நவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு

கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது.

குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார்.

உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. செ. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள் வருகிறார்கள். மாணவர்கள் என்னென்ன தமிழ்க் கணிமைத் திட்டங்களில் ஈடுபடலாம், அவற்றுக்கு யார் உதவியைப் பெறலாம் என்பது குறித்து கலந்துரையாடுவது கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

அனைத்து விக்கிப்பீடியா, வலைப்பதிவு, தமிழ்க் கணிமை ஆர்வலர்களையும் இந்த ஒன்று கூடலுக்கு வரவேற்கிறோம். நன்றி.

இடம்: குமரகுரு பொறியியல் கல்லூரி, கோவை.

D-தொகுதி கருத்தரங்க அறை (முதல் தளம். உணவகத்துக்கு எதிர்ப்புறம்.)

நேரம்: நவம்பர் 7, 2009 சனிக்கிழமை. பகல் 2.00 முதல் 4.00 மணி வரை.

வழி: சரவணம்பட்டி, அன்னூர் செல்லும் பேருந்துகள். பேருந்து எண் 45. பேருந்து நிறுத்தத்தில் இருந்து தானி மூலம் கல்லூரிக்கு வர 30 ரூபாய்.

உதவிக்கு: 99444 36360

தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி

சனவரி 18, 2009 அன்று சென்னையில் கிருபாவின் அலுவலகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு நடந்தது.

நிகழ்ச்சி பற்றி விக்கி பயனர்களின் கருத்துகள்

மா. சிவக்குமாரின் கருத்து

* வடபழனி பகுதி உள்ளூர் அச்சு இதழில் வெளிவந்த செய்தியைப் பார்த்தே பலர் வந்திருந்தார்கள். அடுத்தடுத்த வலைப்பதிவு, விக்கி, இணையப் பட்டறைகளுக்கும் அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலம் கூடுதலாக விளம்பரப்படுத்த வேண்டும்.

* கிருபா, விடுமுறை நாளில் மூடிக் கிடக்கும் தன்னுடைய அலுவலக இடம், கணினிகளையே இதற்குப் பயன்படுத்தினார். இது போல் தமிழ், கணினி, இணைய ஆர்வம் உடைய இன்னும் பலர் முன்வர வேண்டும். பல இடங்களில் சிறிய அளவில் இது போன்று செய்வது ஒருங்கிணைக்க இலகு. செலவற்றது. கூடுதல் விளைவுகளைத் தரும்.

* பிப்ரவரி 1, 2009 அன்று பெங்களூருவில் இதே போன்ற விக்கி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.