இலட்சக்கணக்கான +2 மாணவர்களுடன் போட்டியிட்டு மாநிலத்திலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்று,
5.5 ஆண்டுகள் MBBS
3 ஆண்டுகள் ஊரகப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவர் பொறுப்பு
3 ஆண்டுகள் MS அல்லது MD.
2 ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு முடித்து
மீண்டும் அரசு பணியாற்றும் மருத்துவர் மாதம் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பளம் மாதம் 42,949 உரூபாய் மட்டுமே. (2014 நிலவரம்)
இது அரசு பணியில் இதே ஆண்டுகள் பணியனுபவத்துடன் பணியாற்றும் மற்ற பல துறை ஊழியர்கள் பெறுவதை விடக் குறைவான சம்பளம்.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15,000 அரசு மருத்துவர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகிறார்கள். இவர்களில் குறைந்தது 50% பேராவது அரசு பணி மட்டுமே ஆற்றுகின்றனர். தனியார் மருத்துவமனைகள் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக முன்பு போல் அருகமை சிறிய தனியார் மருத்துவமனைகளைத் திறப்பது வழக்கொழிந்து வருகிறது.
அரசில் 8 மணி நேரம் வேலை செய்து ~40,000 ஈட்டும் ஒரு மருத்துவர், தனியாரில் கூடுதலாக 4 மணி நேரம் வேலை செய்து ~40000 வரை சம்பாதிக்கலாம். இதே மருத்துவர் தனியாரில் வேலை செய்தால் 8 மணி நேரத்தில் ~1,00,000 வரை கிடைக்கலாம். ஆனால், அந்த மருத்துவர் சமூகத்தில் மேல் உள்ள அக்கறையால் 8 மணி நேரம் அரசிற்கு கொடுத்து குறைந்த ஊதியம் பெறுகிறார். இதில் எந்த ஆற்றாமையும் இல்லை. இதை விரும்பியே செய்கிறார்கள்.
கருநாடக அரசு சிறப்பு மருத்துவர்கள் தங்களுக்கு வேண்டிய சம்பளத்தைக் குறிப்பிடுங்கள் என்று ஏலம் விட்டு கூட கெஞ்சிப் பார்த்து விட்டது. அங்கு ஒரு ஆண்டு அனுபவம் உள்ள மருத்துவர்கள் கேட்கும் சம்பளம் கூட மாதம் 1 இலட்சம் முதல் 6 இலட்சம் வரை நீள்கிறது. இவர்கள் கேட்கும் சம்பளம் அரசுக்குக் கட்டுபடியாகாததால், 1000க்கு மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன (இணைப்பு மறுமொழியில்).
ஆனால் தமிழ்நாட்டிலோ, அரசு மருத்துவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தனியாரிலும் சேவையாற்றலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் தான், அரசுப் பணியிலும் தொடர்கிறார்கள். தமிழ்நாட்டில் மருத்துவருக்கான ஒரு பணியிடமும் காலி இல்லை. இத்தகைய சமயோசிதமான திட்டம் தமிழ்நாட்டில் இருப்பதால் தான், தமிழ்நாட்டில் உள்ள 25 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கும் ஏறத்தாழ 300 அரசு மருத்துவமனைகளுக்கும் 2000 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேர்ந்த மருத்துவர்கள் கிடைக்கிறார்கள்.
தனியாரில் பணியாற்றும் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டால், எவ்வளவு தெரசாத்தனமான மருத்துவர் என்றாலும், அரசு தரும் இந்தக் குறைவான சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு சென்னை போன்ற மாநகரத்தில் தனியொரு ஆளாக குடும்பம் நடத்த முடியுமா?
இலஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல், தான் படித்த படிப்பைக் கொண்டு, நேர்மையாக, தன்னுடைய அரசுப் பணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பது தவறு ஆகுமா?
உங்கள் சம்பளம் எவ்வளவு? உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மாதம் 10 மணி நேரமாவது அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தன்னார்வலராகச் சென்று உதவ இயலுமா?
காண்க – முகநூல் உரையாடல்