வேர்ட்பிரெசு தமிழாக்கம் தந்த படிப்பினைகள்

டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்

டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெசு தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்:

1. வலை அடிப்படை தமிழாக்கம்

வலையில் தமிழாக்குவது பலருக்கும் இலகுவாக இருக்கிறது. po கோப்புகளை இறக்குவது, அதற்கான செயலிகளை நிறுவுவது என்பது பலரையும் மிரள வைக்கலாம். இந்த வலை அடிப்படைச் செயற்பாடில் அனைவரின் பங்களிப்புகளும் பதிவு செய்யப்படுவதும் வெளிப்படைத் தன்மை இருப்பதும் முக்கிய விசயங்கள்.

2. தமிழாக்கத் தளத்தின் எளிமை

நான் பார்த்த வரை மொழிபெயர்ப்புத் தளங்களில் http://translate.wordpress.com சிறப்பாக இருக்கிறது. கூகுள் மொழிபெயர்ப்புத் தளம் சுத்த சொதப்பல். உபுண்டுவுக்கு உதவும் Launch pad குழப்பமாக இருந்தது. இந்த முயற்சிகளில் இருந்து விலகிக் கொண்டதற்கு இந்தச் சொதப்பல் தளங்கள் ஒரு முக்கிய காரணம்.

3. Relaxed, native, community approach

தலைவர் என்று எவரும் இல்லாமல் எல்லாரையும் அரவணைத்துச் செயற்பட வேண்டும். தவறாகத் தமிழாக்கி விடுவோம் என்று பயந்தே பலர் பங்களிக்காமல் இருக்கலாம். அவர்களையும் ஊக்குவித்துப் பிழைகளைக் கண்டிக்காமல் கவனித்துத் திருத்த வேண்டும். சரத்தின் பொருளையும் சூழலையும் புரிந்து நம் பண்பாட்டுக்கு ஏற்ப எழுத ஊக்குவிக்க வேண்டும்.

4. தளம் முதலில் வெளிவரும் போதே தமிழ்ப்பதிப்பு கொண்டிருப்பது நன்று

தமிழ் விக்கிப்பீடியா எனக்கு அறிமுகமானது முதலே அதில் தமிழ் இடைமுகப்பைத் தான் கண்டு வருகிறேன். அதனால் அது மிக இயல்பாகவும் உறுத்தல் இன்றியும் இருக்கிறது. ஆனால், வேர்ட்பிரெசில் ஆங்கில இடைமுகப்புக்குப் பழகியவர்களுக்குத் திடீரென்று தமிழ் இடைமுகப்புக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள சிரமமாக இருக்கிறது. எனவே, ஒரு பன்மொழித் தளத்தை அறிமுகப்படுத்துகையில் எவ்வளவு விரைவாகத் தமிழாக்க முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து விட வேண்டும்.

5. தளத்தின் பயனர்களே தமிழாக்க வேண்டும்

வேர்ட்பிரெசு பயன்படுத்தாத சிலரும் தமிழார்வத்தின் காரணமாக கலந்து கொண்டார்கள். இதனால், இச்சரங்களின் பயன்பாட்டை உணராமல் சில பிழையான தமிழாக்கங்கள் நேர்ந்தன. எனவே, தமிழார்வத்தின் பேரால் ஏதாவது ஒரு தளத்தைத் தமிழாக்க முனையும் முன், இயன்றவரை அத்தளத்தைப் பயன்படுத்திப் பழகிக் கொள்வது நல்லது.

6. தமிழாக்குவதை விட தமிழிலேயே ஆக்குவது சிறந்தது

என்ன தான் சிறப்பாகத் தமிழாக்கினாலும் நிரலாக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பிற மொழிச் சரங்களை இயல்பாகத் தமிழாக்குவது சிரமமாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, வேர்ட்பிரெசு தமிழாக்கத்தில் on, by போன்ற சொற்களை எல்லாம் தனித்தனியே மொழிபெயர்க்கச் சொல்லி இருந்தார்கள். இவற்றை ஒன்று அப்படியே on, by என்று மொழிபெயர்க்காமல் விட வேண்டும். அல்லது, அன்று / மேல், ஆல் போன்று மொழிபெயர்க்க வேண்டும். இரண்டுமே சொதப்பல் தான். எல்லா இடங்களிலும், ஆங்கிலத்தில் நிரல் எழுதுவோர் பிற மொழிகளில் இலக்கண நெளிவு சுளிவுகளை உணர்ந்து நிரல் எழுதுவார்கள் என்று எதிர்ப்பார்க்க இயலாது.

இதற்கு என்ன தான் தீர்வு?

காலத்துக்கும், பிற மொழியினர் உருவாக்கிய செயலிகளைத் தமிழாக்கிக் கொண்டு மட்டும் இராமல், தமிழரே உலகத் தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கவும் அவற்றில் நேரடியாகத் தமிழ் மொழிக்கான சரங்களை எழுதவும், கூடவே அதை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து சந்தைப்படுத்த முனைவதும் தான் ஒரே தீர்வாக இருக்கும்.