வேர்ட்பிரெசு தமிழாக்கம் தந்த படிப்பினைகள்

டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்

டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெசு தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்:

1. வலை அடிப்படை தமிழாக்கம்

வலையில் தமிழாக்குவது பலருக்கும் இலகுவாக இருக்கிறது. po கோப்புகளை இறக்குவது, அதற்கான செயலிகளை நிறுவுவது என்பது பலரையும் மிரள வைக்கலாம். இந்த வலை அடிப்படைச் செயற்பாடில் அனைவரின் பங்களிப்புகளும் பதிவு செய்யப்படுவதும் வெளிப்படைத் தன்மை இருப்பதும் முக்கிய விசயங்கள்.

2. தமிழாக்கத் தளத்தின் எளிமை

நான் பார்த்த வரை மொழிபெயர்ப்புத் தளங்களில் http://translate.wordpress.com சிறப்பாக இருக்கிறது. கூகுள் மொழிபெயர்ப்புத் தளம் சுத்த சொதப்பல். உபுண்டுவுக்கு உதவும் Launch pad குழப்பமாக இருந்தது. இந்த முயற்சிகளில் இருந்து விலகிக் கொண்டதற்கு இந்தச் சொதப்பல் தளங்கள் ஒரு முக்கிய காரணம்.

3. Relaxed, native, community approach

தலைவர் என்று எவரும் இல்லாமல் எல்லாரையும் அரவணைத்துச் செயற்பட வேண்டும். தவறாகத் தமிழாக்கி விடுவோம் என்று பயந்தே பலர் பங்களிக்காமல் இருக்கலாம். அவர்களையும் ஊக்குவித்துப் பிழைகளைக் கண்டிக்காமல் கவனித்துத் திருத்த வேண்டும். சரத்தின் பொருளையும் சூழலையும் புரிந்து நம் பண்பாட்டுக்கு ஏற்ப எழுத ஊக்குவிக்க வேண்டும்.

4. தளம் முதலில் வெளிவரும் போதே தமிழ்ப்பதிப்பு கொண்டிருப்பது நன்று

தமிழ் விக்கிப்பீடியா எனக்கு அறிமுகமானது முதலே அதில் தமிழ் இடைமுகப்பைத் தான் கண்டு வருகிறேன். அதனால் அது மிக இயல்பாகவும் உறுத்தல் இன்றியும் இருக்கிறது. ஆனால், வேர்ட்பிரெசில் ஆங்கில இடைமுகப்புக்குப் பழகியவர்களுக்குத் திடீரென்று தமிழ் இடைமுகப்புக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள சிரமமாக இருக்கிறது. எனவே, ஒரு பன்மொழித் தளத்தை அறிமுகப்படுத்துகையில் எவ்வளவு விரைவாகத் தமிழாக்க முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து விட வேண்டும்.

5. தளத்தின் பயனர்களே தமிழாக்க வேண்டும்

வேர்ட்பிரெசு பயன்படுத்தாத சிலரும் தமிழார்வத்தின் காரணமாக கலந்து கொண்டார்கள். இதனால், இச்சரங்களின் பயன்பாட்டை உணராமல் சில பிழையான தமிழாக்கங்கள் நேர்ந்தன. எனவே, தமிழார்வத்தின் பேரால் ஏதாவது ஒரு தளத்தைத் தமிழாக்க முனையும் முன், இயன்றவரை அத்தளத்தைப் பயன்படுத்திப் பழகிக் கொள்வது நல்லது.

6. தமிழாக்குவதை விட தமிழிலேயே ஆக்குவது சிறந்தது

என்ன தான் சிறப்பாகத் தமிழாக்கினாலும் நிரலாக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பிற மொழிச் சரங்களை இயல்பாகத் தமிழாக்குவது சிரமமாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, வேர்ட்பிரெசு தமிழாக்கத்தில் on, by போன்ற சொற்களை எல்லாம் தனித்தனியே மொழிபெயர்க்கச் சொல்லி இருந்தார்கள். இவற்றை ஒன்று அப்படியே on, by என்று மொழிபெயர்க்காமல் விட வேண்டும். அல்லது, அன்று / மேல், ஆல் போன்று மொழிபெயர்க்க வேண்டும். இரண்டுமே சொதப்பல் தான். எல்லா இடங்களிலும், ஆங்கிலத்தில் நிரல் எழுதுவோர் பிற மொழிகளில் இலக்கண நெளிவு சுளிவுகளை உணர்ந்து நிரல் எழுதுவார்கள் என்று எதிர்ப்பார்க்க இயலாது.

இதற்கு என்ன தான் தீர்வு?

காலத்துக்கும், பிற மொழியினர் உருவாக்கிய செயலிகளைத் தமிழாக்கிக் கொண்டு மட்டும் இராமல், தமிழரே உலகத் தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கவும் அவற்றில் நேரடியாகத் தமிழ் மொழிக்கான சரங்களை எழுதவும், கூடவே அதை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து சந்தைப்படுத்த முனைவதும் தான் ஒரே தீர்வாக இருக்கும்.

வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்

நான் பயன்படுத்தும் வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள் பட்டியல்

நான் பயன்படுத்தும் வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்:

1.  Akismet – எரிதத் தடுப்புக்கு.

2.  Subscribe to Comments – வாசகர்கள் தங்கள் விருப்ப இடுகைகளின் மறுமொழிகளை மின்மடலில் பெற்றுக் கொள்ள.

3.  Automattic stats – WordPress.comல் கிடைப்பது போலே நம் தனித்தளத்தில் நிறுவப்பட்ட WordPressக்கும் அருமையான புள்ளிவிவரங்கள் பெற.

4.  All in one SEO pack, Google (XML) sitemaps generator – தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்ற.

5.  WordPress dashboard editor – கட்டுப்பாட்டகத்தில் உள்ள தேவையற்ற தகவல்களை நீக்க, புதிய வசதிகளைச் சேர்த்துக் கொள்ள.

6.  Exec-PHP – இடுகைப்பக்கங்களில் PHP கட்டளைகளை எழுத.

7.  Smart archives – தொகுப்புப் பக்கங்களை உருவாக்க.

8.  Simple Tags – குறிச்சொல் மேலாண்மை.

9.  Page links to – பக்கங்களை வேறு தளங்களுக்கு வழிமாற்ற.

10.  Search Everything

11.  Google Analytics for WordPress

12. Feedburner Feedsmith

WordPress சிலேபியைச் சாப்பிடுவது எப்படி?

WordPress 2.2வுக்கு இற்றைப்படுத்திய பின் வலைப்பதிவில் இருந்த தமிழ் எழுத்துகள் எல்லாம் சிலேபி சிலேபியாகத் தெரிந்து பதற வைத்து விட்டன. இந்தப் பிரச்சினை, WordPressஐ இற்றைப்படுத்திய எல்லா தமிழ் வலைப்பதிவர்களுக்கும் வரவில்லை. அப்படி பிரச்சினை வருபவர்களுக்கான தீர்வு கீழே:

wp-config.php கோப்பில்

define(‘DB_CHARSET’, ‘utf8’);
define(‘DB_COLLATE’, ”);

என்ற வரிகளைக் கண்டுபிடித்துப் பின்வருமாறு மாற்றவும்

//define(‘DB_CHARSET’, ‘utf8’);
//define(‘DB_COLLATE’, ”);

இந்தத் தீர்வைச் சொல்லித் தந்து பதிவில் பாலை வார்த்த VoWக்கு நன்றி 🙂

தொடர்புடைய உரையாடல்: WordPress சிலேபி பிரச்சினைக்கான தீர்வுகள் – ரவி மன்றம்

WordPress X Blogger

1. WordPress ஒரு கட்டற்ற மென்பொருள். மற்ற அனைத்து நன்மைகளுக்கும் இந்த சிறப்பே அடிப்படை. WordPress.comல் இலவசமாக வலைப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள இயல்வது போக, இம்மென்பொருளை பதிவிறக்கி நிறுவி நம் சொந்தத் தளத்தில் இருந்தும் வலைப்பதியலாம். WordPressன் புதிய பதிப்புகள் அடிக்கடி வெளியாவதால், அண்மைய வலைப்பதிவு நுட்பங்கள் உடனடியாகக் கிடைக்கும். WordPress உருவாக்கும் தன்னார்வலர் குழுவை அணுகி நமக்குத் தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள இயலும்.

2. எண்ணற்ற அழகழகான WordPress வார்ப்புருக்கள், பயனுள்ள நீட்சிகள் கிடைக்கின்றன. இந்த நீட்சிகள் மூலம் பல சிறப்பான வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

3. ஓடை வசதியுடன் கூடிய பகுப்புகள், குறிச்சொற்கள் இரண்டுமே உள்ளன. பகுப்புகளை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி வைக்கவும் முடியும்.

4. WordPress.comல் இணைந்திருக்கும் வலைப்பதிவுகளுக்கு மொழி வாரியாக வலைவாசல்கள். எடுத்துக்காட்டுக்கு, தமிழ் WordPress.com வலைப்பதிவுகளுக்கான வலைவாசலைப் பாருங்கள். தமிழ் WordPress.com தளத்தில் உள்ள ஒவ்வொரு குறிச்சொல்லுக்கும் ஒரு தனி முகப்புப் பக்கம், அதற்குத் தனி ஓடைகள் என்று வசதிகள் இருக்கின்றன.

5. மறுமொழி அளிப்பவர்களின் IP முகவரியைக் கண்காணிக்க இயலும். நமக்கு விருப்பமில்லாதவர்களின் IP முகவரி, பயனர் பெயரை எரிதமாகக் குறித்துத் தடை செய்யலாம். மிகச் சிறப்பான எரிதத் தடுப்பும் உண்டு.

6. சில வழுக்கள் காரணமாக பிளாகர் சில இடுகைகளை முழுங்கி விடக் கூடும். WordPressல் இப்படி நிகழ்வதில்லை.

7. WordPress Dashboardல் இருந்தே நாம் மறுமொழிகள் இட்ட இடங்களுக்கான இணைப்புகள், இன்றைய சிறந்த இடுகைகளுக்கான இணைப்புகள் முதலியவற்றைப் பெற இயலும்.

8. இடுகைகள் போக, தனிப் பக்கங்களாகவும் சேர்க்க இயலும்.

9. பதிவுக்கான வருகை விவரங்கள், ஓடைகளைப் பெறுபவர் குறித்த விவரங்களை WordPressஏ அளித்து விடுகிறது. தனியாக மெனக்கெட்டு, புள்ளிவிவரத் தளங்களில் போய் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

11. மறுமொழிகளை எளிதாகத் திருத்த இயலும். இது நான் அடிக்கடி பயன்படுத்தும் வசதி.

12. முத்தாய்ப்பாக, தமிழ் WordPress தளமும் வலைப்பதிவுகளும் தற்போது முழுமையாகத் தமிழிலேயே கிடைக்கின்றன.

WordPress பயனர்கள் அதிகம் விரும்பும் வசதிகள் குறித்து அறிய WordPress favourite features பார்க்கலாம். இன்னும் விரிவான விளக்கங்களுக்கு WordPress.com features பார்க்கவும்.

தனித்தளத்தில் WordPress நிறுவிப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது. ஆனால், WordPress.com தளத்தின் இலவசச் சேவை பயன்படுத்துபவர்களுக்கு சில கட்டுகள் இருக்கலாம். WordPress.comல் கூடுதல் சேமிப்பு இடம் போன்ற சில வசதிகள் பெற காசு கட்ட வேண்டி வரும்.


WordPress.com x WordPress.org
குறித்த விரிவான விளக்கங்களையும் பார்க்கவும்.

பெரும்பாலான தமிழ்ப் பதிவர்கள் பிளாகரைச் சுற்றி இயங்குவதால் பிளாகரில் ஏதேனும் வழு வந்தால் ஒட்டு மொத்தத் தமிழ்ப் பதிவுலகமும் பாதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, புது பிளாகருக்கு மாறிய போது வந்த ஜிலேபி எழுத்துப் பிரச்சினை.

சுற்றுச் சூழலாகட்டும், சமூகமாகட்டும் எங்குமே பல்வகைமை தேவைப்படுகிறது.

புதிதாக வலைப்பதிவுத் தொடங்குபவர்கள் WordPress.comல் முயலலாம். தனித்தளத்தில் இருந்து வலைப்பதிய விரும்புபவர்களும் பிளாகரில் ஏற்கனவே உள்ள இடுகைகளை இடம்பெயர்க்க இயலும்.

அருஞ்சொற்பொருள்

1. கட்டற்ற மென்பொருள் – free software
2. வார்ப்புரு – template
3. நீட்சி – plugin
4. குறிச்சொல் – tag
5. ஓடை – feed
6. வலைவாசல் – portal
7. திரட்டி – aggregator
8. எரிதம் – spam
9. பல்வகைமை – diversity