அந்தக் காலத்தில் மரபார்ந்த மருத்துவம் இருந்த போது, நமது தாத்தா பாட்டிகள் 100 ஆண்டுகள் நோயின்றி வாழ்ந்தார்கள். இப்போது, நவீன மருத்துவம் வந்த பிறகு புற்றுநோய், சர்க்கரை நோய் என்று புதுப்புது நோய்கள் வருகின்றன என்கிறார்களே?
* 100 வயது வாழ்ந்த உங்கள் பாட்டி, உங்கள் தாத்தாவுக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவி பிரசவத்தில் இறந்து போய் விட்டார்.
* உங்கள் தாத்தா 30 வயதில் காலராவுக்கு இறந்து விட்டார். எஞ்சிய 70 ஆண்டுகள் பாட்டி கைம்பெண்ணாக வாழ்ந்திருப்பார்.
* உங்கள் பாட்டிக்கு 8 குழந்தைகள் பிறந்திருக்கும். 2 அல்லது 3 தப்பிப் பிழைத்திருக்கும்.
* உங்கள் சித்தப்பாவோ மாமாவோ குழந்தை இல்லை என்று சொல்லி இன்னொரு திருமணம் செய்திருப்பார்கள்.
* பாம்பு கடித்தோ மஞ்சு விரட்டு மாடு குத்தியோ ஒரு மாமா இறந்திருப்பார்.
* உங்கள் அத்தைக்கும் மாமாவுக்கும் நெருங்கிய உறவில் பிறந்த குழந்தை ஊனமாகப் பிறந்திருக்கும்.
* உங்கள் அம்மாக்களும் சித்திகளும் மாத விலக்கின் போது சேலைத் துணி அணிந்து வீட்டுக்கு வெளியே தீட்டுக்கு உட்கார்ந்திருப்பார்கள். அதனால் ஏற்பட்ட தொற்று நோய்களில் காலம் முழுக்க உழன்றிருப்பார்கள்.
****
உங்கள் பாட்டி, தாத்தா காலத்தில் பிறக்காத குழந்தைகள் இன்று பிறக்கிறார்கள். பிறந்த குழந்தைகள் அவரவர் உடல் திறனுக்கு ஏற்ப 60, 70 வயது கூட வாழ்வார்கள். இன்னும் சிலர் 100 வயது வரை கூட வாழலாம். 30 வயதில் வருகிற சர்க்கரை நோய் பிறந்து 1 வயதில் இறந்து போன உங்கள் மூதாதையருக்கு வராது.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் என்றாவது ஒரு நாள் சதம் அடிக்கிற சச்சின்கள் இருக்கலாம். ஆனால், மற்ற ஆட்டக்காரர்கள் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினால், அந்த அணி வெல்வதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆளுக்கு 50, 60 அடித்தாலும் எல்லாரும் அடித்தாடுகிற அணி தான் வெல்லும். நவீன அறிவியல் மருத்துவம் வெல்லும் மருத்துவம்.
காண்க – முகநூல் உரையாடல்