கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி?

கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே. சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.

கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது எப்படி?
* கிரந்தம் தேவைப்படும் பிற மொழிச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இருந்தால் ஆளலாம்.

இஷ்டம் -> விருப்பம்.

சந்தோஷம் – > மகிழ்ச்சி

ஹேபிட் – > பழக்கம்

கஷ்டம் – > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல்

ஸ்மைல் – > புன்னகை

* ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றுக்குப் பதிலாகத் தமிழில் வழமையாக ஈடு கொடுக்கப்படும் எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.

வருஷம் – > வருடம்; வருசம். (ஆண்டு)

விஷயம் – > விசயம்; விதயம்; விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி (“சேதி”,) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும்)

விசேஷம் – > விசேசம்; விசேடம். (சிறப்பு, கொண்டாட்டம்)

விஷம் – > விசம், விடம் (நஞ்சு என்று தமிழில் சொல்லாம். விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி 🙂 )

ஷாந்தி -> சாந்தி

ஷங்கர் – > சங்கர்

ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் – > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்)

ராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி – > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி.  (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே)

மேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.

எழுத்துக்களை விடுத்து எழுதுவதற்குப் பின்வரும் விதிகளைப் பின்பற்றலாம்.

ஸ் – சு
ஸ – ச; ஸா – சா …

(விதிவிலக்காக சில இடங்களில் ஸ் – > சி ஆகும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்நேகா – > சிநேகா)

ஷ் – சு
ஷ – ச; ஷா – சா ..

ஜ் – சு
ஜ – ச; ஜா – சா ..

ஸ்ரீ – சிறி (அல்லது) சிரி

க்ஷ் – க்சு
க்ஷ – க்ச; க்ஷா – க்சா ..

ஹ் – சொல் முதலில் வந்தால் இகரம் கொண்டு எழுதவும்.

ஹ்ருதயம் – > இருதயம்

ஹ் – சொல்லின் இடையில், கடைசியில் வந்தால் புறக்கணிக்கவும்.

தேஹ்ராதூன் – > தேராதூன்
ஹ – சொல் முதலில் வந்தால் – > அ ( ஹ் புறக்கணித்து அதை ஒட்டிய உயிரொலியைக் கொள்ளவும்); ஹா – ஆ; ஹி – இ ..

ஹிந்து – இந்து; ஹனுமன் – அனுமன்; ஹோட்டல் – ஒட்டல்

ஹ் – சொல் இடையில் வந்தால் – >  க; ஹா – கா ..

மோஹன் – மோகன்; மஹாத்மா – மகாத்மா.

* பொருளுள்ள பெயர்ச்சொற்களுக்கு சீனம், சப்பானிய மொழி போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முற்காட்டு இருந்தால், நாமும் சொற்களை மொழிபெயர்த்து பொருள் விளங்குமாறு வழங்கத் தயங்கக்கூடாது.

* இடுகுறிப் பெயர்ச்சொற்களை இயன்ற வரை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி அடைப்புக்குறிகளில் ஆங்கிலம், மூல மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டலாம். ஒலிக்கோப்புகள் தரலாம்.