தமிழக அரசின் கீழ் உள்ள கிங் மருந்தாய்வு நிறுவனமும் தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் டெங்குக்கு நிலவேம்பு மருந்தாகும் என்று எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று சமூக ஊடகங்களில் சுற்றி வருகிறது (அனைத்து இணைப்புகளும் மறுமொழியில்).
இந்தக் கட்டுரையின் முடிவுகளை முன்வைத்தே டெங்குக்கு நிலவேம்பு தரலாம் என்று வாதிடுகிறார்கள்.
இந்தக் கட்டுரை சொல்வது என்ன?
* நிலவேம்பு குடித்தால் டெங்கு வராமல் இருக்கலாம்.
* இது பெண்களை விட ஆண்களுக்குக் கூடுதலாக வேலை செய்வது போல் உள்ளது. பெண்களுக்கு ஏன் அந்த அளவு வேலை செய்வதில்லை என்று உறுதியாகத் தெரியவில்லை.
* நில வேம்புடன் இணைந்து பப்பாளி சாறும் கொடுத்தால் தட்டணுக்கள் எண்ணிக்கை சட்டென உயர்கிறது. ஆனால், ஏற்கனவே தட்டணுக்கள் சீராக இருந்தவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.
சரி, இந்த முடிவுகளை எந்த அளவு நம்பலாம் என்று காணும் முன், அறிவியல் உலகில் ஒரு ஆய்வுக் கட்டுரையின் மதிப்பு எப்படி அளவிடப்படுகிறது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு ஆய்விதழுக்கும் Impact factor என்ற தர மதிப்பீடு என்பது. இது அந்த ஆய்விதழின் கட்டுரைகளை மற்ற ஆய்வுகள் எந்த அளவு மேற்கோள் காட்டியுள்ளன என்பதைப் பொருத்து கூடுதலாக அமையும். எடுத்துக்காட்டுக்கு, Science, Nature, Cell போன்றவை உலகின் முன்னணி ஆய்வு இதழ்கள். இவற்றில் ஒரு கட்டுரை வெளியாகும் முன் உலகின் முன்னணி ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கட்டுரைகளைப் படித்து திருத்தங்களைக் கோருவார்கள். அவர்களுக்கு ஏற்புடையவாறு மீண்டும் ஆய்வு செய்து அறிவியல் அடிப்படைகளுடன் நிறுவினால் ஒழிய கட்டுரையைப் பதிப்பிக்க முடியாது. ஒரு ஆய்வாளரின் மதிப்பும், அவர் பெறக்கூடிய ஆய்வு நிதியும் அவர் இத்தகைய உயர் மதிப்பு மிக்க ஆய்விதழ்களில் எத்தனைக் கட்டுரைகளைப் பதிப்பித்துள்ளார் என்பதைப் பொருத்தே அமையும்.
ஆனால், இத்தகைய உயர் மதிப்பு இதழ்களில் பதிப்பிக்க இயலாதவர்கள் எண்ணிக்கை கணக்கு காட்டுவதற்காக, சில உப்புமா இதழ்களில் ஆய்வுகளைப் பதிப்பிப்பார்கள். இவற்றை யாரும் படிப்பதும் இல்லை. மேற்கோள் காட்டுவதும் இல்லை. அதாவது, இந்த ஆய்வு இத்துறையில் உள்ள வேறு யாருக்கும் பயன்படாது. அறிவியலையும் நுட்பத்தையும் முன்னெடுக்க உதவாது.
குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரை International Journal Of Pharmaceutical Sciences And Research என்ற இதழில் வெளிவந்துள்ளது. இதன் Impact factor 0.2 மட்டுமே. ஒருவர் உண்மையிலேயே டெங்குக்கு மருந்து கண்டுபிடிக்கக்கூடிய ஆய்வைச் செய்தால் அவருக்கு நோபல் பரிசே கொடுப்பார்கள். அவருடைய கட்டுரை Nature போன்ற முன்னணி இதழ்களில் வெளிவரும். அவற்றின் Impact factor 25-33ஐத் தொடும்.
பெயர் என்னவோ International என்ற பெத்த பெயராக இருந்தாலும் இது இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்டது. ஆம், 2010-2016 காலங்களில் வெளிவந்து நின்று விட்டது.
சரி, இந்த குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைகளை டெங்கு தொடர்பாக எத்தனைப் பேர் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்? பூச்சியம்! மருந்து கண்டுபிடிப்பு பற்றி நன்கு அறிந்த அறிஞர்கள் உலகில் இது யாருக்கும் ஒரு பொருட்டாகவே இல்லை.
Impact factor, citation குறித்து ஏன் இவ்வளவு விளக்குகிறேன் என்றால், இது போல் ஏதாவது ஒரு கட்டுரையை எடுத்துப் போட்டு, “இதோ பார் ஆதாரம்” என்கிறார்கள். இவற்றைப் புரிந்து கொண்டால், இனி ஒரு குறிப்பிட்ட துறையில் உங்களுக்கு அறிமுகம் இல்லை என்றாலும், குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையை எந்த அளவு நம்புவது என்று புரிந்து கொள்ளலாம்.
ஆக, அம்பத்தூர் Timesல் கடைசிப் பக்கத்தில் வரும் கட்டுரைக்கு உள்ள மதிப்பு கூட இதற்குக் கிடையாது.
சரி, இனி “ஆய்வுக் கட்டுரையின்” உள்ளடக்கத்துக்குப் போவோம்.
* நிலவேம்பு குடித்த 100ல் 24 பேருக்கு மட்டுமே டெங்கு வரலாம். அதுவும் பெண்கள் என்றால் 100ல் 47 பேருக்கு வரலாம் என்கிறது. இப்படி எக்குத் தப்பாக ஆய்வு முடிவுகள் வருவதே நிலவேம்புக்கும் டெங்கு வராமல் இருப்பதற்கும் ஏதாவது அறிவியல் தொடர்பு இருக்கத் தான் முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
* நிலவேம்பு குடிநீர் என்ற பெயரில் நிலவேம்புடன் சேர்த்து இன்னும் பல மூலிகைகள், போதாக்குறைக்கு பப்பாளி சாறு கொடுத்திருக்கிறார்கள். ஒரு வேளை நோய் குணமானாலும் எதனால் குணமாகிறது என்று உறுதி இல்லை.
* டெங்கு பாதித்த பத்தே பத்து பேரை வைத்து மருத்துவ ஆராய்ச்சி செய்து முடிவுக்கு வருவது சிறுபிள்ளைத்தனம். இந்த ஆய்வைப் புறக்கணிக்க இது ஒன்றே போதுமானது. குறைந்தது 1000 பேரையாவது வைத்து பல கட்டப் பரிசோதனைகள் அவசியம்.
மனிதர்களை வைத்து சோதிக்கும் முன் செல் வரிசையிலும் பிறகு எலி/நாய் முதலிய விலங்குகளிலும் சோதிக்க வேண்டும். இந்த மருந்தால் யாருக்கும் நஞ்சேறுமா (toxicity test), இது மருந்தாக வழங்கும் அளவு நிலைத்தன்மை உடையதா (stability test), தூய்மைச் சோதனை (purity test), அதன் கரையும் தன்மை எத்தகையது (solubility test), உடல் மருந்துக்கு எப்படி வினையாற்றுகிறது (pharmacodynamics), மருந்து உடலில் எப்படி வினையாற்றுகிறது (pharmacokinetics) என்று பல கட்டச் சோதனைகளைக் கடக்க வேண்டும். இவ்வாறு சோதிக்கப்படும் 5000 மருந்து மூலக்கூறுகளில் 1 மட்டும் தான் இறுதியில் ஒப்புதல் பெற்ற மருந்தாக வர வாய்ப்பு உள்ளது.
இந்த ஆய்வைப் பொருத்த வரை நேரடியாக மனிதர்கள் மீதான சோதனை தான்! முற்கட்டச் சோதனை எதுவும் இல்லை!
* அடுத்து முக்கியமாக, மருந்துகள் பற்றிய ஒவ்வொரு சோதனையிலும் கட்டுப்பாட்டுக் குழு (control group), ஆறுதல் மருந்து குழு (placebo group), மருந்து உண்ணும் குழு (medicine group) என்று மூன்று குழுக்கள் கட்டாயம் இருக்க வேண்டும். தான் உண்பது மருந்தா ஆறுதல் மருந்தா என்பது உண்பவருக்கும் தெரிக்கூடாது, கொடுப்பவருக்கும் தெரியக்கூடாது. அப்போது தான் ஆறுதல் மருந்தைக் குடித்தாலும் மருந்தைக் குடிக்கிறோம் என்ற நம்பிக்கையின் விளைவாக ஒருவர் குணமாகிறாரா இல்லை மருந்தின் தன்மையின் காரணமாக குணமாகிறாரா என்று தெரியவரும். இந்த ஆய்வில் டெங்கு பாதித்த அனைவருக்கும் கசாயம் கொடுத்திருக்கிறார்கள். கட்டுப்பாட்டுக் குழுவும் இல்லை. ஆறுதல் மருந்துக் குழுவும் இல்லை. ஆய்வு செய்த முறையே தவறு.
இந்தக் கட்டுரையை ஆய்வு எனக் குறிப்பிடுவதே தவறு. ஏன் எனில், இது ஒரு நோக்கு மட்டுமே. ஒரு மருந்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால், அதில் என்ன மூலக்கூறுகள் உள்ளன, அது எப்படி உடலுடன் வினையாற்றி நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பதற்கான மருத்துவ வேதியியற் செயற்பாட்டு விளக்கம் தேவை.
இந்தக் கட்டுரையை நம்புவதும் ஒன்று தான். சோடா குடித்தால் ஏப்பம் குணமாகும் என்று நம்புவதும் ஒன்று தான். ஆனால், அதனை நம்பி 7 கோடி மக்கள் உள்ள நாட்டில் டெங்குக்கு மருந்தாக கசாயம் குடியுங்கள் என்று சொல்ல முடியாது.
காண்க – முகநூல் உரையாடல்
Comments
2 responses to “நிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா? ஆய்வுக் கட்டுரை அலசல்”
[…] […]
நில வேம்பு செங்குளவி கடிக்கு உடனடியாக பலனளிக்கின்றது. இது நான் நேரடியாக உணர்ந்தது. அதுவும் உடனடியாக ! ஓரிரு நிமிடங்களில். பூரான் கடிக்கும் கூட. ஆனால் தேனீ கடிக்கு பலன் அளிக்க வில்லை. நல்லது !! இந்த விசங்களின் வேதிக் சேர்க்கை, டெங்கு வைரஸ் வேதிச் சேர்க்கை எல்லாவற்றினையும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால் நமது பல்கலைக் கழகங்கள் அதற்கு தகுதியானவை அல்ல.