குருவி – திரை விமர்சனம்
இன்று மதியம் நெதர்லாந்து almere நகரில் Cinescope திரையரங்கில் குருவி திரைப்படம் பார்த்தோம். ஈழத்து நண்பர் ஒருவரின் carல் 90 km பயணம். 15 ஐரோ நுழைவுச் சீட்டு. 100 முதல் 150 பேர் வந்திருப்பார்கள். 70% அரங்கு நிறைந்திருந்து.
என்னத்த சொல்ல?
* ஒவ்வொரு படத்திலும் கபடிப் போட்டி, ஓட்டப் பந்தயப் போட்டி போல் குருவியில் car பந்தயப் போட்டியல் கலந்து கொண்டு வெற்றி பெற்று விஜய் அறிமுகமாகிறார். (அஜித் உண்மையான car பந்தயக் காரர். அவரைக் கிண்டல் செய்து தான் இந்தக் காட்சி என்று சின்னக் குழந்தைக்கும் தெரியும்)
* பாடல்கள் கேட்கவே சுமார் தான். பொருந்தாத இடத்தில் அவற்றைப் புகுத்தியதால் திரையில் பார்க்கவும் மனம் ஒட்டவில்லை.
* ஆந்திர காட்சிகளில் ஏகப்பட்ட தெலுங்கு வசனம். நிச்சயம் தெலுங்கு புரியாத மக்களைக் கடுப்பேற்றும்.
* ஆந்திரப் பகுதியில் எடுத்ததாலோ என்னவோ தெலுங்குப் படம் போல ஏகப்பட்ட வன்முறை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பிற்பகுதி படம் முழுக்க தெலுங்கப் படமான சத்ரபதியில் இருந்து காட்சிக்குக் காட்சி சுட்டிருக்கிறார்கள். கோடாலி கொண்டு ஆட்களை வெட்டிக் கொண்டே இருக்கிறார். ஒரே காட்டுக் கத்தல். கில்லி படத்தையாவது ஒக்கடு படத்தை மீள எடுக்கிறேன் என்று சொல்லி எடுத்தார்கள். அது போல் சொல்லிச் சுட்டிருந்தாலாவது நாகரிகமாக இருந்திருக்கும்.
காட்டெருமை போன்ற எதிரியின் அடியாளைத் துவைப்பது எல்லாம் 80களில் வந்த ரஜினி படங்களை நினைவூட்டுகின்றது. சுமன், ஆஷிஷ் எல்லாம் சொத்தை எதிரிகள். ரகுவரனும் போய்ச் சேர்ந்து விட்டார். பிரகாஷ்ராஜையே எல்லா படங்களிலும் பார்க்க முடியாது. தமிழ்த் திரைக்கு நல்ல எதிரிகள் தேவை.
* விவேக் இடைவேளை வரை வருகிறார். நகைச்சுவை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. நிறைய இடங்களில் “கடி” தான்.
* இன்னும் எத்தனைப் படங்களில் தான் த்ரிஷாவை கிறுக்கி மாதிரியே காட்டுவார்கள்?
* விஜய், அதிரடி வசனம் பேசுங்க பரவால. ஆனா, காது கிழியுற ஆகிற அளவுக்கு படம் முடியுற வரைக்கும் பேசிக்கிட்டே இருக்காதீங்க.. தயவுசெஞ்சு !
* இந்தப் படத்துக்கும் Transporter (2002) படத்துக்கும் ஒற்றுமை இருப்பதா புரளி கிளம்ப அந்தப் படத்தையும் இரண்டு நாள் முன்ன பார்த்தேன். ஒரு ஒற்றுமையும் இல்லை. ஆனா, Mask of Zorro போல் ஒரு காட்சியில் கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறார். துவக்கப் பந்தயப் போட்டி, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிடிக்காமல் பெண் ஓடுவது, மாப்பிள்ளை துரத்துவது எல்லாம் கில்லியை நினைவூட்டுகின்றன. துவக்க கடப்பா காட்சி தூள் படத் துவக்கக் காட்சியை நினைவூட்டுகின்றது.
* நான் கில்லியை மூன்று முறை திரையிலேயே பார்த்திருக்கிறேன். சச்சின் பல முறை பார்த்திருக்கிறேன். இன்று கூட விஜய் ரசிகரும் வந்திருந்தார். அவருக்கே குருவி பிடிக்கவில்லை. கில்லியில் இருந்த கால்வாசி வேகம், பொழுதுபோக்கு கூட குருவியில் இல்லை. இடைவேளையிலேயே எல்லாரும் நெளிய ஆரம்பித்து கைக்கடிகாரம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். படம் முடிந்த பிறகு “என்னடா காக்கா, குருவின்னு படம் எடுக்கிறீங்க” என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார். அவசரமாக படம் தயாரிக்கச் சொல்லி நெருக்கியதால் தான் இப்படிச் சொதப்பி விட்டார்கள் என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டார்.
**
தரணியை நம்பிப் போனால் ஏமாற்றி விட்டார். குருவி பார்த்து யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம். அடுத்து எந்தப் படத்தை நம்பிப் போய் தலையைக் கொடுக்கிறதுன்னு தெரியல. தலை வலிக்குது. ஏதாச்சும் நல்ல மெல்லிசைப் பாட்டா கேட்கணும்.
பி.கு – இணைய, அச்சு, காட்சி ஊடகங்கள் முதலிய எல்லாவற்றையும் முந்தி உலகிலேயே முதலாவதாக எழுதப்பட்ட குருவி திரை விமர்சனம் இதுவே 🙂 !!