தமிழ் TuxPaint

குழந்தைகள் வரைவதற்கான TuxPaint மென்பொருளைத் தமிழாக்கி உள்ளோம். 2004ல் தமிழா குழுவினர் வெளியிட்ட தமிழாக்கம் TSCIIயில் இருந்தது. அதை ஒருங்குறிக்கு மாற்றி, கூடுதலாக இருந்த புதிய சரங்களைத் தமிழாக்கி உள்ளோம்.

1. TuxPaint மென்பொருளைத் தரவிறக்கி நிறுவுங்கள்.

2. நிறுவுகையில் configurationல் Languages என்பதில் தமிழைத் தெரிவு செய்யுங்கள். ஏற்கனவே நிறுவி இருந்தால், (விண்டோசு கணினியில்) C:\Program Files\TuxPaint போய் Tuxpaint-config என்பதைச் சொடுக்கி அமைப்பை மாற்றலாம்.

3.  C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES என்ற இடத்தில் உள்ள Tuxpaint.mo கோப்பை நீக்குங்கள்.

4. புதிய TuxPaint.mo கோப்பைத் தரவிறக்கி C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES ல் சேருங்கள்.

தமிழாக்க உதவிக்கு நன்றி: சுந்தர், மயூரன், இராம. கி, புருனோ, கட்டற்ற தமிழ்க் கணிமை குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்.

கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

தட்டச்சு என்பது ஒரு மனப்பழக்கம். இந்த கூகுள் தமிழ் எழுதியில் எழுதிப் பழகி விட்டால், பிற எழுதிகளைப் பயன்படுத்த உங்களுக்கு கை வராது. ஆர்க்குட், ப்ளாகர் தவிர்த்த பிற தளங்களில் தமிழில் எழுதுவது உங்களுக்குச் சிரமமாகும். அதன் விளைவாக, கூகுள் தமிழ் எழுதி பக்கத்தை நாடத் தொடங்குவீர்கள். நேரடியாக எல்லா தளங்களிலும் இலகுவாகத் தமிழில் எழுதுவதை விடுத்து வீணே கூகுள் தமிழில் எழுதியில் இருந்து வெட்டி ஒட்டத் தொடங்குவீர்கள். இதனால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். அல்லது, பிற தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் உங்கள் மூளை குழம்பும்.

 கூகுள் தமிழ் எழுதி போன்ற எந்த ஒரு இந்திய மொழி கூகுள் எழுதியையும் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில்,

1.  கூகுள் தமிழ் எழுதியில் பழகி விட்டால்,   கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். கூகுள் எழுதி வசதி இல்லாத தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் மூளை குழம்பும். ஒரு மொழியை எழுதுவதற்கான தட்டச்சு மென்பொருள் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. இந்த மென்பொருள்களை நிறுவனச் சார்பின்றி மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் இருப்பது முக்கியம்.

2. எ-கலப்பை, NHM Writer போன்று அல்லாது கூகுள் எழுதி ஒரு dynamic writer. அதாவது, இன்ன விசையை அழுத்தினால் இன்ன எழுத்து வரும் என்று உங்களால் ஊகிக்க இயலாது. நீங்கள் எழுத எழுத உங்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளும்.

ஒரு தட்டச்சும் பழக்கத்தை மிகையாகத் தன்விருப்பமாக்குவது தவறு. கூகுள் தன் ஊகிக்கும் நிரலாக்கத்தை மாற்றினால் நாமும் பழக்கத்தை மாற்ற வேண்டி இருக்கும். அவசரத்துக்கு வேறு மென்பொருள்களை நாட வேண்டி வந்தால் வேகமாக எழுத இயலாது. துவக்க நிலையில், இது இணையத்தில் உள்ள பெரும்பாலானோர் எந்த ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதுகிறார்கள் என்பதன் அடிப்படையில் செயல்படுகிறது. நாம் வேறு மாதிரி எழுதும் முறையைக் கொண்டிருந்தால் துவக்கத்தில் சிரமப்பட வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு விசையை அழுத்தும் போதும் என்ன எழுத்து வெளிவரும் என்று அறிய இயல்வது முக்கியம். ஆனால், கூகுள் எழுதியில் முழுச் சொல்லையும் எழுதிய பிறகே தமிழுக்கு மாறுகிறது. இப்படி வெளிவரும் சொல் பிழையாக இருந்தால் backspace அழுத்திச் சென்று பிழை நீக்குவது பெரிய தலைவலியாகப் போகும். ஒரு பத்து வரி கட்டுரை எழுதிப் பார்த்தால் கூகுள் எழுதி எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்று புரியும்.

3. நாளை யாகூ, எம்எஸ்என் எல்லாரும் இது போன்ற ஊகித்தறியும் மென்பொருள்களை ஆளுக்கு ஒருவராக அறிமுகப்படுத்தினால், ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் இந்த ஊகித்தறியும் மென்பொருள்கள் எந்த அளவு ஒரு போல் இயங்கும் என்று சொல்ல இயலாது. ஒரே தமிழ்ச் சொல்லை வெவ்வேறு முறையில் வெவ்வேறு தளங்களில் எழுத வேண்டி வருவது குழப்பமாக இருக்கும்.

3. இணைய வசதி இன்றி வெறுமனே கணினியில் எழுத இது உதவாது

4. நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்கள் என்பதை ஊகித்துக் கற்றுக் கொள்வது போல் இது அமைக்கப்பட்டிருப்பது இந்த மென்பொருளின் சிறப்பாகப் பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில், இது தான் இதன் பெரிய குறை. ஆங்கிலத் தட்டச்சுக்கு இது போல் ஊகித்தறியும் மென்பொருள் வந்தால் உங்களுக்கு எவ்வளவு அயர்ச்சியாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

செல்பேசியில் அதிக விசைகள் இல்லாத நிலையில் குறுஞ்செய்தி போன்று சிறிய அளவிலான செய்திகள் எழுத இந்த ஊகிக்கும் முறை உதவும். கணினியில் பெரிய கட்டுரைகள் எழுத இது உதவாது. ல, ழ, ள, ற, ர, ண, ன, ந எழுத்துக்கள் அடங்கிய சொற்களை எழுதிப் பாருங்கள். இந்த முறையின் அயர்ச்சி புரியும்.

தவிர, இந்த கற்றல் நிகழ்வு உங்கள் உலாவியின் நினைவகத்தில் நடக்கிறது. நீங்கள் வேறு கணினி, இயக்குதளங்கள், உலாவிகளைப் பயன்படுத்தினால் திரும்ப முதலில் இருந்து கூகுளுக்குத் தமிழ் சொல்லித் தர வேண்டி இருக்கும். இது உங்கள் தட்டச்சும் வேகத்தைப் பெரிதும் மட்டுப்படுத்தும்.

5. ஒரே கணினி, உலாவியை உங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கொண்டால் நீங்கள் செய்து வைத்திருக்கும் தன்விருப்பமாக்கல்கள் குளறுபடி ஆகலாம்.

6. சில சொற்களைத் தலைகீழாக நின்றாலும் எழுத முடியாத அளவுக்கு வழுக்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, guha priya, guhapriya என்று எழுதிப் பாருங்களேன் 😉 (நன்றி – கோபி)

7. ஆர்க்குட் போன்ற தளங்களின் பிரபலம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான இளைய தலைமுறையினர் இந்திய மொழி எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதித்துக் கொள்ளத் தொடங்குவார்கள். தொன்மையான வரலாற்றைக் கொண்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளுக்கு இதை விட வேறு அவமானம் உண்டோ?

இந்தத் தீமைகளை ஓரளவேனும் தவிர்க்க வேண்டும் என்று கூகுள் நினைத்தால், பின்வருவனவற்றைச் செய்யலாம்:

1. இணைப்பறு நிலையிலும் செயல்படுமாறு தரவிறக்கிக் கொள்ளத்தக்க மென்பொருள் பொதியாக இதை மாற்ற முனைய வேண்டும்.

2. கணினி, உலாவி, இயக்குதள சார்பு இன்றி குறைந்தபட்சம் கூகுள் பயனர் கணக்கோடு இணைந்ததாக இந்த மென்பொருளை மாற்ற வேண்டும்.

ஆனால், இவ்வளவையும் செய்தாலும்,

தமிழ்99 போன்று அந்தந்த மொழிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தட்டச்சு முறைகள், அவற்றை ஊக்குவிக்கும் எ-கலப்பை, NHM Writer போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள். அஞ்சல் / தமிங்கில முறை தான் வேண்டுமென்றாலும் குறைந்தபட்சம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தட்டச்சு செய்ய உதவும் நிலையான மென்பொருள்களை நாடுங்கள்.