ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி?

இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

– பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் – எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

– சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும்.

பக்க எண் வாரியாகக் குறிப்புகள்:

1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் “ஜிலீர்” படத்தைப் போடவும்.

2. முழுப்பக்க வெளியாள் விளம்பரம்

3. இங்கு விகடன் தாத்தா படத்துடன் விகடன் பிரசுரத்துக்கான விளம்பரம் போடவும்.

4. இங்கு தலையங்கம் எழுத வேண்டும். இது மிகவும் எளிமையான ஒன்று. இறந்த யாருக்கும் ஒரு அஞ்சலி, ஏதாவது ஒரு அரசியல் நிகழ்வுக்குக் கண்டனம், யாருக்காவது அறிவுரை, எதற்காவது கவலை, பாராட்டு என்று வாரம் ஒன்றாக சுழற்சி முறையில் எழுதவும்.

5 – 8 . வெளியாக உள்ள புதுத் திரைப்படம் / பூசை போடப்பட்ட திரைப்படம் ஒன்றின் படங்கள், அதன் இயக்குனர் பேட்டியை வெளியிடவும்.

9. ஒரு பக்கச் சிறுகதை ஒன்று போடவும்.

10. பெண்கள் கல்லூரிப் பேட்டி ஒன்று போடவும். மாணவிகள் எல்லாம் கையைத் தூக்கியோ சைகைக் காட்டியோ எல்லாப் பல்லும் தெரிய pose தர வேண்டும். ஜீன்ஸ், சுரிதார் என்று வகைக்கு ஒன்றாக அணிந்திருக்க வேண்டும். இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் – அ) sms joke ஆ) பிடித்த நடிகர் இ) என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பெண்களின் படத்தை நன்றாக எடுத்து வருமாறு நிருபரை அறிவுறுத்தி அனுப்பவும்.

11 – 13. யாராவது ஒரு அறிவுஜீவியைக் கூப்பிட்டு எதையாவது எழுதச் சொல்லவும். இவர் ஏட்டிக்குப் போட்டியாக எழுதுதல் நலம். ஒரு உலக நடப்பை ஒப்பிடுவது, பிரபலத்தைச் சிலாகிப்பது ஆகியவை அவசியம்.

14 – 16 . ஒரு நையாண்டிக் கதை. இதில் அரசியல்வாதிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இடம்பெறுதல் நலம்.

17. ஒரு கேலிச் சித்திரம்.

18 – 20 . கேள்வி பதில் பகுதி.

இதில் வெளியிடப் பரிந்துரைக்கப்படும் கேள்விகள் – அ) முதலைக்கு மூக்கு இருக்கா? ஆ) மூன்றாம் மொகலாய மன்னனுக்கு எத்தனை மனைவிகள்? இ) xஐயும் yஐயும் ஒப்பிடவும் ஈ) அண்மையில் பார்த்த படம், படித்த புத்தகம் என்ன?

இங்கு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு பளப்பளா நடிகை படத்தை போடுங்கள். கேள்வி பதில்கள் அளவை விட படத்தின் அளவு பெரிதாக இருத்தல் நலம். தொப்புள் போன்ற பகுதிகளை சிறப்பாகக் காட்டினால் வாசகர் மகிழ்வார்.

21 – 23 . இலக்கியப் பகுதி.

இங்கு பிரபல இலக்கியவாதி தான் படித்த புத்தகம், போய்ப் பார்த்த ஊர்கள், கடந்து வந்த மனிதர்கள் குறித்து எழுத வேண்டும்.

24 – 27. திரை விமர்சனம்.

36ல் இருந்து 42க்குள் ஒரு மதிப்பெண் போடவும். camera பசுமையா இருக்கு, பாட்டு இன்னும் நல்லா போட்டிருக்கலாம், hero-heroine chemistry அருமை, இயக்குனருக்கு ஷொட்டு, ஹீரோயின் ஜிலீர் சோடா – போன்ற சில வரிகளை மாற்றி மாற்றி எழுதவும்.

28 – 32 . மன ஊக்கப் பகுதி.

ஒரு சாமியாரைக் கூப்பிட்டு package முறையில் தத்துவம் எழுத சொல்லவும். இவர் ஆண்டுக்கணக்கில் இதை எழுத வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்வது நன்று.

33 – 34. முழுப்பக்க வெளியாள் விளம்பரங்கள்.

35 – 37 புதுவரவான கேரள / மும்பை நடிகைகளின் பேட்டி. விகடனை நாம் கிண்டி முடிக்கப் போகும் நேரம் வந்து விட்டதால் படம் எப்படி போட வேண்டும் என்று இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இது வரையுள்ள குறிப்புகளை இன்னொரு முறை கிண்டிப் பழகவும்.

38 – 40 ஜல்லிப் பகுதி

வானம் ஏன் கீறல் விழுந்த மாதிரி தெரிகிறது, மொஹஞ்சதாரோ சிற்பங்களில் உள்ள அடவுகளை கணினிக்கு கொண்டு வர நிரல் எழுதுவது எப்படி, பழைய தமிழ் இலக்கியப் பாட்டுக்குப் பொருள் என்று கலந்து கட்டி ஜல்லி எழுத ஒரு நல்ல ஆளாகப் பிடிக்கவும்.

41 – 42 அரசியல்வாதி பேட்டி

வாரம் ஒரு முறை வைத்து, தமிழகத்தில் உள்ள 52க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களையும் பேட்டி எடுத்துப் போடவும். கேட்க வேண்டிய கேள்விகள் – அ) அணி மாறப் போறீங்களாமே? ஆ) உங்க வாரிசு இப்படியாமே? இ) விடுதலைப்புலி பத்தி என்ன சொல்லுறீங்க?

43 – 45 ஆன்மிகம்

ஒரு கோயில் படம். பயணக் குறிப்பு, தல புராணம். மகிமை.

46 – 48 திரைப்படத் துறை ஆட்களின் தொடர்.

இவர் அண்மையில் வெற்றி பெற்ற இயக்குனராகவோ சோத்துக்குத் திண்டாடும் பழைய நடிகராகவோ இருக்கலாம்.

49. வெளியாள் விளம்பரம்.

50. அட்டைப் பட விளம்பரம்.

கிண்டிய பின்:

– இந்த இதழில் கூடுதலாக திரைச் செய்திகள் வந்து விட்டதால் , இதை சினிமா ஸ்பெஷல் என்று அறிவிக்கவும். எல்லா இதழ்களிலும் இதே அளவு திரைச் செய்திகள் இருக்கும். ஆனால், அவற்றை பொங்கல் சிறப்பிதழ், தீபாவளிச் சிறப்பிதழ் என்று பெயர் மாற்றிக் கொள்ளவும்.

– ஜிலீர், பளீர், குற்றால குல்ஃபி, இளமை carnival போன்ற சொற்களைத் தூவி விடவும்.

பொதுவான சமையல் உத்திகள்:

– ஆண்டுக்கு ஒரு முறை newsprint விலை ஏறிவிட்டது என்று புலம்பி விலையேற்றிக் கொள்ளவும். கூடுதல் பக்கங்கள் தருவதாகச் சொல்லி அவற்றில் விளம்பரம் போடவும்.

– ஆறு மாதத்துக்கு ஒரு முறை விகடன் தாத்தா புதுத் தோற்றத்தில் வருவதாகச் சொல்லி அறிவிப்பு விடவும்.

– தீபாவளி, பொங்கலுக்கு இரட்டைச் சிறப்பிதழ் வெளியிடுவதாகச் சொல்லி 25 பக்க அளவில் இரு புத்தகங்கள் தரவும்.

– நேரம் கிடைக்கும்போது முன்பு நன்றாக இருந்த விகடன் படைப்புகளைத் தொகுத்து வைத்தால் தீபாவளி மலரை ஒப்பேற்ற உதவியாக இருக்கும்.

– எத்தனைப் பக்கங்களில் விகடன் கிண்டினாலும் இந்த formulaவை மாற்ற வேண்டாம்.

– எல்லாரும் இதே முறையில் கிண்டினாலும் விகடன் என்ற பெயர் எண்ணியல் நம்பிக்கைப்படி ராசியான ஒன்று. எனவே, கவலைப்படாமல் எப்படி வேண்டுமானாலும் கிண்டவும்.


Comments

43 responses to “ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி?”

  1. முற்றிலும் உண்மை ரவி. இந்த டெம்ப்ளேட்டை அவங்க ரொம்ப நாளாவே follow பண்றாங்க.

    நல்ல ரசித்த பதிவு இது. கில்லியிலும் இணைப்பு கொடுத்திருக்கிறேன் .

  2. ramachandranusha Avatar
    ramachandranusha

    யப்பா, நல்லா கிண்டினீங்க 🙂 இதுல பாருங்க, சிறுக்கதை மட்டும் ஆவில- ஒருபக்கம், கால், அரை
    குமுதம், குங்குமம், ஒன்றரை பக்கம் கல்கி, ஆக கிண்டியது அனைத்தும் இவை அனைத்து பத்திரிக்கைகளுக்கும் பொருந்துகிறது. கல்கியில் படங்கள் மைனஸ். பத்திரிக்கை ஆரம்பிப்பது
    இவ்வளவு சுலபமா :-)))

  3. உஷா, முன்ன எல்லாம் ஆ.வி, கல்கி போன்ற இதழ்கள்ல எவ்வளவு அருமையான சிறுகதைகள், தொடர்கதைகள் வரும்..இப்ப ஒன்னையும் காணோம். ஒருப்பக்க, அரைப்பக்கக் கதைகள் எல்லாம் கொடுமையின் உச்சம். நன்றாக எழுதுபவர்களை ஆ.வி போன்றவை உற்சாகப்படுத்துவதில்லையா இல்லை மக்களுக்கு கதை படிக்கும் ஆர்வம் போய்விட்டதா? புத்தகத் திருவிழாக்களைப் பார்த்தால், ஆர்வம் குறைந்ததாகத் தோன்றவில்லை.

  4. நல்லா எழுதியிருக்கீங்க, ஆனா “ஜிலீர்”, “பளீர்” அப்படியென்றால் என்னவென்று தெரியவில்லை. விக்சனரியை நாடினால் அதிலும் பதில் இல்லை. தயவு செய்து இந்த வார்த்தைகளையும் இன்ன பிற வார்த்தைகளையும் விக்சனரியில் சேர்க்குமாறு வேண்டுகிறேன் 🙂

  5. விக்கி – கில்லியில் இணைத்ததற்கு நன்றி. இந்த வார்ப்புருவை இனியும் மாற்ற மாட்டார்கள் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை 😉

    சாரு – இது போன்ற சொற்களின் ஒரு பட்டியலைத் தொகுத்தால் விக்சனரியில் ஒரு பின்னிணைப்பாகப் போடலாம் 😉 குபீர், சதக், திடுக், பளீர், ஜிலீர்… 😉

  6. ஆகா விகடன் கிண்டுவது பத்தி சமையல் குறிப்பு அருமையோ அருமை….ரொம்பவே ரசிச்சேன்…:-)

  7. முற்றிலும் உண்மை. இருக்கற எல்லா நொள்ள கண்ணுலயும் வச்சு நல்ல கண்ணு இதுதான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான்.. 🙂

  8. ramachandranusha Avatar
    ramachandranusha

    ரவி, நான் பார்த்தவரையில் ஆவியில் சில வாரங்களாய் ஒரு சிறுகதை, பிரபலங்களை கேட்டு வாங்கிப் போடுகிறார்கள் போல இருக்கு, போன வாரம் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதை அருமையாய் இருந்தது.

  9. சுதர்சன், syam, bart – 🙂

    usha – எப்படியோ நல்ல கதை போட்டால் மகிழ்ச்சி. இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பில் ஒரு காலத்தில் அருமையான (இல்லை, புரியாத பின் நவீனத்துவ 🙂 ) கதைகளைத் தொடர்ந்து போட்டார்கள். இப்ப அவங்களும் விட்டு விட்டுத் தான் போடுறாங்கன்னு நினைக்கிறேன்.

  10. மிக்க நன்றி ரவிசங்கர் அவர்களே!

    மிக பொறுப்புள்ள பதிவாக உள்ளது உங்கள் பதிவுகள்.
    ஆனந்த விகடன் மற்றும் குமுதம் போன்ற பத்திரிக்கைகளை இதுவரை காசு கொடுத்து வாங்கி புரட்டியதில்லை. நண்பர்கள் கையிலிருக்கையில், அவர்களாக சுட்டிக்காட்டும் பக்கங்களைப் பார்த்ததுண்டு.
    என் போன்ற இவ்வாறான பத்திரிக்கைகளை ஊக்குவிப்பது இல்லை என்று உறுதியோடு இருந்த சில நண்பர்கள் தற்போது மேற்கண்ட பத்திரிக்கை குழுமங்களுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது.
    அதனால் கருத்து சொல்லி பலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
    நீங்கள் தைரியசாலி/அறிவுசாலி. பாராட்டுகள்.

    நான் Blogகில் ஏற்றுவதை யாராவது படிக்கிறார்களா என்ற ஐயம் இருந்தது. நீங்கள் கருத்தும் சொல்லி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் நன்றி.
    வாழ்த்துகள்.
    தொடர்பில் இருங்கள்.

    நிறைய அன்புடனும்,
    ஒரேயொரு முத்தத்துடனும்,
    மதியழகன் சுப்பையா

  11. thiyagarajan Avatar
    thiyagarajan

    Ravi,
    enjoyed reading about vikatan..you forgot to add one ingredient- Dr’s advice. without exceptions, the questions here won’t be on normal cold, cough stuff-but mostly on sex related. “Dr” also will respond with lot of “details and advice”.
    Vikatan is no 1!
    It used to be a good magazine.–like the old fairy style stories-“once upon a time”!. Over a period they perfected the style from Kumudam (then no 1!). So, what will kumdam do?-they perfected the style of “kungumam”. btw telesion serials and all these trash magazines one wonders where are the younger generation heading to?

    The only conoslation is their pasumai vikatan. so far seems to be good.

  12. அருமை ரவிஷங்கர்.. இந்த சமையல் குறிப்பை பார்த்தவுடன் எனக்கும் ஒன்று கிண்டலாம் என்று தோன்றினாலும் எல்லாவற்றையும் (நற நற) நீங்களே கிண்டி முடித்துவிட்டதால் அதைச் செய்ய முடியவில்லை:-(

    கற்றதும் பெற்றதும், கவிதைகள் விட்டுவிட்டீர்களே! இந்த பார்மட் கவிதை ஒரு விசித்திர ஜந்து. புரியற மாதிரி இருக்கும்.. என்னவோ சொல்லவறான் ஆனா என்ன சொல்லவறான்றது தெரியாம இருக்கணும். “பட்டுப்பூச்சி செய்த பட்டா ஆர்ஜிதம்”, “குழல்விளக்குக் கனவுகள்” ரேஞ்சு.

    நன்றாகச் சிரித்தேன் – நன்றி.

  13. மதியழகன் – உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் எந்த விதத்தில் தைரியசாலி என்று தெரியவில்லை. இதைப் படித்து விட்டு விகடன் ரசிகர்கள் நெதர்லாந்துக்கு ஆட்டோ அனுப்ப முடியாது என்ற தைரியம் தான் 😉 சின்ன வயசில் குமுதம், விகடன், ராணி போன்ற பத்திரிக்கைகளை என் அப்பா படிக்க விட மாட்டார். இப்ப காரணம் புரியுது. மற்றபடி, இந்தப் பத்திரிக்கைகளை ஊக்குவிக்கக்கூடாது என்ற கொள்கையெல்லாம் இல்லை. hostel காலத்தில் வண்ணத்திரைக்கு கூட அடித்துக் கொண்டு படிப்போம். மசாலா இதழ்கள் தேவை தான். ஆனால், நல்ல ஜனரஞ்சகமான தரமான இதழ்களுக்குத் தான்ன் தட்டுப்பாடு.

    தியாகராஜன் – ஆ.வி-யில் மருத்துவர் பதில்கள் வருவது போல் தெரியவில்லையே? எனக்கு பசுமை விகடனில் கூடத் திருப்தி இல்லை. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு நல்ல வண்ணமயமனா இதழ். பசுமை என்ற பெயரைப் பார்த்து சூழல் சார்ந்த பதிப்போ என்று ஏமாந்துவிட்டேன்.

    சுரேஷ் – 38-40 – ஜல்லிப்பதிவுக் குறிப்பு – கற்றதும் பெற்றதும் கிண்டுவதற்குத் தான். சில சமயம் எளிய நல்ல கவிதைகளும் விகடனில் வருகிறது என்பதை மறுக்க இயலாது.

  14. :)))
    super!

  15. விகடன் தரமிழந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால் அவர்களும் வியாபாரம் செய்யவேண்டுமே! அதற்காக விகடன், குமுதம் மாதிரி ஆகிவிட்டது வருத்தமே. மற்றபடி சனரஞ்சகமாக இல்லாவிட்டால் கல்கி போன்று மெல்லச் சாகவேண்டியதுதான். ஒருகாலத்தில் தனியாக வந்த கதிரை அப்படித்தான் சாகடித்தார்கள்.

    வாசகர்களும் லேசுபட்டவர்களில்லை. திண்ணை, கற்கண்டு போன்றவற்றை யார் படிக்கிறார்கள். சும்மா தேடியதில் கிடைத்த பின்வரும் சிறுபத்திரிகைகளின் பெயர்களைக்கூட நான் இதுவரை அறிந்திருக்கவில்லை.

    தீபம், தாய், திசைகள், அமுதசுரபி, மனுசி, அலிபாபா, கயிறு, கீற்று, நிலாச்சாரல், தமிலோவியம், எழில்நிலா, சங்கமம். சந்தவசந்தம், உயிரெழுத்து.

  16. தரம் + ஜனரஞ்சகம் இரண்டையும் நிச்சயம் தர முடியும் என்றே தோன்றுகிறது. குறைந்தபட்சம், எங்கும் திரை எதிலும் திரை என்று அச்சு, தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள் திகட்டத் திகட்டத் தருவதை நிறுத்த வேண்டும். திரை அல்லாது ஜனரஞ்சகமாகத் தர எத்தனையோ இருக்கிறது. அதைச் செய்யாததற்கு காரணம் – இந்நிறுவனங்களின் சோம்பேறித் தனமும் படைப்புத்திறன் உள்ளவர்களை ஊக்கப்படுத்தாததும் வாசகர்களும் இப்பத்திரிக்கைகளைப் புறக்கணிக்காமல் படிப்பதும் தான்.

    திண்ணை, மரத்தடி, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களை நானும் படித்ததில்லை. எனக்கென்னவோ, இணைய இதழ்கள் தகவல் சார்ந்து உள்ளதே வெற்றி அடையும் என்று தோன்றுகிறது. இணையத்தில் அமர்ந்து கதை படிக்க எல்லாம் எனக்கு பொறுமை இல்லை. அச்சு இதழ்கள் என்றால் சரி. அதற்கும் சிறு பத்திரிக்கை அளவில் வெறும் இசங்களாக புரியாத கதை, கவிதைகளை அடுக்குவதும் சலிப்பூட்டுவதே.

  17. வணக்கம் ரவி,
    ஒரு நல்ல பதிவைப் படித்த ஒரு திருப்தி இன்னும் இருக்கிறது என் நெஞ்சில். உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. என்ன செய்வது. தமிழ் பத்திரிக்கைகள் தரம் தாழ்ந்து பல காலங்கள் ஆகி விட்டது.

  18. ராஜா Avatar
    ராஜா

    விகடனின் இன்றைய நிலையை சரியாக எழுதியிருக்கீங்க 5 ஆன்டுக்கு முன் நான் வேலைக்கு சேர்ந்த சமயத்தில் டிரெயினில் படிப்பதற்கு வாங்கி அதில் வந்த கதைகள் மற்றும் தொடர்களுக்காவே அந்த இதழ்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
    கடந்த 2 வருடங்களாக அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன் .
    இப்போழுது வரும் இதழ்களில் எல்லாம் விகடனின் தரமே அதில் இல்லாமல் போய்விட்டது .ஒரு பக்க கதை என்றும் அதுவும் ஒன்று அல்லது முன்றுக்கு மேல் கிடையாது, கட்டுரைகளும் பேட்டிகளும் தரம் இழந்துவிட்டன் , அதுவும் இந்த வார விகடனில் ஒன்றும் இல்லை , பக்கம் மட்டும் அதிகப்படுத்தி விலை ஏற்றியிருக்கிறார்கள்

  19. தல பின்றீங்க.
    சூப்பர்.

  20. Appadiye rajini sira avan, evan endru pottu oru kattrai podanum

  21. :-))))))))))))))))

    நன்றாகச் சிரித்தேன் – நன்றி.

  22. Nandri Nanbare,

    On many occasions, I have compared present Vikadan with the old ones. At present I have a copy of Vikatan that came around 2001. I can’t imagine its changes. It is a great loss to story lovers as AV displays no story.

    Day to day it is losing its standard.

  23. nallavanakkunallavan Avatar
    nallavanakkunallavan

    //hero-heroine chemistry அருமை, இயக்குனருக்கு ஷொட்டு, ஹீரோயின் ஜிலீர் சோடா – போன்ற சில வரிகளை மாற்றி மாற்றி எழுதவும்//

    முதல் பாதி வேகம் , இரண்டாம் பாதி வழ வழா enbathu போல எழுதவும்

    அவர்கள் தயாரித்த SMS படத்திற்கு மட்டும் குறையே இல்லாமல் விமர்சனம் செய்யலாம்

  24. கலை Avatar
    கலை

    ஆனந்த விகடனின் தொடர் வாசகியாக இருந்த காலம் ஒன்று உண்டு.

    ரொம்ப நல்லா ஆனந்த விகடனை தாளிச்சு, வறுத்து எடுத்திருக்கிறீங்க :).

  25. LMAO

  26. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நந்தா, Raja, வெங்கட்ராமன், சூர்யா, சின்னப்பையன், கலை, Joe, திருமலை, நல்லவனுக்கு நல்லவன் – தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

  27. Very nice….I was a vikatan reader for atleast 15 years..I didn’t find anything else apart from whatever said.
    Thiru

  28. 6 months back they started issuing the additional book which has the older news..(atleast 20 years back..) They made the price is 15 rupees…Before that it was 10 rupees….Book size also they increased. It’s not a kumudam size now…Then they made that as a part of big book….then it became one book….Really got irritated by the way they doing…So stop reading now…

  29. Previously it was the only source of relief to read AV for the people who live outside Tamilnadu. The older editions are included. It may be a change. But it is boring. Even the jokes are less fascinating. They need to review the present editions and to present it with interesting topics.

  30. rajendran Avatar
    rajendran

    நல்லா ஆனந்த விகடனை தாளிச்சு, வறுத்து எடுத்திருக்கிறீங்க.

  31. senthamil Avatar
    senthamil

    i conflict your points about vikatan. vikatan is one of the best weekly in tamil comparing kumutham and so on……..

  32. உண்மை ….
    இன்று சினிமா மற்றும் இது போன்ற சின்னத்தனமான தகவலகளை தான் மக்கள் விரும்புகிறார்கள் என பெரும்பாலான பத்திரிக்கை கள் நினைக்கின்றனர். அவர்களின் இந்த எண்ணத்தை உங்கள் கட்டுரை பிரதி பலிக்கிறது. நான் விக்டன் வாசகன் இன்றல்ல என் 8 வயது முதல்…. அதாவது 1992 முதல்… ஆனால் இன்று விகடன் கையில் தொடுவது கூட இல்லை … காரணம் 75 ம் ஆண்டில் புதுமை செய்கிறோம் எனவும் மக்கள் விரும்புகிறார்கள் என கூரியும் அதிக அளவில் சினிமா செய்திகளையும், கண்கூசும் கவர்ச்சி படங்களையும் பிரசுரிக்க துவங்கி விட்டனர்… தரமான் இதழ் என்றால் விகடன் எனும் பெயர்? இப்போ இருக்க… இல்லை…
    இளம் சமூகத்தினை சபலப் படுத்தும் வேளையினையே இன்று 90 சதவீத தமிழ் பத்திரிகை கள் மேற்கொள்கின்றன. மக்கள் விரும்பவில்லை… மக்களை இவர்கள் விரும்பவைக்கின்றனர். கலாச்சாரம் எனும் பெயரில் இன்று நம் கலாச்சாரத்தினை துவம்சம் செய்ய துவங்கி விட்டனர்… இவர்களை போன்றவர்கள்… ஏன் தினசரிகள் கூட கற்பழிப்பு , மானபங்கம் போன்ற செய்திகளை தவறு என உணர்த்துவது போலவா வெளியிடுகின்றனர்… இல்லையே அதனை சுவராசியம் எனும் பெயரில் ஒரு பாலியல் கதை சொல்வது போல வர்ணித்து எழுத்துகின்றனர்… நானும் ஒரு தினசரியில் செய்தியாளனாக பணிபுரிந்தேன் எனும் முறையில் சொல்கிறேன்… நான் எழுதிய செய்திகள் கூட இதுபோன்ற மாற்றத்திற்கு பின்பே பிரசுரம் செய்தனர்…
    இன்று பத்திரிகைகள் மக்களுக்கு நல்ல தகவல்கள் சொல்ல அல்ல வியாபார நோக்க்கத்திற்கே… அவர்களின் வியாபார நோக்கத்தின் வடிமைப்பு வித்தையை…. நல்ல படியா கிண்டி எடுத்துருக்கீங்க…. நல்ல ருசி……..

  33. அட..! ஒரு அச்சு யந்திரமிருந்தா யாவாரம் துவங்கலாம் போலகிடக்கு..
    என்ன கொடும சார்..

  34. ஆஹா அருமை

  35. உண்மை
    உண்மை
    சத்தியமான உண்மை இதைபோலவே நானும் ஒவொறு பக்கமாக அலசி பார்த்ததுண்டு

  36. Thamiznesan Avatar
    Thamiznesan

    மிக அருமை. 10 பக்கம் பொக்கிஷம் என்று பழைய குப்பையிலிருந்து கிளறி எடுத்துக்கொள்ளவும். ஆவி போன்ற மசாலாப் புத்தகங்களைவிட மஞ்சள் மட்டும் போட்டு எழுதும் மஞ்சள் புத்தகங்கள் எவ்வளவோ மேல்.

  37. அபாரம், நானும் சிறு வயதில் இந்த பத்திரிக்கைகளில் வரும் கதைகளையும், கவிதைகளையும் படித்துவிட்டு ஒரு எழுத்தாளர் ஆகா வேண்டும் என்று கனவுகள் கண்டதுண்டு. பல வருடங்கள் கழித்து நேற்று ஒரு விகடன் படித்தேன், படித்துவிட்டு ஏனோ எனது கிறுக்கல்களே பரவ இல்லை என்று நினைத்து கொண்டு மூடி விட்டேன்.

    ஒரு சில வருடங்களுக்கு முன்னால் எதோ ஒரு பத்திரிக்கையில் கவிதை போட்டி நடத்தினார்கள், அதில் இருந்த சாரம் எங்கே? ஏன் இப்படி ஆகி விட்டார்கள்? வலை பதிவுகளும் ஒரு காரணமாக இருக்கலாம், அனால் அதை கூட சமாளிக்க தெரியாத ஆட்களா என்ன?

  38. sekar Avatar
    sekar

    very nice your comment,

  39. மிக நன்று. விகடன் மதிப்பெண் 42/100

  40. Giri Vasudevan Avatar
    Giri Vasudevan

    உண்மை
    உண்மை
    ஏன் இப்படி மஞ்சள் புத்தகங்கள் ஆகி விட்டார்கள்?

  41. R.Shanmugasundaram Avatar
    R.Shanmugasundaram

    மிகஉண்மை.இன்று பத்திரிகைகள் மக்களுக்கு நல்ல தகவல்கள் சொல்ல அல்ல வியாபார நோக்க்கத்திற்கே.இப்போழுது வரும் இதழ்களில் எல்லாம் விகடனின் தரமே அதில் இல்லாமல் போய்விட்டது .விகடன் தரமிழந்துவிட்டது என்பது உண்மைதான்..

  42.  Avatar
    Anonymous

    நீங்கள் ஆனந்த விகடனை கிண்டியது‍ அருமை. மிக மிக தரம் தாழ்ந்துவிட்டது. தங்களை திருத்திக் கொள்ளவேமாட்டார்கள்.

    இன்னும் கேவலமாக நீங்கள் கிண்டியிருந்தாலும் தகும்.