ஒரு நதி போல…

அன்புன்னா என்ன?

இந்தக் கேள்வி தோன்றின முதல் முறையே அன்பைத் தவற விட்டு ரொம்ப நேரமாயிடுச்சோன்னு தோணுது..

இந்தக் கேள்வி எனக்கு எப்ப முதன் முதல தோணுச்சுன்னு சரியா நினைவில்லை. ஆனா, அடிக்கடி வந்து போகும் கேள்வி இது. இதுக்கான பதில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. புரிஞ்சும் ஏத்துக்க முடியாத மாதிரியும் இருக்கு. புரியாட்டியும் தேடல் மட்டும் ஓயாம இருக்கு.

ஒரு நாள். பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தேன். யாரோ யாருக்கோ “நாங்க அத செஞ்சோம், இத செஞ்சோம், இப்படி வளர்த்தோம், அப்படி பார்த்துக்கிட்டோம், எங்கள மறந்துட்டாங்க”-ன்னு புலம்பிக்கிட்டிருந்தாங்க. அப்ப செல்வி அக்கா சொன்னாங்க – ” செஞ்சு என்ன புண்ணியம். அது தான் சொல்லிக் காமிச்சிட்டீங்கள்ள”-ன்னு. அன்னைக்கு சுள்ளுன்னு ஒன்னு உறைச்சு மாதிரி இருந்துச்சு. நம்ம எத்தனை நாள் இப்படி எத்தனை பேரை சொல்லிக் காமிக்கிறோம்னு.

பாரதிராசா படத்துல வர்ற அழகான ஊரும் வெள்ளந்தி மனுசங்களும் எங்க இருக்காங்கன்னு தெரில. எங்க ஊருல வீட்டைச் சுத்தி முறைப்பாட்டுக்காரங்க தான். அம்புட்டுப் பேரும் பங்காளிங்க. தளை வெட்டுறதுல இருந்து மனுசன வெட்டுறது வரைக்கும் முறைப்பாட்டுக்கு ஆயிரம் காரணங்கள். கேப்பை ரொட்டி சுட்டாலும் கொண்டாந்து கொடுப்பாங்க. முறைப்பாடு வந்தா மண்ணை வாரித் தூத்தி காது கூசும் வார்த்தைகளை சொல்லவும் தயங்க மாட்டாங்க. அப்புறம் யாரும் அப்பச்சி கிப்பச்சி செத்தா கைத்தொட ஒன்னு சேர திருநீறு பூசி ராசியாகிக்குவாங்க. மனசுல வஞ்சத்த வச்சுக்கிட்டு அடுத்த சண்டைக்கு காத்திருப்பாங்க சில பேர். அப்பா எதையும் மனசுல வைச்சுக்காம எல்லாருக்கும் முடிஞ்ச அளவு நல்லது பண்ணுவார். அப்பா அளவுக்கு மனப்பக்குவம், பெருந்தன்மை வர்றது கடினம்.  “ஏன்ப்பா இப்படி பண்ணுறீங்க”ன்னு கேட்டா, “அப்புறம் நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்”பார். ரொம்ப நல்லவரு தான்.

புதுகை பள்ளி வாழ்க்கை, சென்னை கல்லூரி வாழ்க்கை எல்லாம் பரவால தான். நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. ஆனா, கல்லூரி வாழ்க்கைய விட்டு வெளிய வந்தப்புறம், வேலைக்குப் போக ஆரம்பிச்ச நாட்கள்ல தான் சென்னை மனிதர்கள புரிஞ்சுக்க முடிஞ்சு மண்டை காஞ்சிடுச்சு. ஒரு முறை வேலை பார்த்த இடத்துல ஒரு பொண்ணு சொன்னா – “சென்னைக்கு கீழ இருந்து வர்ற பசங்க எல்லாம் நல்லா helpingஆ இருக்கீங்க”-ன்னு. அவள் உட்பட தொடர்பு வட்டத்த விட்டு விலகிக்கிட்ட உடனே, நம்ம தேவை இல்லை அப்படின்ன உடன, டக்குன்னு தொடர்ப வெட்டிக்கிற இன்னும் இரண்டு மூணு பொண்ணுங்களயாவது சந்திச்சிருப்பேன்.

பள்ளிக் காலம் தொடங்கி எட்டாண்டு காலம் பிரியாத தோழி ஒருத்தி. உயிர்த்தோழி என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மறக்க முடியாத மாசில்லா மதி மாதிரி ஒரு நட்பு. அவளுக்கு மாப்பிளை பார்க்கத் தொடங்கினப்ப கொஞ்சம் கொஞ்சமா விலகத் தொடங்கினா. “என் மேல இவ்வளவு பாசம் வைக்காத. நாளைக்கு வர்ற புருஷன் எப்படியோ, நாம தொடர்புல இல்லாட்டி, நீ கஷ்டப்படக்கூடாது, நானும் கஷ்டப்படுவேன். இப்பவே பழகிக்கோ. நான் ஒன்னும் specialஆ பழகல. நீ என் மேல பாசம் வைச்ச மாதிரி யார் மேல வைச்சிருந்தாலும் இப்படித் தான் பழகி இருப்பாங்க”-ன்னு சொல்லுவா. சொல்லி வைச்ச மாதிரி வந்தான் ஒருத்தன். எந்தப் பொண்ணு கூடயும் அவன் பேசுனதில்லையாம். தன் பொண்டாட்டியும் எந்த ஆண் கிட்டயும் பேசியிருக்கக் கூடாதுன்னா எதிர்ப்பார்க்கிறானாம். என்ன சொல்லி விளக்க முடியும் தோழியால்? அவள் விலகிச் சென்றாளா, இல்லை நிலைமை தெரிஞ்சிருந்தா நானே விலகி இருப்பேனா? இப்ப, எங்க இருக்கான்னு தெரியாது. இன்னும் சில நாளில் அவளுக்குப் பிறந்த நாள். முதலும் கடைசியுமான பிரிவு. ஆனால், முதலாவதும் கடைசியுமாய் இல்லாமல் என்றும் இருக்கும் வலி.

ஆனா, ஒன்னு புரியல. அன்பு, நட்பு, காதல், துணை – இதில் எதைத் தேடுறோம் நாம? எதுக்காக எதை விட்டுக் கொடுக்கிறோம்? இல்ல, எதுக்கு முன்ன எது வேண்டாததாகிப் போகுது? எது விட்டுக்கொடுக்க முடியாததா இருக்குது? பிரச்சினை வந்தா எத விலக்க வேண்டியதா இருக்குது? எல்லாமும் ஒன்னா ஒன்னுக்குள்ள எல்லாமும் இருக்க முடியாதா?

“நான் ஒன்னும் specialஆ பழகல. நீ என் மேல பாசம் வைச்ச மாதிரி யார் மேல வைச்சிருந்தாலும் இப்படித் தான் பழகி இருப்பாங்க”

தோழி சொன்ன சொற்கள் மனசுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. உண்மை தான்.

ஒரு திரைப்படத்தில் காதல் தோல்வியால் துவண்டிருக்கும் நாயகனிடம் அவனோட நலம்விரும்பி சொல்றார் –

“நேற்று இங்க காற்றாலை இருந்துச்சு. இன்னிக்கு இல்ல. ஆனா, காற்று என்னிக்கும் இருக்கும்”.

காதல், நட்பு, பாசம் எல்லாம் அன்பின் வெவ்வேறு வடிவங்கள் தான? காற்று மாதிரியா அன்பு? காற்றாலை போல் ஆட்கள் இருக்கப்ப அன்பின் வெளிப்பாடு கண்ணுக்கு மகிழ்ச்சியா தெரியுது. ஆனா, ஆட்கள் இல்லாதப்பயும் அன்பு என்னைக்கும் இருந்துக்கிட்டே தான் இருக்குது. இன்னொரு நாள், காற்றாலையோ காற்றாடியோடு ஓடுற சிறுவனோ தென்படலாம். காற்றில்லாதப்ப காற்றாலை நிற்கலாம். ஆனால், காற்றாலை இல்லை என்பற்காக காற்று நின்று விடுவதில்லை. அன்பு அதன் போக்கில் இருந்து கொண்டே இருக்கிறது. உண்மையான அன்புன்னு சொல்லலாம். ஆனா, அது என்ன உண்மையான அன்பு? உண்மை இல்லாம அன்பு ஏது?

அம்மா, அப்பா, உடன்பிறந்தவர், கணவன் / மனைவி-ன்னு பாசம் காட்ட பலர் இருந்தாலும் எல்லாம் ஒரு விலையோட இருக்கு. விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கு. அன்புக்காக விட்டுக் கொடுக்கிறோமா? இல்லை, விட்டுக் கொடுக்கிறதால அன்பு தொடருதா? எது சரி?

ஆனா, எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம, மழை மாதிரி பொழியுற அன்புக்கு எல்லாருமே ஏங்குறோம்ங்கிறது உண்மை. ஆனா, அப்படி அன்பு தென்படும்போது கூட, அத ஏத்துக்க கூடத் தயங்குறோம். ஒரு வேளை பின்னாடி அது இல்லாமப் போயிடுச்சுன்னா? பிறவியிலேயே குருடா இருந்துடுற மாதிரி உண்மையான அன்பையே சுவைக்காம, உரிமையாக்கிக் கொள்ள நினைச்சுக்கத் துணியாம இருக்கப் பார்க்கிறோம்.

சின்ன வயசுல தங்கச்சி மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் சொன்னா – “அண்ணா, love me little but for longer.” எவ்வளவு வளர்ந்தாலும் நான் மறக்காத சொற்களும் என் தங்கச்சி சொன்னதுலயே ரொம்பப் பிடிச்சதும் இது தான். அப்ப அவளுக்கு 13 வயசு தான் இருந்திருக்கும். ஆனா, இதில உள்ள உண்மை ரொம்பப் பெரிசு. இந்த முறை ஊருக்குப் போனப்ப ஒரு பேருந்துப் பயணத்துல இரவு முழுக்க தோள்ல மடியில சாச்சு, தலை கோதி விட்டுப் படுக்க வைச்சிருந்தேன். எல்லா தோழிங்க கிட்டயும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருப்பா போல். நல்ல அதிசய அண்ணன் தங்கச்சி தான்னு சொன்னாங்களாம் ! மடில படுக்கிறது, தோள்ல சாயுறதுன்னு காதலன்-காதலி தாண்டி எல்லா உறவிலயும் எதிர்ப்பார்ப்பு இருக்கு. நாம உடல் வளர்ந்தவுடன மனசையும் வளரச்சொல்லிடுறோம். ஆயிரம் சொற்கள், சொல்லாதத ஒரு தொடுதல் புரிய வைச்சிடும்னு தான் நம்புறேன்.

“வளர்ந்தா, வெளிநாடு போனா உன் தம்பி மாறிடுவான் பாரு”-ன்னு சொல்றவங்க கிட்ட “என் தம்பி அப்படி இல்லை”-ன்னு பல ஆண்டா பெருமையா சொல்லிக்கிட்டே இருக்காங்க அக்கா. “கலியாணம் ஆனா மாறிடுவான்”-ன்னு இன்னும் சில பேர். அவங்க அவங்க அனுபவங்கள். அவங்க அவங்க அனுமானங்கள். சில பேருக்கு தான கொடுத்து வைச்சிருக்கு.

நேற்று இருந்த அன்பு போல் இன்னிக்கு இருக்குதா, நாளைக்கு இருக்குமான்னு யோசிச்சு தான் பல பேர் வாழ்க்கை ஓடுது. இவன் இன்னிக்கு இருப்பான்/ள், நாளைக்குப் போப் போறவன்/ள் தானேன்னு கணக்குப் பார்த்து ஓடுற உலகத்துல அன்புன்னா என்ன-ங்கிற கேள்வி தவிர்க்க முடியாதது.

“The Alchemist” புதினத்துல பிடிச்ச மாதிரி ஒரு வரி வரும். தலைவன், தலைவி கிட்ட தான் ஏன் காதலிக்கிறேன்னு விளக்க முற்படுவான். அப்ப தலைவி சொல்வா – “Don’t say anything. One is loved because one is loved. No reason is needed for loving”

ஒரு காரணத்துக்காக ஒருத்தர அன்பு செஞ்சா அந்த காரணத்தைத் தான் விரும்புறோம், இல்லையா? அந்தக் காரணம் இல்லாமப் போகும்போது அன்பும் இல்லாமப் போகுது.

ஒரு நாள் அப்பா கிட்ட ஏதோ ஒரு விசயமா பேசும் போது, இயற்கை படத்தில் வர்ற ஒரு பேச்சைக் குறிப்பிட்டார் – ”அன்புக்கு அன்பு தான் காரணம்”.

இது மாதிரி ஒரு சில நல்ல பேச்சுகள் அப்பப்ப தமிழ்ப் படங்கள்ளயும் வந்து போகுது. மொழி படமுன்னோட்டத்துல வர்ற வாசகம் – “அன்புக்கு மொழி முக்கியம் இல்ல. அன்பு தான் முக்கியம்.”

இது போல மனசுல நிக்கிற இன்னும் சில பொன்மொழிகள் –

– where there is self, there is no love. where there is love, there is no self.

தீயில கருகுற பிள்ளைக் காக்கப் போய் தானும் கருகின தாய்கள் எத்தனை எத்தனை பேர்? egoவால் அன்பான வாழ்க்கையை கெடுத்துக்கிறவங்க எத்தனை பேர்? அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையோர் என்பும் உரியது பிறர்க்குங்கிற குறள் வரில இந்த no self கருத்து வருது தான?

ஒரு கல்லூரித் தோழி ஒரு முறை சொன்னது –

– if you love a bird, let it free. if it comes back to you, it is yours. if it doesn’t come back, it never was yours.

உண்மை தான். ஆனா, நம்மதுன்னு நினைச்ச அன்பை, சுதந்திரமா விட்டுத் திரும்ப நம்ம கிட்ட வராதப்ப அன்பு பொய்னு நினைக்கிறதா இல்ல அன்பா இருந்தவங்க செத்துட்டாங்கன்னு நினைக்கிறதா? இல்லை, அன்பு பொய்னு உறுதி ஆனாலும், சரி தப்பிச்சோம்னு நினைக்கிறதா இல்லை செலவழித்த காலத்தை, அன்பை நினைத்து வருந்துவதா? திரும்பத் தன்னிடம் வருமா என்று தெரியாததாலேயே, பயப்படுவதாலேயே அன்புக்குரியவர்களை ஒரு கூண்டுக்குள் அடைச்சு வச்சிருக்கவங்க எத்தனை எத்தனை பேர்? ஒவ்வொருவரோட அப்பா, கணவன், காதலி, காதலன்னு எத்தனை பேர்? உன் வானத்தைக் கண்டு வா-ன்னு கூண்டைத் திறந்து விடுற தெளிவு, தூய்மை, பக்குவம், துணிவைத் தர்றது எது?

“Zahir” புதினத்துல எனக்குப் பிடிச்ச ஒரு கருத்து வரும். அதாவது, வெற்றிக்கு முன்படில இருக்க சில பேர் எங்க அந்த வெற்றியை நோக்கிய பயணமே அன்புக்குரியவங்கள தன் கிட்ட இருந்து பிரிச்சுடுமோன்னு பயப்படுறாங்களாம். ஆனா, நாம் நாமாக இருக்கும்போது நம்மள நேசிக்க முடியாதவங்க உண்மையில் நம்மள நேசிக்கிறது இல்லை தான? அவங்களுக்கு விருப்பமான ஒரு பிம்பத்த நம்ம மேல சாற்றி விரும்புறாங்க. அது இருந்தா என்ன? போனா என்ன? அப்புறம், அன்பில வர்ற பிரச்சினையே நாம எதிர்ப்பார்த்த மாதிரி யாரும் நம்மள விரும்புறது இல்லைங்கிற ஏமாற்றம், வருத்தம் தான். அன்பை அதன் போக்குலயே ஏத்துக்கிற பக்குவம் வரும்போது தான் உண்மையான சந்தோஷம் கிடைக்குது.

தன் காதலன் தான் விரும்புற மாதிரி romanticஆ நேசிக்கிறதில்லை, கேட்டா- சொன்னாத் தான் தெரியுமா அன்பு-ன்னு சொல்றதா சொல்லி வருத்தப்படுவா என் தங்கச்சி. அவன் கிட்ட பேசாம இருந்து சண்டைப் போடப் போறதா சொல்லிட்டு அப்புறம் மனசு கேக்காம இவளே பேசிடுவா. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆனா, உசுரோட நல்லா மகிழ்ச்சியா இருக்கும்போது அன்பை வெளிப்படையா காமிக்காம செத்த பிறகு அழுவுற ஆட்கள் நிறைய நம்ம ஊர்ல. அன்பை வெளிப்படையா காட்டாம மறைமுகமா காட்டுறதும் நம்ம பண்பாட்டுல இருக்கு. ஆனா, இங்க வெளிநாடு வந்து பல பண்பாடு பார்த்தபிறகு வெளிப்படையா அன்பைக் காட்டுறது கூட நல்லாத் தான் இருக்கும்போலன்னு தோணுது. ஒரு நாள், இங்க ஒரு பையன் தன் காதலியைத் தோள் மேல வைச்சுத் தூக்கிட்டுப் போனான். அந்தப் பொண்ணு முகத்துல அவ்வளவு மகிழ்ச்சி. இன்னும் நம்ம ஊர்ல பொண்டாட்டி கையப் பிடிச்சு நடந்தா பொண்டுவ சட்டியோ-ன்னு வீராப்பு பார்க்குறவங்க நிறைய பேர். வசூல் ராசா mbbs படத்துல வந்த மாதிரி கட்டிப்பிடிப் பண்பாடு வந்தாலும் நல்லாத் தான் இருக்கும். ஒரு முத்தம், ஒரு தொடுதல் நிறைய விசயங்களைச் சொல்ல முடியும். அநியாயமா அத குழந்தைகளுக்கும் மறைவில் மனைவிக்குமானதா மட்டும் ஒதுக்கி வைச்சிருக்கோம்.

இரயில் வண்டியில் ஏற்றி விட வந்து வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைப்பது போல் அம்மா, அப்பா, அக்கா, தங்கை என்று தொடங்கி ஓடுகிறது வாழ்க்கை. ஒவ்வொருவரின் பயணமும் ஒவ்வொரு திசையில் வெவ்வேறு வண்டிகளில். நம் வண்டியில் நண்பர்கள், சில பெயர் தெரியா உறவுகள், பாசங்கள் என்று ஓடுகிறது. இறங்கும் இடத்தில் வரவேற்க, கூட வாழ என்று எதிர்காலத்தில் இன்னும் சில புது உறவுகள் வரும். தொடங்குவதற்கும் முடிவதற்கும் இடையிலான நீண்ட பயணங்களில் ஆளில்லா காலங்களில் பழசை நினைத்தும் புதுசை எதிர்ப்பார்த்தும் அசை போடுவதும் ஆசைப் படுவதுமாய் கழியும் சில இரவுகள்.

அன்பை ஈரம்னும் சொல்றதுண்டு. இந்த ஈரம் தான் மனசை நனைச்சு உசிரை வாழ வைக்குது. அன்புன்னா என்னன்னு புரிஞ்சுக்கிட்டிருக்கனோ இல்லையோ, அத உணர்ந்திருக்கிற வேளைகள் நிறையவே உண்டு. அது தான முக்கியம்னு நினைக்கிறேன். நம்மள நேசிக்க ஒருத்தரா இல்ல நாம நேசிக்க ஒருவரா-ங்கிற எதிர்ப்பார்ப்புத் தெளிவும் இல்லை. சில புறக்கணிப்புகள், சில ஏமாற்றங்கள், சில பிரிவுகள், சில என்றும் இருக்கும் உறவுகள்னு காயமும் ஈரமுமா இருக்குது. வறண்டு போகாத மனசில் காயாத ஈரத்தால் தான் ஆறாத காயங்களும் இருக்குதோன்னு தோணுது.

போகும் வழி எல்லாம் நதியாப் பெருகி கரை புரண்டோடனும் அன்பு. ஈரம் வேணுங்கிற மண்ணு உறிஞ்சிக்கட்டும். ஆத்து மண்ணு உறிஞ்சி ஆத்துத் தண்ணி வத்தப் போறது இல்ல. உறிஞ்சாலும் ஊத்தா இன்னும் சுவையா ஊறத் தான் போகுது. ஏற்கனவே ஈரம் உள்ள மண்ணுக்குத் தேவைப்படாமப் போலாம். தேங்கித் தேம்பி அழாம என்றும் போல நதி ஓடிக்கிட்டிருக்கணும். ஈரம் கொடுத்த ஒவ்வொரு செடியையும் திரும்ப வந்து பார்க்கப் போறதில்லை நதி. ஆனா, நதி வந்தத் தடம் எல்லாம் இருக்க பச்சை தான் சாட்சி. இது என் இடம், இது என் உரிமைன்னு ஒரு நாளும் தேங்கி நிற்கிறதில்லை நதி. தேங்கி நிற்கும் நதி, குளமாவோ குட்டையாவோ சின்னதாகி அழகு குறைந்து ஆழம் குறைந்து ஒரு நிலையில் வற்றியே போய் விடுகிறது.

நிற்காமல் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருப்பது முக்கியம் போல் இருக்கிறது. பசுஞ்சோலை வரலாம். பாலைவனம் வரலாம். கடல் காணும் வரை ஓடிக் கொண்டே இருக்கணும் போல..

நதி கடலாகும், கடல் மழையாகும், மழை நதியாகும்…

நதியை நனைக்கவும் ஒரு நாள் வரும்…

பெரு மழையோ பனியோ சாரலோ !

அதுவரை,

பெருகி ஓடிக்கிட்டே இருக்கணும்..

இப்படியே அன்பா என்னைக்கும்…

ஒரு நதி போல..


Comments

18 responses to “ஒரு நதி போல…”

  1. Inventor suriya Avatar
    Inventor suriya

    அன்புன்னா என்ன?
    Buy some chocolates give to Black communities small school kids Don’t for get to see golden smile
    In this time something happen in your mind &body that is …..அன்பு
    In my knowledge I can not explain that but you fell it..

  2. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ரவி.

  3. சூரியா – குறிப்பா, தனிப்பட்ட உறவுகள்ல உள்ள அன்பைப் பத்தி தான் எழுதி இருக்கேன். நீங்க சொல்றது போல் ஆப்பிரிக்கப் பிள்ளைகளுடன் பழக்கம் இல்லைன்னாலும் பல குழந்தைகளோட பழகி இருக்கேன். அது ஒரு உன்னதமான அனுபவம். என்னைக்கும் நமக்கு உரிமையாகாம இருக்கவங்கள நேசிக்கிறது ஒரு அருமையான உணர்வு. அதப் பத்தி இன்னொரு நாள் எழுதப் பார்க்கிறேன்.

    சுதர்சன், பாலா – நன்றி.

  4. ரவி! என்ன சொல்லுறதுன்னேதெரியலை. நானே இந்த பதிவை எழுதின மாதிரி இருக்கு. 🙂

    நீங்க இங்கே சொல்லியிருக்கிற இத்தனையும், இதுக்கு மேலே நிறையவும் நான் யோசிப்பேன். அதை எழுத வேண்டும் என்றும் நினைப்பேன். ஆனா எழுதப்போனா, நீங்க இங்க எழுதி இருக்கிற மாதிரி இத்தனை தெளிவா என்னாலே எழுத முடியுமான்னு தெரியலை.

    இந்த பதிவு பல பழைய நினைவுகளையும் கொண்டு வந்தது. உயிர்த் தோழி (இணை பிரியாத தோழி என்று நினைத்திருந்தவள்) கூட இப்போ முழுமையான தொடர்பில் இல்லை என்பது வருத்தமான விடயம். அது என்னது உயிர்த் தோழி என்ற கேள்வியும் என்னக்குள் வந்திருக்கு. சிலவற்றை உணர முடியுமே தவிர, மத்தவங்களுக்கு சொல்லுறது முடியாமே இருக்கும். தோழிகள், தோழர்கள், உடன் பிறக்காவிட்டாலும் அண்ணா, தம்பி என்று பழகுபவர்கள் இப்படி எல்லோரிடமும் இருக்கும், இருந்த அன்பு பற்றி நிறைய யோசிப்பேன். அது எப்படி தோழர்களையும், அண்ணா, தம்பியையும் வேறுபடுத்திப் பார்க்கின்றோம் என்ற கேள்வி கூட எழலாம். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல், சிலவற்றை உணர்ந்துகொள்ள மட்டுமே முடியும். அந்த அனுபவம் ஏற்படாதவரை புரிந்து கொள்வது கஷ்டம்தான்.

  5. கலை – மேல inventor suriya சொன்னது, நீங்க சொன்னதுன்னு உறவுகள் தாண்டி இன்னும் பலரிடம், முன்பின் தெரியாதவர்களிடம் என்று அன்பு குறித்து இன்னும் எழுத நிறைய இருக்கு. இன்னொரு நாள் தோணும் போது முயல்றேன். இப்பவே இடுகை ரொம்ப பெரிசா போனதால, முழுமையா எழுத முடியாமப் போச்சு

  6. Ravi,
    Very well written and I can align myself in many places/situations. I remember several close friends whom I don’t know anything about anymore…
    Having gone through a similar path myself, I can say for sure there are lot more experiences that will come by your way as years pass by… I only wish the best of them for you.

    Your post is a bit long though. Could use some editing. Still, flows like a river! (ippadi ellaam ezutharatha vittuttu En mokkai pOttuttu irukkeenga?)

  7. செல்வராஜ் – பாராட்டுக்கு நன்றி. குடும்பம், நட்பு, உறவு தாண்டி இப்ப தான் வெளியுலக வாழ்க்கைல அடி எடுத்து வைக்கிறேன். அதுக்குள்ளயே அடி மேல அடி விழுகுது 🙁 நீங்க வாழ்த்துன மாதிரி இனி வரும் அனுபவங்கள் நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

    கொஞ்சம் நீளமான பதிவுங்கிறது நான் உணர்ந்தது தான். ஆனா, thats how the thoughts flew and i wanted to be honest and uncompromising. அதான் edit பண்ணாம அப்படியே போட்டுட்டேன்.

    எது எது மொக்கைப் பதிவுன்னு சுட்டிக்காட்டினீங்கன்னா திருத்திக்குவேன் 🙂 தவிர, இது போன்ற இடுகைகளை எழுதுவது ரொம்ப நேரம் எடுப்பதும் அயர்வளிப்பதும் பல தனிப்பட்ட விசயங்களைப் பொதுவில் வைப்பதாகவும் இருக்கிறது. அதனால், எல்லா இடுகைகளையும் இது போல் எழுத முடிவதில்லை. இயன்ற வரை பயனுள்ள, நான் அறிந்ததை தெரியப்படுத்தும் பதிவுகளைத் தருகிறேன்.

  8. ரவி,
    “கும்மி, மொக்கைப் பதிவு போடுவது எப்படி?
    ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி? ”

    இதையெல்லாம் எந்த வகைன்னு சேத்தச் சொல்றீங்க? 🙂
    உண்மையச் சொன்னா, இதுங்கள நான் முழுசா படிக்கலே. சிலசமயம் இப்படியான லேசான பதிவுகளும் அவசியமாத் தான் இருக்கும் (குறஞ்சபட்சம் எழுதறவருக்கு).

    இந்தப் பதிவு உண்டாக்குற அயர்வு எனக்குப் புரியுது. உண்மையில சில விஷயங்கள் எல்லாம் எப்படி இவ்வளவு வெளிப்படயாச் சொல்ல முடியுதுன்னு ஆச்சரியம் வந்துச்சு. எனக்கும் ஏற்பட்ட அனுபவங்கள, வலிகள வெளிப்படையா எழுத முடியும்னு தோணல (இந்தக் கருத்த எழுதறதுக்கே தயக்கமாத் தான் இருக்கு 🙂 ) . அந்த வகையில உங்களுக்கு ஒரு பாராட்டு.

    ரவிங்கற பேர் பத்தி எழுதி இருந்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது… (என்னைப் பத்தி/சூடம்/சாம்பிராணி-யில் 🙂 )

  9. செல்வராஜ் – விகடன் குறித்த பதிவுக்கு 6.7 ஆண்டு வாசக அனுபவம், மொக்கை, கும்மி குறித்த பதிவுக்கு 2 ஆண்டு பதிவுலக அனுபவம், ஆய்வு என்று கடின உழைப்பு இருக்கிறது 😉 இவற்றின் மீதான பார்வையை பின்நவீனத்துவ நகை விமர்சன முறையில் 😉 சொல்ல நினைத்தேன். அதனால், இவற்றை மொக்கை என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன் 😉 பொதுவாக, சுவை, பயன, கருத்து எதுவும் இல்லாமல் ஆட்களை இழுப்பதற்காகப் போடும் பதிவுகளைத் தான் மொக்கைனு நினைக்கிறேன் நான்.

    அந்தரங்க விசயத்தை எளியவர்கள் பொதுவில் சொன்னால் வெகுளித்தனம் / முட்டாள்த்தனம் ஆகி விடு்கிறது. பெரிய ஆட்கள் சொன்னால் இலக்கியம், வரலாறு (சத்திய சோதனை!) ஆகி விடுகிறது. இடைப்பட்ட ஆட்கள் பதிவு எழுத வேண்டியது தான் 🙂

  10. இன்றுதான் இந்தப் பதிவைப் படித்தேன்.கலை சொன்னது போல பல விடயங்கள் ஒத்துப்போகின்றது.

    ஒரு நேரத்தில நாங்கள் உயிரா நினைத்தவர்கள் நம்மைப் பிரிவதும் எங்களை உயிரா நினைத்தவர்களைப் பிரிவதும் முதலில் கஸ்டமாக இருந்தாலும் அந்த இடத்தை இன்னொருவர் நிரப்பும்போது அந்த வலி வேதனை காணமல் போய் விடுகிறது அல்லது எப்போதாவது சில ஞாபகங்கள் வந்து போகின்றன.இதை நான் பல தடவை எண்ணி வியந்திருக்கிறேன்.நமக்குப் பிடித்த சிலர் சில நேரம் சொல்லியும் சில நேரம் சொல்லாமலும் பிரிந்து செல்லும்போது இவர்களைப் பிரிந்து எப்படி வாழப்போகிறோம் என்று எண்ணுவன் ஆனால் அது நாளடைவில மறந்துபோய்விடும்.

    தவிர இந்த நெருங்கிய உறவுகளால் ஏற்படும் மனஸ்தாபங்களைப்பற்றியும் நான் அடிக்கடி யோசித்துப் பார்ப்பதுண்டு நன்றாகப் பராமரிக்கவும் தெரியும் அவர்களுக்குப் பின்னர் நன்றாக வேதனைப்படுத்தவும் தெரியும்.

    அப்புறம் உங்கள் தங்கை நல்ல அதிஸ்டசாலிதான்.

  11. // அந்த இடத்தை இன்னொருவர் நிரப்பும்போது அந்த வலி வேதனை காணமல் போய் விடுகிறது //

    உண்மை தான். ஆனால், இந்ந மாற்று அன்பு கிடைக்கும் வரையான இடைவெளியில் உள்ள துயர்? தவிர, எல்லா உறவுகள், இழப்புகளுக்கும் முழு மாற்று கிடைக்கும் என்று சொல்லி விட முடியாது. ஒன்றுமே இல்லாததற்கு இது பரவாயில்லை என்ற வகையில் பல நேரங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

    நிறைய பேர் தங்கச்சிய கண்ணு வைச்சுக்கிட்டே இருக்காங்க 🙂 சுத்திப் போடணும் 🙂

  12. ரவிஷங்கர்,

    இத்தனை நாள் எப்படி இந்த பதிவை விட்டு வெச்சிருந்தேன்னு தெரியலை. எப்படி பாராட்டறதுன்னே தெரியலை.

    //தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. அன்னிக்கு நல்லா புரிஞ்சது.//

    //” செஞ்சு என்ன புண்ணியம். அது தான் சொல்லிக் காமிச்சிட்டீங்கள்ள”-ன்னு. அன்னைக்கு சுள்ளுன்னு ஒன்னு உறைச்சு மாதிரி இருந்துச்சு..நம்ம எத்தனை நாள் இப்படி எத்தனை பேரை சொல்லிக் காமிக்கிறோம்னு.//

    //மனசுல வஞ்சத்த வச்சுக்கிட்டு அடுத்த சண்டைக்கு காத்திருப்பாங்க சில பேர். //

    //“ஏன்ப்பா இப்படி பண்ணுறீங்க”ன்னு கேட்டா, “அப்புறம் நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்”பார்.//

    //அன்புக்காக விட்டுக் கொடுக்கிறோமா? இல்லை, விட்டுக் கொடுக்கிறதால அன்பு தொடருதா? எது சரி?//

    //மடில படுக்கிறது, தோள்ல சாயுறதுன்னு காதலன்-காதலி தாண்டி எல்லா உறவிலயும் எதிர்ப்பார்ப்பு இருக்கும் போல. நாம உடல் வளர்ந்தவுடன மனசையும் வளரச்சொல்லிடுறோம். ஆயிரம் வார்த்தைகள், சொல்லாதத ஒரு தொடுதல் புரிய வைச்சிடும்னு தான் நம்புறேன்.//

    //உன் வானத்தைக் கண்டு வா-ன்னு கூண்டைத் திறந்து விடுற தெளிவு, தூய்மை, பக்குவம், துணிவைத் தர்றது எது?//

    //ஆனா, உசுரோட நல்லா சந்தோஷமா இருக்கும்போது அன்பை வெளிப்படையா காமிக்காம செத்த பிறகு அழுவுற ஆட்கள் நிறைய நம்ம ஊர்ல. அன்பை வெளிப்படையா காட்டாம subtleஆ காட்டுறதும் நம்ம பண்பாட்டுல இருக்கு. //

    //அன்பை ஈரம்னும் சொல்றதுண்டு. இந்த ஈரம் தான் மனசை நனைச்சு உசிரை வாழ வைக்குது. அன்புன்னா என்னன்னு புரிஞ்சுக்கிட்டிருக்கனோ இல்லையோ, அத உணர்ந்திருக்கிற தருணங்கள் நிறையவே உண்டு.//

    //நதி கடலாகும், கடல் மழையாகும், மழை நதியாகும்…

    நதியை நனைக்கவும் ஒரு நாள் வரும்…

    பெரு மழையோ பனியோ சாரலோ !

    அதுவரை,

    பெருகி ஓடிக்கிட்டே இருக்கணும்..

    இப்படியே அன்பா என்னைக்கும்…

    ஒரு நதி போல..//

    //எந்தப் பொண்ணு கூடயும் அவன் பேசுனதில்லையாம். தன் பொண்டாட்டியும் எந்த ஆண் கிட்டயும் பேசியிருக்கக் கூடாதுன்னா எதிர்ப்பார்க்கிறானாம். என்ன சொல்லி விளக்க முடியும் தோழியால்? அவள் விலகிச் சென்றாளா, இல்லை நிலைமை தெரிஞ்சிருந்தா நானே விலகி இருப்பேனா? இப்ப, எங்க இருக்கான்னு தெரியாது. இன்னும் சில நாளில் அவளுக்குப் பிறந்த நாள். முதலும் கடைசியுமான பிரிவு. ஆனால், முதலாவதும் கடைசியுமாய் இல்லாமல் என்றும் இருக்கும் வலி.//

    எப்படி பாராட்டறதுன்னே தெரியலை. இப்படி பட்டவர்த்தனமாய் வேறு எவராலும் எழுதிட முடியுமான்னு தெரியலை.

    அன்பின் பரிமாணங்களை அழகாய் விவரித்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போன்ற பல உணர்வுகளை நான் உட்பட பலர் இங்கு கடந்து வந்துள்ளனர்.

    என்னென்னவோ சொல்ல ஆசைதான். பதிவின் தாக்கம் என்னை யோசிக்க விட மறுக்கிறது. Hats off to you.

  13. Karthikeyan Avatar
    Karthikeyan

    hi..ravi..
    Really superb…chancea illa..unmaiya apdiyae solirukiga…

    Really hands off…:)

  14. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நன்றி, கார்த்திகேயன். ஆனால், கொஞ்சம் கசப்பான உண்மை 🙁

  15. mahatmamani Avatar
    mahatmamani

    அன்பின் பரிமாணங்களை அழகாய் விவரித்துள்ளீர்கள்

  16. அருமை நண்பா

  17. ரவி,

    படித்து முடித்து நீண்ட நேரம் ஆனது என்ன எழுதலாம் என யோசிக்க 🙂 எதிர்பார்ப்பில்லாத அன்பினை அனுபவித்தும் அதனை எப்படி வெளிக்காட்டுவது அல்லது அதனைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததினால் ஏற்படும் குழப்பங்கள் தான் பலரும் நடைமுறையில் சந்திப்பது.

    நல்ல அனுபவங்களையே பெற்று தொடரட்டும் நதியின் பயணம் !!! 🙂

  18. arputam….