என்னைப் பத்தி

என் பேரு ரவிசங்கர். நிறைய பேரு என்னை ரவின்னு கூப்பிடுவாங்க. அத தான் நானும் விரும்புறேன். ரவிசங்கர்னு கூப்பிட்டாலும் சரி தான். நீங்க முதல்ல என்ன எப்படி கூப்பிடுறீங்களோ அப்படி தான் கடைசி வரைக்கும் கூப்பிடனும்னு விரும்புவேன். ரவிசங்கர்னு கூப்பிட்டவங்க ரவின்னு கூப்பிட்டாலோ ரவின்னு கூப்பிடவங்க ரவிசங்கர்னு மாத்தி கூப்பிட்டாலோ எனக்கு டக்குனு உறுத்தும். பிடிக்காது. எங்க அம்மா ஊர்ல ஒரு அமத்தா மட்டும் என்ன சங்கர்னு கூப்பிடுவாங்க. அப்படி கூப்பிடுறது சுத்தமா பிடிக்காது. கையெழுத்து தமிழ்ல தான் போடுவேன். அதுல மட்டும் அ. இரவிசங்கர்னு இருக்கும். பத்தாம் வகுப்புல இருந்து தமிழ்ல கையெழுத்து போட ஆரம்பிச்சு அதுவே நிலைச்சுடுச்சு. எங்க தமிழ் ஐயா சொல்வாரு – “தமிழனே தமிழ்ல கையெழுத்து போடாட்டி, வேற யாரு தமிழ்ல கையெழுத்து போடுவான்”- னு? இந்த சிந்தனை பிடிச்சுப் போய் தமிழ்ல கையெழுத்துப் போட ஆரம்பிச்சேன்.  

என் நண்பர்கள் பலருக்கு என் பேர் பிடிக்கும். எனக்கும் ரொம்ப பிடிக்கும். எங்க அப்பா கூட சின்னச்சின்ன சண்டை வந்தா கூட இந்த பேர எங்க அப்பா வச்ச ஒரே காரணத்துக்காக நான் அவரை மன்னிச்சு விட்டுடுறது உண்டு. ஏன்னா, நான் பொறந்தப்போ எனக்கு கருப்பசாமி-னு பேர் வைக்கணும்னு எங்க அப்பச்சி ரொம்ப பிடிவாதமா இருந்தாங்களாம். எங்க அப்பா தான் சண்டை போட்டு இந்த பேர வைச்சாராம். எங்க அப்பாவுக்கு பெரிய இசை அறிவு ஒன்னும் கிடையாது. ஆனா, சித்தார் மேதை ரவிசங்கர் நினைவா இந்த பேர வைச்சாராம். அவர நினைச்சு வச்சாலும், எனக்கு இசை அறிவு ஒன்னும் கிடையாது. தமிழ் திரையிசைப் பாட்டுக்கு ஏத்த மாதிரி பலகையிலயோ சாப்பாட்டுத் தட்டிலோ தாளம் மட்டும் நல்லா போடுவேன். இப்படி சாப்பிடும் போது தாளம் போட்டா, சோத்துக்கு சிங்கி அடிக்கணும்னு எங்க அம்மா திட்டுவாங்க. ரவிசங்கர்னு பேர் வைச்சுட்டு இது கூட இல்லாட்டி எப்படினு எங்க அப்பா supportக்கு வருவார். நல்ல அப்பா. பல சமயம் பக்கத்தில் யார் இருக்காங்கன்கிறத மறந்து மட்டமான குரல்ல பாட்டு வரிகள கத்துவேன். எல்லா பாட்டும் நாலு வரிக்கு மேல பாடத் தெரியாது. தன்னந்தனியா நீண்ட பாதைகள்ல மிதிவண்டி ஓட்டிப் போகும்போது இப்படி பாடுறது இனிமையா இருக்கும். 

பல நாடுகளுக்கும் போகும் போது இந்த பேர தெரிஞ்சவங்க இருக்கிறது ஒரு வசதி. பரிமேலழகர்-னு எங்க அப்பச்சி பேர் வைச்சிருந்தா அந்த பேர வெள்ளைக்காரனுங்க உச்சரிக்கிறதுக்குள்ள கொத்தி கைமா பண்ணிடுவானுங்க. ரவி-ங்கிற பேரையே உச்சரிக்கத் தெரியாம ராவி, ராபி-னு சொல்றவங்களும் இருக்காங்க. “இந்தப் பேர்ல எனக்கு இன்னொரு ரவிசங்கர் தெரியுமே”-ன்னு சில பேர் சித்தார் மேதைய பத்தி சொல்லுவாங்க. அப்ப எனக்குள்ள சிரிச்சுக்குவேன் நான். அவர் தான்யா முதன்மையான ரவிசங்கர். நாங்க எல்லாம் சும்மா தான்னு. 

ஆனா, இந்த பேர்ல எனக்கு என்ன வருத்தம்னா, ஒருவேளை நாம பிற்காலத்துல எவ்வளவு தான் பெரிய ஆனாலும், நம்ம பேர்ல ஏற்கனவே நிறைய பேர் இருக்காங்க. நம்ம பேரு தனிச்சு நிக்காது. சித்தார் மேதை பத்தாதுன்னு, இப்ப சிறீ சிறீ ரவிசங்கர்னு வேற ஒருத்தர் இருக்கார். அப்புறம் எங்க போனாலும் ஒரு ரவி இருக்கான். ரவின்னு இன்னொருத்தன கூப்பிட்டாலும் நாம திரும்பிப் பார்க்க வேண்டி இருக்கு. ரவி-னு பேர சொன்னா, நம்ம முழு பெயர ரவிகுமார், ரவிச்சந்திரன்னு அவங்களா நினைச்சுக்கிறாங்க. மின்னஞ்சல் முகவரி, இணையத்தள முகவரி எது பதிவு செய்யப் போனாலும் நமக்கு முன்னால நம்ம பேர யாராச்சும் கொத்திக்கிட்டு போயிடுறாங்க. 

மத்தபடி இந்த பேர் பரவால தான். மாத்துற உத்தேசம் இல்ல. 

பிறந்து 8 வயசு வரைக்கும் வளர்ந்தது கோயம்புத்தூர். இப்பவும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். சிறுவாணித் தண்ணி மாதிரி தேவலோகத்துலயும் இருக்குமானு தெரியல. ஆனா, சின்ன வயசுல எங்க அம்மா என்ன சிறுவாணித் தண்ணில குளிப்பாட்டாம விட்டுட்டாங்கனு நினைக்கிறேன். நம்ம உடல் நிறம் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. அப்புறம் இரண்டு ஆண்டு திருச்சியில. 10 வயசுல இருந்து 15 வயசு வரைக்கும் புதுக்கோட்டைல உள்ள எங்க சொந்த கிராமத்துல வளர்ந்தேன். கிராமம்னா கிராமம் அப்படி ஒரு கிராமம் . பீடி, வத்திக்குச்சி தவிர எது வாங்கனும்ணாலும் இரண்டு கிலோமீட்டர் நடக்கணும். இப்ப நிலைமை பரவால. உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஒரு கிறித்தவப் பள்ளியில படிச்சேன். என் வாழ்க்கைல முக்கியமான காலகட்டம் அது. அப்ப கிராமத்து வாழ்க்கை பிடிக்காட்டியும் என்ன அறியாம நல்ல விதமா அந்த வாழ்க்கை என்ன செதுக்கி இருக்கு. மேல்நிலைக்கல்வி புதுகை நகரத்துல. அப்புறம், பொறியியல் கல்லூரிப் படிப்பு சென்னை அண்ணா பல்கலைல. படிச்சது B.Tech உயிரித் தொழில்நுட்பம். அப்புறம் கொஞ்ச நாள் அழைப்பகம், IIT-chennaiல வேலை. 2004-2006 காலத்துல சிங்கப்பூர்லயும் செருமனியுலயும் முதுநிலைப்படிப்பு. அப்புறம் இரண்டாண்டு நெதர்லாந்து லைடன் பல்கலைக்கழகத்துல சுற்றுச்சூழல் துறையில வேலை. 

வயசு 26 முடிஞ்சது. பாதி உலகம் பார்த்தாச்சு. இந்த வயசுக்கு இதுவே சாதனை-னு சொல்றாங்க. எனக்கு அப்படி ஒன்னும் தோணலை. பறவைங்க கூட தான் எல்லா நாட்டுக்கும் போகுது. அது சாதனையா என்ன? வேணா, இத ஒரு பிழைப்பு, வாழ்க்கை, தேடல்-னு சொல்லலாம். அப்படி நினைக்கத் தான் நானும் விரும்புறேன். 

சின்ன வயசுல இருந்து நிறைய எழுதனும்ணு ஆசை உண்டு. புனைப்பெயர் எல்லாம் வைச்சு துணுக்குகள் எல்லாம் எழுதிப் போட்டு பதிப்புல வந்திருக்கு. ஆனா, ஏனோ கவிதைங்கள மட்டும் ஒரு பத்திரிக்கையும் வெளியிடல. அப்புறம் எனக்குள்ளேயே ஒரு சலிப்பு வந்து கவிதை எழுதறத விட்டுட்டேன். இப்படி எழுதினா வெளியிடுவாங்களான்னு நினைச்சு எழுதினா, அத எழுதறதுல உள்ள நேர்மை போயிடுதுன்னு நினைக்கிறேன். அதுனால, எழுதியே தீரணும்னு தோணுச்சுன்னா எனக்கு நானே எழுதிப் பார்த்துக்குவேன். நெருங்கின நண்பர்களுக்கு காட்டுறது உண்டு. சில பேர் நல்லா இருக்குதும்பாங்க. சில பேர் “போடா வெண்ண. ஒன்னும் புரியல”-ம்பானுங்க. பழகிப் போயிடுச்சு. பெரும்பாலும் உணர்வுகள் குறித்து தான் எழுதுவேன். வழக்கமா மானே தேனே-னு கிறுக்கி அதை கவிதைனு சொல்றவங்கள கண்டாலே எனக்குப் பிடிக்காது.

இப்ப ஒரு 3 ஆண்டா தமிழ் விக்கிபீடியாவுல நிறைய எழுதுறேன். அதன் துணைத் திட்டங்களிலும் எழுதுறேன். இதுல படைப்புத் திறன் கூடி ஒன்னும் இல்லன்னாலும் நாலு பேருக்கு காலத்துக்கும் பயன்படுற மாதிரி ஏதோ பண்றோம்னு ஒரு மகிழ்ச்சி.  தவிர, விக்கிபீடியாவுல பங்களிக்குற பலரும் நம் கருத்தொத்து, விருப்பு வெறுப்பு இல்லாம தன்னை முன்னிலைப்படுத்தாம தோழமை உணர்வோடும் அர்ப்பணிப்போடும் செயல்படுறது பிடிச்சிருக்கு. 

வேற என்னப் பத்தி சொல்லணும்னா, வெளுத்தது எல்லாம் பால்-னு நினைக்கிற தர்மதுரை, அண்ணாமலை, படிக்காதவன் ரஜினி மாதிரி நம்ம குணம். ஆனா, அதுல ரஜினி சரியா பட இடைவேளை நேரத்துல அடி வாங்கி முழிச்சுக்கிற மாதிரி நமக்கு வாழ்க்கலை அடி மேல அடி வாங்கி, போதுமடா சாமிங்கிற மன நிலைக்கு வந்தாச்சு. என்ன வெகுளி, வெள்ளந்தி-னு ரொம்ப பேர் சொல்லிட்டாங்க. தப்பு. நான் ரொம்ப வெள்ளந்தி. உள்ளதை உள்ள மாதிரி சொல்லிடுற ஆள். இது நிறைய நட்ப பிரச்சினைக்குள்ளாக்கியிருக்கு. நிறைய பொய் நட்ப தோலுரிச்சுக் காட்டி இருக்கு. ஆனா, யோசிச்சுப் பார்த்தா எதையும் பெரிசா இழந்துடலைன்னு தோணுது. இதையும் தாண்டி நம்ம கிட்ட இப்ப இருக்கிறது எல்லாம் உண்மைனு தெரிஞ்சுக்க மகிழ்ச்சி தான். 

நல்லவங்கள பிடிக்கும். கெட்டவங்கள நான் கண்டுக்கிறது இல்ல. ஆனா, நல்லவங்க மாதிரி நடிக்கிறவங்கள மட்டும் பிடிக்கவே பிடிக்காது. எதிரிகள் பிடிக்கும், துரோகிகள் ஆகாது. முதுகுக்குப் பின்னால் பேசினா, அப்படி பேசுறவன மனுசனாவே மதிக்கத் தெரியாது. சின்னத்தனமா யோசிக்கறவன பார்த்தாலே அருவருப்பா இருக்கும். ஒருத்தர பிடிக்காம போயிடுச்சுன்னா, ஒப்புக்கு பேசுறது எனக்கு சுட்டுப்போட்டாலும் வராத கலை. ஆனா, சுலபத்துல ஒருத்தர அப்படி நினைச்சடுறது இல்ல. ego அளவு தேவைக்கும் ரொம்பக் குறைவு தான். 

பணம் செலவழிக்க, அடுத்தவருக்கு உதவ யோசிக்க மாட்டேன். ஆனா, உதவி கேட்கத் தயங்குவேன். அதிகம் உடை வாங்கப் பிடிக்காது. ஆனா, புத்தகங்கள், திரைப்படங்கள், இசைத்தட்டுக்களுக்கு நிறைய செலவு பண்ணுவேன். காசு சேத்து வைக்க இது வரைக்கும் கத்துக்கல. 

சின்ன வயசுல tea master, taxi driver ஆகணும்னு எங்க அப்பா கிட்ட சொல்லித் திட்டு வாங்கினது உண்டு. பெற்றோர் சந்திப்புக்கு வரும்போது எல்லாம் எங்க தமிழ் ஆசிரியர்கள் என்னைத் தமிழ் படிக்க வையுங்கன்னு எங்க அப்பா கிட்ட சொல்லுவாங்க. ஆனா, தெரியாத்தனமா எனக்கு அறிவியல், கணக்குப் பாடங்கள் நல்லா படிக்க வந்ததால அந்த வழிய பிடிச்சு இப்ப என்னையும் அறிவியலாளர் ஆக்கிட்டாங்க. 12ஆம் வகுப்பு படிச்சப்ப , நம்ம ஊர்ல மருத்துவரே இல்லன்னு என்ன மருத்துவப் படிப்பு படிக்க சொன்னாரு எங்க அப்பா. நம்ம ஊர்ல கொத்தனார் கூட தான் இல்ல, அந்த படிப்பு படிக்கவா-னு கேட்டேன். அதுக்கப்புறம், எங்க அப்பா அந்தப் பேச்ச எடுக்கல. அது என்னவோ மருத்துவத் தொழில் மட்டும் நமக்கு பிடிக்கல. சின்ன வயசு முழுக்க நிறைய ஊசிக்குத்து வாங்கி அந்த தொழிலே பிடிக்காம போச்சு. தவிர, தினம் அழுதுக்கிட்டிருவங்கள பார்க்க நம்ம இளகின மனசுக்கு ஆகாதுங்க. 

இப்போதைக்கு என்ன பத்தி இவ்வளவு போதும். பொதுவா நேர்முகத் தேர்வுகளுக்குப் போகும்போது நம்மள பத்திச் சொல்ல சொல்லுவாங்க. நாமளும் என் பேர் ராமசாமி , எங்க அப்பா பேர் முனுசாமி, இங்க பிறந்தேன், அங்க வளர்ந்தேன்-னு ஒப்புக்கு சொல்லி வைப்போம். 

ஆனா, நாம யாருங்கிற கேள்விக்கான பதில் அவ்வளவு சுலபமில்லை. 

அன்புடன்,

ரவி

17 நவம்பர் 2008