நவீன அறிவியல் மருத்துவத்துக்கு எதிரான மிகப் பெரிய பயம், பரப்புரை என்னவென்றால் அவர்கள் கொடுக்கும்
* மாத்திரைகள், மருந்து, தடுப்பூசி ஆகியன செயற்கையான வேதிப் பொருட்கள். இதில் பக்க விளைவுகள் உண்டு.
* மாறாக, சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவம் தருவது இயற்கையான உணவு, மூலிகைகள் மட்டுமே. இதனால் பக்க விளைவுகள் இல்லை.
இந்த உலகில் உள்ள அனைத்துமே வேதிப் பொருட்களால் ஆனது. இதில் இயற்கை, செயற்கை ஏதும் இல்லை. உங்கள் உடலும் சரி, நீங்கள் உண்ணும் உணவும் சரி, உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளும் சரி இறுதியில் அடிப்படை வேதிப் பொருட்களாகத் தான் மாறுகின்றன.
அரளிக் கொட்டை இயற்கை தான். அதை அரைத்துப் பொடியாக்கி புட்டியில் அடைத்தால் செயற்கையாகி விடுமா? இயற்கையோ செயற்கையோ அரளிக் கொட்டையை உண்பீர்களா? இயற்கையிலும் நஞ்சு உண்டு.
சூரிய ஒளியில் நின்றால் வைட்டமின் டி கிடைக்கும். ஒரு சிறு மாத்திரையில் உள்ள வைட்டமின் டியைப் பெற நீங்கள் நாளும் 6 மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டும் என்றால் உங்கள் தேர்வு என்னவாக இருக்கும்? வெயிலில் நின்றாலும் வைட்டமின் டி உற்பத்தி செய்ய முடியாத குறைபாடு உடையவர்கள் இருக்கிறார்கள். 6 முதல் 9 மாதங்களுக்கு சூரியனையே காண முடியாத நாட்டு மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாத்திரை மட்டும் தான் தீர்வு.
நம்மைச் சுற்றி எங்கும் ஆக்சிசன் இருக்கிறது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு திணறும் ஒருவருக்கு ஆக்சிசன் உருளையில் இருந்து தான் ஆக்சிசன் தர முடியும். தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டதனால் இது தீமையான செயற்கை ஆக்சிசன் ஆகி விடுமா?
மண்ணுக்கு இடும் உரம் ஆனாலும் சரி, நம் உடலுக்குத் தேவையான சத்து மருந்துகள், மாத்திரைகள் என்றாலும் சரி இதே அடிப்படை தான். அது இயற்கையாக விளைந்ததா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதை விட அதில் என்ன இருக்கிறது, சரியான அளவில் அளிக்கப்படுகிறதா, தீமை விளைவிக்கும் வேறு பொருட்கள் கலப்பின்றி தரக்கட்டுப்பாட்டுடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதா, வேறு ஏற்றுக் கொள்ளத்தக்க சிறு பக்க விளைவுகள் உள்ளனவா என்று தான் பார்க்க வேண்டும்.
இயற்கையில் பக்க விளைவே இல்லை என்பது தவறு. இயற்கையான பொருட்களும் அளவு மீறினாலோ அவற்றின் இயல்பின் காரணமாகவோ நஞ்சு ஆகலாம். வேண்டுமானால் பத்து குடம் தண்ணீரைக் குடித்துப் பாருங்கள்.
இந்த இயற்கை, செயற்கை மாயையில் இருந்து விடுபட்டால் ஏமாற்று மருத்துவ மோசடிக் கும்பலின் பசப்புரையில் இருந்து தப்பலாம்.
காண்க – முகநூல் உரையாடல்