தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி

சனவரி 18, 2009 அன்று சென்னையில் கிருபாவின் அலுவலகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு நடந்தது.

நிகழ்ச்சி பற்றி விக்கி பயனர்களின் கருத்துகள்

மா. சிவக்குமாரின் கருத்து

* வடபழனி பகுதி உள்ளூர் அச்சு இதழில் வெளிவந்த செய்தியைப் பார்த்தே பலர் வந்திருந்தார்கள். அடுத்தடுத்த வலைப்பதிவு, விக்கி, இணையப் பட்டறைகளுக்கும் அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலம் கூடுதலாக விளம்பரப்படுத்த வேண்டும்.

* கிருபா, விடுமுறை நாளில் மூடிக் கிடக்கும் தன்னுடைய அலுவலக இடம், கணினிகளையே இதற்குப் பயன்படுத்தினார். இது போல் தமிழ், கணினி, இணைய ஆர்வம் உடைய இன்னும் பலர் முன்வர வேண்டும். பல இடங்களில் சிறிய அளவில் இது போன்று செய்வது ஒருங்கிணைக்க இலகு. செலவற்றது. கூடுதல் விளைவுகளைத் தரும்.

* பிப்ரவரி 1, 2009 அன்று பெங்களூருவில் இதே போன்ற விக்கி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

கையொப்பம்

பத்தாம் வகுப்பு வரை படித்த உறவினர் ஒருவர். ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டு வந்திருந்தார்.

“தமிழ்ல தான் கையெழுத்து போட்டேன். படிக்காத முட்டாள்னு நினைச்சிருப்பாங்க” என்றார்.

“படித்த அறிவாளிகளும்” தமிழில் கையொப்பம் இடத்தொடங்கினால் மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

என்ன செய்யலாம்?

* (ஏற்கனவே உள்ள ஆங்கிலக் கையொப்பத்தை மாற்ற இயலாதோர்) பணம் /அதிகாரம் தொடர்பற்ற இடங்களிலாவது தமிழிலேயே கையொப்பமிடலாம்.

* நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில்,  நம்மைச் சுற்றியுள்ள சிறுவர்களை, தமிழில் கையொப்பமிட ஊக்குவிக்கலாம். “தமிழனே தமிழ்ல கையெழுத்து போடாட்டி, வேற எவன் போடுவான்”னு என் தமிழ் ஆசிரியர் சொன்னதே நான் தமிழில் கையொப்பமிடுவதற்கான தூண்டுதல்.

Mummy

பக்கத்து வீட்டு அக்கா பையன் Mummyனு கூப்பிடுறத பார்த்து எரிச்சலா இருந்திச்சு.

“அக்கா, தமிழ் அது இதும்பீங்க. பேர் எல்லாம் கூட இனியன்னு தமிழ்ல வைச்சீங்க. இப்ப ஏன் Mummyன்னு கூப்பிடப் பழக்கினீங்க?”

“இல்லப்பா, சுதீசு சொல்றதைப் பார்த்து இவனும் பழகிட்டான்.”

சுதீசு முதல் பையன். தத்துப் பிள்ளை. அக்காவின் நாத்தனாரும் அவர் கணவரும் தற்கொலை செஞ்சுக்கிட்டதால, இவங்க எடுத்து வளர்க்கிறாங்க.

“சரி, சுதீசும் அம்மான்னு கூப்பிடுறது?”

“அம்மான்னு சொன்னா அவங்க அம்மா நினைவு வந்து அழ ஆரம்பிச்சுடுறான். Mummyனு சொன்னா அவனுக்குப் பரவால போல இருக்கு.ரெண்டும் பேரும் வேற வேற மாதிரி அழைக்க முடியுமா? என்னை Mummyன்னாலும் அவங்களை அப்பான்னு தான் அழைக்கிறாங்க”

“மன்னிச்சுக்கங்க அக்கா. தெரியாம கேட்டுட்டேன். அவங்க Mummyன்னே அழைக்கட்டும்”

தமிழ் அகரமுதலிகள்

* ஆங்கில வழியத்தில் படித்து தமிழில் துறை சார் சொற்கள் அறியாதோர் பயன்படுத்த வேண்டியது தமிழ் இணையப் பல்கலை அகரமுதலி . இதனால், சொற்களைத் திரும்ப கண்டுபிடிக்கும் அசட்டுத்தனத்தையும் பொருத்தமற்ற சொற்களை புதிதாக உருவாக்கும் பிழையையும் தவிர்க்கலாம்.

*  இலக்கியத்தில் உள்ள பழங்காலத் தமிழ்ச் சொற்கள், போன சில நூற்றாண்டுகளில் தமிழில் புழங்கிய பிற மொழிச் சொற்கள் குறித்து அறிய  சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி விலை மதிப்பற்ற ஒரு களஞ்சியம். 

வலைப்பதிவு (blog), திரட்டி (aggregator) போன்ற அண்மைய கால நுட்பங்கள், போக்குகளுக்கான தமிழ்ச் சொற்களை அறிய உள்ள ஒரே தளம் தமிழ் விக்சனரி மட்டுமே. அதில் இல்லாத சொற்கள் குறித்து கேட்க, தேவையான இடங்களில் புதுச் சொற்களை உருவாக்க, பழைய பொருத்தமற்ற சொற்கள் குறித்து உரையாட தமிழ் விக்சனரி உரையாடல் குழுமத்தில் சேரலாம்.

4. இந்த முறை நான் இந்தியா சென்று திரும்பிய போது வாங்கி வந்த ஒரே நூல் – க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. சன்னதியா சன்னிதியா சந்நிதியா? கருப்பா கறுப்பா? சிகப்பா சிவப்பா ? அரைஞாணா அரைஞானா ? – போன்ற அடிக்கடித் தோன்றும் குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ள உதவும் நல்ல அகரமுதலி இது. இது போன்று அச்சடிக்கப்பட அகரமுதலிகள் இல்லாதோர் பலர், இந்தக் கேள்விகளுக்கான விடையை அறிய கூகுளில் கருப்பு-கறுப்பு என்று இரு சொல்லையும் இட்டு எது அதிகமான முடிவுகளைத் தருகிறதோ அதை சரியெனக் கருதுவது உண்டு. சில சமயம், இது சரியான முடிவுகளைத் தரும் என்றாலும், இது ஒரு பிழையான அணுகுமுறையாகும். மேலும் அறிய கூகுளுக்குத் தமிழ் தெரியாது பாருங்கள்.