நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

நோக்கியாவின் அடிப்படை செல்பேசி வகைகள் சிலவற்றில் தமிழில் எழுதலாம். தமிழ் விசைப்பலகையை முடுக்க குறுஞ்செய்தி எழுதும் பெட்டித் தெரிவுகளில் writing language – > தமிழ் என்று தெரிவு செய்யுங்கள். பல செல்பேசிகளில் தமிழ் எழுத்துகள் அச்சிடப்படாமல் இருக்கலாம். எனவே, விசை எண்  மற்றும் விசையில் உள்ள எழுத்து வரிசைகளைக் கீழே காணலாம்.

1 – புள்ளி, ஆய்தம்.

2 – அ, ஆ, இ, ஈ, உ, ஊ

(உயிரெழுத்துகள் முதல் பகுதி)

3 – எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

(மீதம் உள்ள உயிரெழுத்துகள்)

4 – க, ங, ச, ஞ

(ங்க, ஞ்ச ஒன்றாக வருவன)

5 – ட, ண, த, ந

(ண்ட, ந்த ஒன்றாக வருவன)

6 – ப, ம, ய

(ம்ப ஒன்றாக வரும்)

7 – ர, ல, வ

8 – ழ, ள, ற, ன

(ன்ற ஒன்றாக வரும்)

9 – ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ

(குறைவாகப் பயன்படும் க்ஷ, ஸ்ரீ கடைசியாக)

பள்ளியில் தமிழ் அரிச்சுவடி படித்த வரிசையிலே இவ்விசைகள் அமைந்துள்ளன. அரிச்சுவடி மறந்து விட்டதா ? 🙂 பெரும்பாலும் ஒரு ஒலிக்கான விசை தட்டுப்படும்போதே அதனுடன் வரும் ஒலியும் அடுத்த விசையில் இருக்கும்.

எடுத்துக்ககாட்டு: தம்பி, கம்பி, நம்பி போன்ற சொற்களில் ம்பி என்று ஒன்றாக வருவதைக் காணலாம். எனவே, 6 ஆம் எண் விசையில் ப தட்டுப்படும் போதே அடுத்து ம வரும் என்று உள்ளுணர்வாக அறியலாம்.

தனி எழுத்துகளை எப்படி எழுதுவது?

செல்பேசி ஆங்கில விசைப்பலகையில் 2ஆம் எண்ணில் abc என்று இருக்கும். c வர வேண்டுமானால் 2ஆம் எண்ணை 3 முறை அழுத்துவோம் அல்லவா? அதே போல் தான் தமிழுக்கும். குறிப்பிட்ட எழுத்து வரும் வரை அழுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:

2 = அ

22 = ஆ

333 = ஐ

777 = வ

ஒரே எண்ணை அடுத்தடுத்து அழுத்தும் போது மிக வேகமாக அழுத்த வேண்டும். இல்லாவிட்டால், 22 = ஆ என்று வருவதற்குப் பதில் அஅ என்று வரும்.

கூட்டு எழுத்துகளை எப்படி எழுதுவது?

பா = ப் + ஆ.

பா = ப + புள்ளி + ஆ

பா = 6 + 1 + 22

என்று எழுத வேண்டும் என்று நினைப்பீர்கள். அது தான் இல்லை 🙂

பா = 6 + 2 என்று அழுத்தினாலே போதும்.

6 + 2 = பஅ என்று தான் வர வேண்டும். ஆனால், தமிழில் இப்படி உயிர்மெய் எழுத்துக்கு அடுத்து உயிர் எழுத்து வராது. எனவே, செல்பேசி தமிழ் இலக்கணத்தின் அடிப்படையில் செயற்படத் தொடங்குகிறது. ப என்ற விசை இந்த இடத்தில் ப் என்ற மெய்யெழுத்தைக் குறிக்க வேண்டும் எனப் புரிந்து கொள்கிறது. ப என்ற விசை ப் ஆகிறது. ப்+2 = ப என்ற வர வேண்டும். ஆனால், ஏற்கனவே தான் ப என்ற எழுத்துக்குத் தனி விசை உண்டே. எனவே, பயனர் திரும்பவும் ப அடிக்க முயலவில்லை என்பதை ஊகிக்கிறது. அகரத்துக்கு அடுத்த உயிரைப் பொருத்திப் பார்க்கிறது. எனவே 6 + 2 = பா ஆகிறது. பி = 6 +22, பீ = 6+222 என்று தொடரும்.

சில பயிற்சிகள் பார்ப்போமா?

கணினி = 4 + 55+ 22+ 8888 + 22

வாழ்க = 777 + 2 + 8 + 1 + 4

கொடுப்பினை = 4 + 3333 + 5 + 2222 + 6 + 1 + 6 + 22 + 8888 + 333

என் அப்பா இந்தச் செல்பேசியை வாங்கிய புதிதில் கொ, கோ எல்லாம் எழுத கொம்புகளைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தார் 🙂  க வுக்கு முன்பே கொம்பு வருவதால் முதலில் ஒ அழுத்தி பிறகு க அழுத்திப் பார்த்தார் 🙂

நினைவில் கொள்ளுங்கள்: எப்பொழுதும் மெய் எழுத்து மேல் தான் உயிர் எழுத்து ஏறும். உடம்பில் தான் ஆவி புகும். ஆவிக்குள் உடம்பு புகாது 🙂

எஃகு = 3 + 1 + 4 + 2222

இங்கு எ க்கு அடுத்து 1 அடித்தால் புள்ளிக்குப் பதில் தானே ஆய்த எழுத்து வருவதைக் கவனியுங்கள். ஏனெனில், இலக்கணப் படி உயிர் எழுத்து மேல் புள்ளி வராது என்பதை செல்பேசி புரிந்து கொள்கிறது.

தமிழ்99 முறை அறிமுகமானவர்களுக்கு இந்த முறை மிகவும் எளிதில் பிடிபடும். கணினியில் தமிழ்99 எழுதும் போது அதில் இன்னும் கூட சிறப்பான குறுக்கு வழிகள் உள்ளன. முயன்று பாருங்கள்.

ஒரு முறை writing language தெரிவில் தமிழ் எனத் தந்தால் செல்பேசி முழுக்க எல்லா இடங்களிலும் தமிழ் எழுத்துகள் வரும். எனவே, தேவை இல்லாத போது திரும்ப எழுத்துத் தெரிவுகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

நோக்கியா தவிர்த்த பிற செல்பேசிகளில் தமிழ் எழுதும் முறை எப்படி இருக்கிறது என்று அறிந்தவர்கள் தெரிவியுங்கள். நன்றி.

தமிழ் செல்பேசி

நோக்கியா 5130 செல்பேசி வாங்கி இருக்கேன்.  தமிழ் விசைப்பலகை, இடைமுகப்பு, பயனர் வழிகாட்டி, தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது. உங்கள் செல்பேசியிலும் தமிழ் ஆதரவு பெற, அருகில் உள்ள Nokia Care கடைக்குச் சென்று கேளுங்கள். உங்கள் தொலைப்பேசி வகையில் தமிழ் ஆதரவு தர இயலும் என்றால், இலவசமாகவே செய்து தருவார்கள்.

Tamil Nokia Mobile Cell Phone
Tamil Nokia Mobile Cell Phone

தமிழ் எழுதும் முறை தமிழ்99 முறையை ஒத்திருப்பது மகிழ்ச்சி. க+ஆ=கா என்று எழுத வேண்டும். செல்பேசியில் இப்படி தமிழ் எழுதிப் பழகும் மக்கள் கணினிக்கு வருகையில் தமிழ்99ப் புரிந்து கொள்வதும் இலகு.

பார்க்க: நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

ஆனால், கணினி தமிழ்99 விசையின் தளக்கோலம்,  பயனெளிமை விதிகள் அனைத்தும் இல்லை. T9 predictive text போல தமிழுக்கு முயலும் போது திறமூல செல்பேசி இயக்குதளங்களை வைத்து திறமான தமிழ் செல்பேசி விசைப்பலகை வடிவமைக்க முயலலாம்.

கணினியில் இயல்பிருப்பு தமிழ் ஆதரவு வேண்டும் என்று பலர் எழுதிக் கொண்டே இருக்கிறோம் 🙂 ஆனால், பெரிய கூக்குரல் எழுப்பாமலேயே செல்பேசியில் ஓரளவாவது தமிழ் வசதிகள் கிடைத்திருக்கின்றன. செல்பேசிப் பயன்பாடு பரவலானதால் தமிழ் விரும்பும், தமிழ் மட்டுமே அறிந்த மக்களையும் செல்பேசிச் சந்தை கவர வேண்டி இருக்கிறது. செல்பேசியைப் போல கணினியும் அடித்தட்டு மக்களைச் சென்றடையும் போது கணினியிலும் தமிழ் தானாகவே வரும். அப்படி செயற்படுத்தப்படும் தமிழ் முறைமைகள் திறமானவையாக இருக்கவே முயற்சிகள் தேவைப்படுகின்றன.

தொடர்புடைய இடுகைகள்:

* செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்

* செல்பேசியில் தமிழ் – சோனி எரிக்சன் C510 அனுபவம்

* செல்பேசிகளில் யூனிக்கோடு தமிழ்

* தமிழ் + செல்பேசிகள் + சிம்பயான் + நோக்கியா

பட உதவிக்கு நன்றி: Fonearea.com