கையொப்பம்

பத்தாம் வகுப்பு வரை படித்த உறவினர் ஒருவர். ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டு வந்திருந்தார்.

“தமிழ்ல தான் கையெழுத்து போட்டேன். படிக்காத முட்டாள்னு நினைச்சிருப்பாங்க” என்றார்.

“படித்த அறிவாளிகளும்” தமிழில் கையொப்பம் இடத்தொடங்கினால் மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

என்ன செய்யலாம்?

* (ஏற்கனவே உள்ள ஆங்கிலக் கையொப்பத்தை மாற்ற இயலாதோர்) பணம் /அதிகாரம் தொடர்பற்ற இடங்களிலாவது தமிழிலேயே கையொப்பமிடலாம்.

* நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில்,  நம்மைச் சுற்றியுள்ள சிறுவர்களை, தமிழில் கையொப்பமிட ஊக்குவிக்கலாம். “தமிழனே தமிழ்ல கையெழுத்து போடாட்டி, வேற எவன் போடுவான்”னு என் தமிழ் ஆசிரியர் சொன்னதே நான் தமிழில் கையொப்பமிடுவதற்கான தூண்டுதல்.

Mummy

பக்கத்து வீட்டு அக்கா பையன் Mummyனு கூப்பிடுறத பார்த்து எரிச்சலா இருந்திச்சு.

“அக்கா, தமிழ் அது இதும்பீங்க. பேர் எல்லாம் கூட இனியன்னு தமிழ்ல வைச்சீங்க. இப்ப ஏன் Mummyன்னு கூப்பிடப் பழக்கினீங்க?”

“இல்லப்பா, சுதீசு சொல்றதைப் பார்த்து இவனும் பழகிட்டான்.”

சுதீசு முதல் பையன். தத்துப் பிள்ளை. அக்காவின் நாத்தனாரும் அவர் கணவரும் தற்கொலை செஞ்சுக்கிட்டதால, இவங்க எடுத்து வளர்க்கிறாங்க.

“சரி, சுதீசும் அம்மான்னு கூப்பிடுறது?”

“அம்மான்னு சொன்னா அவங்க அம்மா நினைவு வந்து அழ ஆரம்பிச்சுடுறான். Mummyனு சொன்னா அவனுக்குப் பரவால போல இருக்கு.ரெண்டும் பேரும் வேற வேற மாதிரி அழைக்க முடியுமா? என்னை Mummyன்னாலும் அவங்களை அப்பான்னு தான் அழைக்கிறாங்க”

“மன்னிச்சுக்கங்க அக்கா. தெரியாம கேட்டுட்டேன். அவங்க Mummyன்னே அழைக்கட்டும்”