சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி இவை எல்லாம் மருத்துவமே இல்லை, நவீன அறிவியல் மருத்துவம் தான் உண்மையான மருத்துவம் என்றால் பிறகு அரசு ஏன் இவற்றை தனி மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கின்றனது? AYUSH என்று தனி அமைச்சகம் வைத்திருக்கிறது?
…இந்தியாவைப் பொருத்தவரை யுனானி, சித்தா, ஆயுர்வேதம் ஆகியன மதம், இனக்குழுப் பெருமை ஆகியவற்றோடும் தொடர்பு உடையது. எனவே, அரசியல் காரணங்களுக்காக ஒரு அரசு இவற்றில் தலையிட விரும்பாது.
அது மட்டும் இன்றி, தனிப்பட்ட பல அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் போக இங்கு பல கட்சிகளும் மக்களும் கூடவே, பொதுவுடமை, தேசிய, தற்சார்பு இயக்கங்களை ஆதரித்து அறிவியலுக்கு முரணான ஏமாற்று மருத்துவத்தை அதற்கான வழிமுறையாக காண்கிறார்கள்.
ஏமாற்று மருத்துவ முறைகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் உள்ளன. பொதுவாக, ஒரு அரசு இவற்றை அனுமதிப்பதன் மூலம் இத்துறையை ஒழுங்குபடுத்தி தன் கண்காணிப்பில் வைக்க இயலும். தக்க வேளையில் ஆபத்தான நோயாளிகளை நவீன மருத்துவத் துறையின் கீழ் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முடியும். இல்லை எனில், நம் மக்கள் குகைகளில் வாழும் சித்தரைத் தேடி காட்டுக்குப் போவார்கள். முட்டை மந்திரிப்பார்கள். எதை மருந்தாக கொடுக்கிறார்கள், என்ன உண்கிறார்கள் என்றே அறிய இயலாது. அரசு TASMAC நடத்தாவிட்டால் நம்ம ஆட்கள் கள்ளச் சாராயம் காய்ச்சத் தொடங்கி விடுவார்கள் என்பதை ஒப்பு நோக்குக.
என்ன தான் தீர்வு?
இந்தியாவில் அமைகிற ஒரு அறிவுள்ள அரசு, இந்த மாற்று மருத்துவ முறைகளை பல் பிடுங்கிய பாம்பாகவே வைத்திருக்க வேண்டும். நவீன அறிவியல் மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும். அடிப்படை அறிவியலில் ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும்.
செடிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ மருந்துகள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளன. மலேரியா மருந்தே ஒரு மரத்தில் இருந்து வந்தது தான். ஆனால், அந்த மரத்தை அரைத்துக் குடித்தால் நோய் தீராது. இது தான் அறிவியல்.
இந்திய செடிகள், உயிர்களில் இருந்து உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய மருந்துகளைக கண்டுபிடிப்பதற்குச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அவற்றுக்குத் தக்க அறிவு சார் உரிமையையும் பெற வேண்டும். சித்த மருத்துவமோ மற்ற மருத்துவமோ அது தன்னை நிறுவும் நாளில் அதுவும் நவீன அறிவியல் மருத்துவமாகவே ஏற்றுக் கொள்ளப்படும்.
காண்க – முகநூல் உரையாடல்