தியோடை உள்ளடக்கம் ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் சிஃபி, வெப் உலகம் போன்று இணையத்தில் மட்டும் இயங்கும் செய்தித் தளங்கள் விரைவில் இந்த வசதிகளை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கலாம். Yahoo தமிழ், MSN தமிழ் போன்றவை தனித்துவமான செய்திகளைத் தராமல் செய்தி நிறுவனங்கள் சார்ந்து செயல்படுவது ஒரே செய்திக் கட்டுரை இரண்டிலும் வெளி வருவதற்கான குழறுபடிகளுக்கும் வாய்ப்பாகப் போய் விடக்கூடும். தவிர, இவ்விரு தளங்களும் அவற்றின் பன்னாட்டுத் தரத்திற்கு இல்லாமல் வழக்கமான தமிழ் மசாலா தளம் போலவே இருப்பது ஏமாற்றமளிக்கிறது. பிபிசி தமிழ் தமிழகச் செய்திகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் அதன் இணையப்பதிப்பிலாவது இதைச் செய்யலாம். சீனத் தமிழ் வானொலியும் சீனச் செய்திகளிலேயே மூழ்கிக் கிடப்பதால் அதிகம் தமிழக செய்தி சார் பயனற்றதாக இருக்கிறது. தரம் வாய்ந்த இவ்விரு பன்னாட்டு வானொலிகளும் இணையப் பரப்பில் ஒரு முன்னணி செய்தித் தளமாக செயல்பட வாய்ப்பு உண்டு.
தினமலர், தினகரன், தினமணி போன்ற அச்சு ஊடக செய்தித் தளங்கள் இணையத்தின் சாத்தியத்தை துளியளவும் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எளிதில் செய்யக்கூடியன, செய்ய வேண்டியன –
1. ஒருங்குறி எழுத்துருக்களுக்கு மாறுதல்.
2. அச்சில் வந்த செய்திகளை மட்டும் படி எடுத்து இணையத்தில் போடாமல் இணையத்துக்கு என்று தனித்துவமான 24 நேரமும் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும் செய்தி அறிக்கைகளைத் தருவது.
3. செய்திப் பக்கங்களில் மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டு அளிக்கும் வசதி.
4. வாசகர்களே செய்தி சார் நிழற்படங்கள், நிகழ்படங்கள், கட்டுரைகளை பதிவேற்றும் வசதி. அவற்றின் தரத்தைக் கண்காணித்து இத்தளங்கள் உடனுக்குடன் வெளியிட்டால் உள்ளூர் செய்திகள், பரபரப்புச் செய்திகளை இற்றைப்படுத்த சரியான வாய்ப்பாக இருக்கும்.
வழக்கமான நிறுவனமயப்படுத்தப்பட்ட செய்தித் தளங்கள் போக சற்றுமுன் போன்ற பதிவுலகில் வெளி வரும் கூட்டு முயற்சி செய்தித் தளங்களும் குறிப்பிட்டத்தக்க பணியாற்றக்கூடும். வெறுமனே வெட்டி ஒட்டும் பதிவுகளாக இல்லாமல், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, தமிழ் அச்சு ஊடகங்களில் வணிகக் கட்டாயங்களால் வெளி வராது இருக்கின்ற, பல செய்திகளை இவை வெளிக்கொணர்வது சிறப்பு.
இணையத்தில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுபவைகளில் செய்தித் தளங்கள் முதன்மையானவை. இதைத் தமிழ் இணையப்பரப்பில் இயங்கும் செய்தித் தளங்கள் கூடிய சீக்கிரம் புரிந்து கொள்வது நலம்.