பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ

பள்ளிக்கூடம் – முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை.

இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா மாதிரி ஆகிடுவார். கவனம் தேவை.

தங்கர், சீமான், நரேன்-சிநேகா, ஸ்ரேயா-னு ஏகப்பட்ட புள்ளிகளைச் சுற்றி கதை முன்னும் பின்னுமாக அலைவது அலுப்பூட்டுக்கிறது. இந்த voice over narration உத்தியை எந்த புண்ணியவான் கண்டுபிடிச்சானோ சேரன், தங்கர் போன்றவர்கள் அதைத் தேவை இல்லா இடங்களில் எல்லாம் பயன்படுத்தி கடுப்பைக் கிளப்புறாங்க. காடு பதுங்குவோமே, மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தவிர இந்தப்படத்தில் மூனு பாடல்களுக்குத் தேவையே இல்லை. ஸ்ரேயா பாத்திரம், சின்ன சினேகா-நரேன் duetம் தேவையே இல்லை. கண்ணியமான திரைப்படம் குறித்து பேசும் தங்கர் எதற்கு “தடவித் தடவி” விடலைப் பிள்ளைகளுக்கு ஒரு duet வைக்கணும்? இப்படித் தடவித் தடவிக் காதலைக் காட்டுவதால் சினேகா-நரேன் பிரியும் போது பதைபதைப்போ சேர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போ இல்லை. கிளைக் கதைக்கு மேல் கதை வைச்சதால், உண்மையில் பள்ளிக் கூடம் கட்டப்படுமா என்று எல்லாம் படம் பார்க்கிற ஒருவருக்கும் கவலை வராது. தங்கர் சொல்ல விரும்புவதாக நினைக்கும் செய்தியும் போய் சேராது.

என்ன இருந்தாலும், ஒரு சில மண்ணின் மனிதர்களையாவது உண்மை முகத்துடன் காட்டுகிறார் என்பதற்காக மட்டுமே தங்கரின் படங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கிரீடம் – ok. ஒரு மறை time passக்குப் பார்க்கலாம்.

லியோனார்டோ டிகாப்ரியோவின் அழகு என்ன, நடிப்பு என்ன..ஹ்ம்ம்..தமிழ்நாட்டில் விஜயாகவோ மாதவனாகவோ பிறந்து இருந்தால் நல்லா வாழ்ந்திருக்க வேண்டியவர். அநியாயத்துக்கு நான் பார்க்கிற ஆங்கிலப் படத்துல எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு செத்துப் போறார். இல்லாட்டி, சோகமா இருக்கார்.

Black Diamond – இப்படி ஒரு உலகம், மனிதர்கள் இருப்பதே இந்தப் படம் பார்த்து தான் தெரியும். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இதுவே இந்தப் படத்தின் வெற்றி தான். சிறுவர்கள் போராளிகளை மாற்றப்படும் சூழல் நடுங்க வைக்குது !

The Departed – எப்படியும் டிகாப்ரியோ தபாலிச்சு வந்திருவாருன்னு பார்த்தா அநியாயமா டப் டப்புன்னு சுட்டுக் கதையை முடிச்சிடுறாங்க. அர்ஜூன், விஜயகாந்த் எல்லாம் இந்தப் படங்களைப் பார்க்க மாட்டாங்களா 😉

The Aviator – The Departed இயக்குனரே இயக்கியது. ஆனால், முற்றிலும் வேறுபட்ட கதைக்களம். தமிழில் இப்படி முந்தைய படங்களின் பாதிப்பு இல்லாமல் வேறுபட்டு இயக்குகிறவர்கள் மிகவும் குறைவு. புதியவர்களில் சுசி கணேசனும் லிங்குசாமியும் தான் உடனே நினைவுக்கு வருகிறவர்கள்.

மேலே உள்ள மூனும் டிகாப்ரியோ படங்கள். கண்டிப்பா பார்க்கலாம்.

அடுத்து வரும் இரண்டு படங்களும் பார்க்கப்பட வேண்டியவை தான். Superman, Science fiction வகையறா படங்களைக் காட்டிலும் மனிதர்களை அவர்கள் பலம், பலவீனத்துடன் காட்டும் நிகழ் வாழ்க்கை கதையுடைய படங்கள் பிடித்திருக்கின்றன.

Million dollar baby – நம்ம ஊரு மூத்த நடிகர்கள் எல்லாம் இந்த மாதிரி பாத்திரங்களில் நடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும் !! ஒரு பயிற்சியாளருக்கும் விளையாட்டு வீரருக்குமான அறிமுகம், அதைத் தாண்டிய நெகிழ்ச்சியான உறவாக மாறும் விதம் அருமை.

The Pursuit of Happyness – Will Smithம் அவருடைய மகனும் சேர்ந்து கலக்குறாங்க. அமெரிக்காவை அதன் இயல்போடு அறிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம், உற்சாகமும் முனைப்பும் தர்ற படம்.

மேல உள்ள படங்களை எல்லாம் பார்க்கும்போது தோணுறது ஒன்னு தான். தமிழ்த் திரைப்படங்கள் வெளிநாட்டு locationகள், வண்ண வண்ண setகள், ஏய்..ஊய் அலட்டகள், தெய்வீகக் காதல்கள் இதை எல்லாம் தாண்டி வெளிய வந்தா சொல்லப் படக்கூடிய, சொல்லப்பட வேண்டிய கதைகள் எத்தனையோ இருக்கு.

Derailed – இந்தப் படத்தைப் பார்க்கவே கொட்டாவி வருது. இதை வேற தமிழ், இந்தில உல்டா பண்ணி எடுக்கத் தோணுச்சோ மக்களுக்கு ! ஆனால், பிரம்மாண்டம் இல்லாமல் குறைந்த நிதியில் சுமாரான படம் எடுக்க இதைப் பார்த்து நம்ம ஆட்கள் கற்றுக் கொள்ளலாம்.

பொம்மரில்லு – ஆஹா..சூப்பர் படம் ! எப்படியும் நம்ம வீட்டுக்கு வர்ற மக்களுக்கு எல்லாம் போட்டுக்காட்டி பல காட்சிகள் ஓடப்போகுது..எத்தனை முறை வேணா சலிக்காமப் பார்க்கலாம்னு இருக்கு..தங்கத் தலைவி cute ஜெனிலியாவுக்காக இன்னும் பல முறை பார்க்கலாம். துறு துறு நாயகி வேடத்துக்கு தானைத் தலைவி லைலாவுக்குப் பிறகு ஜெனிலியா தான் முழுப் பொருத்தம். ஆந்திரா மக்களை நாம ஓட்டிக்கிட்டே இருந்த வேலைல அவங்க நல்ல பொழுது போக்குப் படங்கள் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க போல..இது மாதிரி வேற படம் தெரிஞ்சாலும் சொல்லுங்க.. ஆர்யா, கோதாவரி நல்ல திருட்டுப் பதிப்பு கிடைக்காம காத்திருக்க வேண்டியிருக்கு..இந்தப் படத்துக்கு tamiltorrents தளத்துல அருமையான டிவிடி பதிப்பு கிடைக்குது. இந்தப் படம் தமிழ்ல remake raja, ravi சகோதரர்கள் தயாரிப்புல வெளிவர இருக்கு. கண்டிப்பா வெற்றிப் படம் தான். ஜெயம் ரவி கூட remake படத்தில் நடிச்ச சதா, அசின், ஷ்ரேயா, த்ரிஷா-ன்னு எல்லாரும் முன்னணி நடிகைகளா வந்தத நினைக்கையில் ஜெனிலியாவுக்குத் தமிழ்லயும் ஒரு round கிடைக்கும்னு நம்ம பகுத்தறிவு சொல்லுது 🙂

ஒன்னுமில்லாத படத்தை ஊதிப் பெரிசாக்குறதும், நல்ல படத்தை பலரறியச்செய்யாம விட்டுடுறதும் தமிழ்த் திரைப்பட விமர்சகர்களுக்கு கை வந்த கலை.

பெரியார் – இதைப் பார்ப்பதற்குப் பதில் “பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்” என்று மணிமேகலைப் பதிப்பக 25 ரூபாய் நூல் ஏதும் இருந்தால் படித்து விட்டுப் போகலாம். காமராஜ் படத்தையும் இப்படித் தான் உப்பு சப்பில்லாமல் எடுத்துக் கவிழ்த்தார்கள். பாரதி படத்தின் 60ஆம் நாளில் கூட black ticket எடுத்துத் தான் பார்த்தோம். பாரதி என்ற ஒரு வரலாற்று நாயகனை வைத்து ரத்தமும் சதையுமாக அப்படி ஒரு அருமையான படத்தைத் தந்த ஞான ராஜசேகரனின் freedom of creativity இதில் முடக்கப்பட்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இரண்டு காரணங்கள் – பெரியார் போன்ற அரசியல் நாயகனின் வாழ்வை அனைத்து அரசியல் கட்சியனருக்கும் திருப்திகரமாக எடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் / மலைப்பு, அரசின் நிதியுதவிக்கு நன்றி உடையவனாக இருக்க வேண்டியிருப்பது. இப்படி 95 ஆண்டு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடக்க முற்படாமல் அவர் வாழ்வின் முக்கிய கால கட்டத்தை எடுத்துக் கொண்டு அதில் அவர் பண்பு, முக்கியத்துவம் வெளிப்படுமாறு செய்திருக்கலாம்.

தெளிவான வணிக வடிவத்திலும் இல்லாத இந்தப் படத்தில் பாடல்களைப் புகுத்தி நேரத்தை வீணடித்திருப்பது மன்னிக்க முடியாத பிழை. படத்தின் நடிகர் தேர்விலேயே கோட்டை விட்டு விட்டார் இயக்குனர். கடைசி வரை சத்யராஜ், மனோரமா, குஷ்பு என்று தான் என்னால் படத்தைப் பார்க்க முடிந்ததே தவிர அவர்களை வரலாற்றுப் பாத்திரங்களாகப் பார்க்க இயலவில்லை. மக்கள் மனதில் எந்த அறிமுகமும் இல்லாத நாடக நடிகர்களை வைத்து இன்னும் சிறப்பான அனுபவத்தைத் தந்திருக்க முடியும். மதன்பாப், Y.G மகேந்திரன், நிழல்கள் ரவி, சந்திரசேகர் என்று quota முறையில் நடிகர்கள் தேர்வு நடந்திருக்கும் போல..அம்பேத்காராக நடித்தவரைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. இது போன்ற comedy நடிகர்களையா இப்படி முக்கியமான பாத்திரங்களுக்கத் தேர்ர்வு செய்வது? இடைவேளைக்குப் பிறகு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு தலைவராக வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொரு காட்சியிலாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமையடா? 🙁 நல்ல தலைவரை முறையாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பை விட்டு விட்டார்கள். ஒரு பிரச்சாரப் படமாக இது பயன்படலாம். ஆனால், சாதாரணத் தமிழ்ச் சிறுவன் மனதில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. Life history படம் எடுப்பதில் நம்ம ஆட்கள் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும்.

சென்னை 600028 – இன்னொரு ஊதிப் பெரிசாக்கப்பட்ட படம். கதைக்களம், பாத்திரப் படைப்புகள் புதிது தான். ஆனால், தேவையில்லாத பாடல்கள், bore அடிக்கும் கிரிக்கெட் காட்சிகள் தவிர்த்து 50% படத்தை வேண்டுமானால் பார்க்கலாம். லகான் படத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு வாழ்வா சாவா ஆட்டமாக புத்திசாலித்தனமாக மாற்றி இருந்தார் இயக்குனர். அதில் பந்துக்குப் பந்து, வீரருக்கு வீரர் strategy, style மாறி நம் இதயத் துடிப்பை எகிற வைக்கும். இந்தப் படத்தில் கிரிக்கெட் காட்சிகள் ஏனோ விளம்பர இடைவேளை முன்னோட்டம் போல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பின்னணி இசை அதை விட கொடுமை. படத்தில் ரசித்த இரண்டே காட்சிகள் – சிறுவர்களிடம் பந்தயம் கட்டித் தோற்பது, சிவா சொல்லும் காதல் கவிதைக்கு குழந்தை அழுவது. இந்த Radio Mrichy சிவாவின் குறும்புக் குரலுக்கு நான் மிகப் பெரிய விசிறிங்கிறது துணைத் தகவல் 🙂

ஒக்கடு (கில்லி) – லைடன் மகேஷ்பாபு ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் யாம் அவரது பழைய படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். என்ன இருந்தாலும் தமிழனின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஒக்கடுவை விட பல மடங்கு நகாசு வேலைகளோடு, முக்கியமாக வீட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளை, கில்லியை அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச மாற்றங்களோடு ஈயடிச்சான் copy படங்கள் எடுப்பது எப்படி என்று அறிய இயக்குனர் ராஜா & co, சென்னைக் கிளையை அணுகவும். நுவ்வொஸ்தானந்தே நேனொத்தந்தா (இது தாங்க தெலுங்குப் படப் பெயர்!!!) -ன் தமிழ்ப்பதிப்பான Something Somethingல் கோழி, வாத்து பறப்பது கூட Frame பிசகாமல் copy அடிக்கப்படிருந்தது பார்த்துப் புல்லரித்துப் போனேன் 😉

உன்னாலே உன்னாலே – நல்லா இருக்கு. பின்பகுதி படத்தை 2,3 தடவை கூட தாராளமா பார்க்கலாம். கவர்ச்சி, ஆபாசம், சண்டை, மட்டமான நகைச்சுவை இல்லாமல யதார்த்தமாக ஒரு இளமை துள்ளும் படம். இதப் போய் ஏன் நல்லா இல்லை, கதை இல்லைன்னு நிறைய பேரு திட்டி விமர்சனம் எழுதுறாங்கன்னு புரில! 12 B, உள்ளம் கேட்குமேயும் பிடிச்சிருந்தது..ஒருத்திய மட்டும் காதலிச்சு அவளுக்காகப் பூச்சி மருந்து குடிச்சு சாகுறத எல்லாம் படிச்ச நகரத்து இளைஞர்கள் மறந்து ரொம்ப நாளாச்சு ! படத்துல உள்ள climax தான் யதார்த்தம். எத்தனை நாளைக்கு தான் ஆழமான கதை, அகலமான கதை, வித்தியாசமான கதைனு மக்களை அழ வைச்சுத் துன்புறுத்திக்கிட்டே இருக்கிறது? கொஞ்சம் இந்த மாதிரி சந்தோஷமாவும் இன்னும் நிறைய பேர் படம் எடுத்தா நல்லது.

Hotel Rwanda – ஈரக் குலையை நடுங்க வைக்கும் மனிதம் ததும்பும் உண்மைக் கதை படம்! எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்..ஆனா, ஒரு தடவைக்கு மேலப் பார்க்க கல் மனசா இருக்கணும் இல்ல திரைப்படக் கலை விரும்பியா இருக்கணும்..1994ல ருவாண்டாவுல 3 மாசத்துல பத்து இலட்சம் மக்களை இனப்படுகொலை செஞ்சிருக்காங்க ! இது குறித்த எந்த சொரணையும் இல்லாம இருந்திருக்கமேங்கிறது தான் பொட்டுல அடிச்ச மாதிரி உறுத்துது! இத எல்லாம் நம்ம வரலாற்றுப் பாடப் புத்தகங்கள்ல சேர்க்க மாட்டாங்களா?

Superman Returns – ஒன்னு புரிஞ்சு போச்சு. சிகப்பு, நீலக் கலர்ல பனியன், ஜட்டி design செஞ்சுட்டா நாமளும் Spiderman, Superman படங்களை எடுத்திடலாம். ஜட்டி விசயத்தில் எனக்கு முன் அனுபவம் இருக்கனால், ஜட்டிமேன்-னு கூட மூணு பாகம் எடுக்கலாம். கூடவே, ரஜினி பட heroism, பழைய முரளி பட காதல் sentiment எல்லாம் கலந்துக்கணும்.

Happy Feet – ஒரு முறை பார்க்கலாம். என்ன இருந்தாலும் Finding Nemo மாதிரி வராது ! இந்தப் படத்தை எல்லாம் நம்ம ஊர்ல மொழிமாற்றி விடுறாங்களா? விட்டா நல்லது தான்.

Lost in Translation – Mr. and Mrs. Iyer மாதிரி திருமணமான இருவருக்கு இடையில் மலரும் மெல்லிய அன்பு குறித்த கதை. நல்ல படம். ஒரு முறை பார்க்கலாம்.

Motorcycle Diaries – சே குவேரா அவருடைய நண்பருடன் செய்த Motorcycle பயணம் குறித்த diaryய அடிப்படையா வைச்சு எடுக்கப் பட்ட படம். ஒரு புரட்சியாளனின் கதையைப் பார்க்கிறோம் என்ற பிரமிப்பு அகலாமல் பார்க்கலாம். பிரச்சாரம் இல்லாத இயல்பான படப்பிடிப்பு. முழு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடைக்காமல் அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தை மட்டும் படம்பிடித்துக் காட்டி இருப்பது சிறப்பு.

Salam Namaste – முன் பாதி இரண்டு முறை பார்க்கலாம். சாயஃப் அலி, ப்ரீத்தி பிடிச்சவங்களுக்கு இந்தப் படம் நல்லாவே பிடிக்கும். இதில வர்ற இந்தியக் comedian கலக்கல்.

மொழி – அருமையான படம்!

பருத்தி வீரன் – பலரும் ஆஹா ஓஹோன்னு சொன்னாலும் எனக்கு ஒன்னும் தோணலை. மௌனம் பேசியதே அமீரோட நல்ல படம்னு நினைக்கிறேன். ராம் படமும் over hypeக்கு அப்புறம் பார்த்து புஸ்ஸுன்னு ஆயிடுச்சு. இந்தப் படத்துல பாட்டு எனக்கு என்னவோ எனக்கு ஒட்டவே இல்லை. இரண்டு நீளமான பல பகுதி flash back bore. செம சாதாரணமான கதை. கதையின் முடிவுக் காட்சி கோரம் தேவையில்லாதது. மண்டை வலி தான் மிச்சம். கதைல வர்ற சோகத்தால நாயகன், நாயகி மேல எந்த விதமான பரிதாபமும் வரல. இந்தப் படத்த இரண்டு வருசம் எடுக்க என்ன இருக்குன்னு தோணல. Not recommended for viewing

போக்கிரி (தமிழ்) – விஜய், அசின், வடிவேலுக்காக ஒரு முறை பார்க்கலாம். தெலுங்குப் படத்த remake பண்ணாலும் இப்படியா ஈயடிச்சான் copy அடிக்கிறது? இதே படத்துல மகேஷ் பாபு நடிச்சிருந்தா நல்லா இருக்கும். original படம் அளவுக்கு அதே வன்முறை. ஆனா, கூடுதல் கண்ணியமா எடுத்திருக்காங்க. வடிவேலு comedy நல்லா இருக்கு.

தாமிரபரணி – நாட்டாமை, நட்புக்காக காலத்து படம். bore அடிச்சா ஒரு முறை பார்க்கலாம். கதாநாயகி tv serial நடிக்கத் தான் தகுதின்னு தோணுது.

குரு (தமிழ்)சுத்த waste படம். aishwarya rai இனிமேலும் நாயகியா நடிக்கிறத நிறுத்திக்கணும். மணிரத்னம் தன் பழைய படத்தில இருந்தே காட்சிகளை remix பண்றத நிறுத்தணும்..

ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி?

இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

– பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் – எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

– சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும்.

பக்க எண் வாரியாகக் குறிப்புகள்:

1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் “ஜிலீர்” படத்தைப் போடவும்.

2. முழுப்பக்க வெளியாள் விளம்பரம்

3. இங்கு விகடன் தாத்தா படத்துடன் விகடன் பிரசுரத்துக்கான விளம்பரம் போடவும்.

4. இங்கு தலையங்கம் எழுத வேண்டும். இது மிகவும் எளிமையான ஒன்று. இறந்த யாருக்கும் ஒரு அஞ்சலி, ஏதாவது ஒரு அரசியல் நிகழ்வுக்குக் கண்டனம், யாருக்காவது அறிவுரை, எதற்காவது கவலை, பாராட்டு என்று வாரம் ஒன்றாக சுழற்சி முறையில் எழுதவும்.

5 – 8 . வெளியாக உள்ள புதுத் திரைப்படம் / பூசை போடப்பட்ட திரைப்படம் ஒன்றின் படங்கள், அதன் இயக்குனர் பேட்டியை வெளியிடவும்.

9. ஒரு பக்கச் சிறுகதை ஒன்று போடவும்.

10. பெண்கள் கல்லூரிப் பேட்டி ஒன்று போடவும். மாணவிகள் எல்லாம் கையைத் தூக்கியோ சைகைக் காட்டியோ எல்லாப் பல்லும் தெரிய pose தர வேண்டும். ஜீன்ஸ், சுரிதார் என்று வகைக்கு ஒன்றாக அணிந்திருக்க வேண்டும். இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் – அ) sms joke ஆ) பிடித்த நடிகர் இ) என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பெண்களின் படத்தை நன்றாக எடுத்து வருமாறு நிருபரை அறிவுறுத்தி அனுப்பவும்.

11 – 13. யாராவது ஒரு அறிவுஜீவியைக் கூப்பிட்டு எதையாவது எழுதச் சொல்லவும். இவர் ஏட்டிக்குப் போட்டியாக எழுதுதல் நலம். ஒரு உலக நடப்பை ஒப்பிடுவது, பிரபலத்தைச் சிலாகிப்பது ஆகியவை அவசியம்.

14 – 16 . ஒரு நையாண்டிக் கதை. இதில் அரசியல்வாதிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இடம்பெறுதல் நலம்.

17. ஒரு கேலிச் சித்திரம்.

18 – 20 . கேள்வி பதில் பகுதி.

இதில் வெளியிடப் பரிந்துரைக்கப்படும் கேள்விகள் – அ) முதலைக்கு மூக்கு இருக்கா? ஆ) மூன்றாம் மொகலாய மன்னனுக்கு எத்தனை மனைவிகள்? இ) xஐயும் yஐயும் ஒப்பிடவும் ஈ) அண்மையில் பார்த்த படம், படித்த புத்தகம் என்ன?

இங்கு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு பளப்பளா நடிகை படத்தை போடுங்கள். கேள்வி பதில்கள் அளவை விட படத்தின் அளவு பெரிதாக இருத்தல் நலம். தொப்புள் போன்ற பகுதிகளை சிறப்பாகக் காட்டினால் வாசகர் மகிழ்வார்.

21 – 23 . இலக்கியப் பகுதி.

இங்கு பிரபல இலக்கியவாதி தான் படித்த புத்தகம், போய்ப் பார்த்த ஊர்கள், கடந்து வந்த மனிதர்கள் குறித்து எழுத வேண்டும்.

24 – 27. திரை விமர்சனம்.

36ல் இருந்து 42க்குள் ஒரு மதிப்பெண் போடவும். camera பசுமையா இருக்கு, பாட்டு இன்னும் நல்லா போட்டிருக்கலாம், hero-heroine chemistry அருமை, இயக்குனருக்கு ஷொட்டு, ஹீரோயின் ஜிலீர் சோடா – போன்ற சில வரிகளை மாற்றி மாற்றி எழுதவும்.

28 – 32 . மன ஊக்கப் பகுதி.

ஒரு சாமியாரைக் கூப்பிட்டு package முறையில் தத்துவம் எழுத சொல்லவும். இவர் ஆண்டுக்கணக்கில் இதை எழுத வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்வது நன்று.

33 – 34. முழுப்பக்க வெளியாள் விளம்பரங்கள்.

35 – 37 புதுவரவான கேரள / மும்பை நடிகைகளின் பேட்டி. விகடனை நாம் கிண்டி முடிக்கப் போகும் நேரம் வந்து விட்டதால் படம் எப்படி போட வேண்டும் என்று இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இது வரையுள்ள குறிப்புகளை இன்னொரு முறை கிண்டிப் பழகவும்.

38 – 40 ஜல்லிப் பகுதி

வானம் ஏன் கீறல் விழுந்த மாதிரி தெரிகிறது, மொஹஞ்சதாரோ சிற்பங்களில் உள்ள அடவுகளை கணினிக்கு கொண்டு வர நிரல் எழுதுவது எப்படி, பழைய தமிழ் இலக்கியப் பாட்டுக்குப் பொருள் என்று கலந்து கட்டி ஜல்லி எழுத ஒரு நல்ல ஆளாகப் பிடிக்கவும்.

41 – 42 அரசியல்வாதி பேட்டி

வாரம் ஒரு முறை வைத்து, தமிழகத்தில் உள்ள 52க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களையும் பேட்டி எடுத்துப் போடவும். கேட்க வேண்டிய கேள்விகள் – அ) அணி மாறப் போறீங்களாமே? ஆ) உங்க வாரிசு இப்படியாமே? இ) விடுதலைப்புலி பத்தி என்ன சொல்லுறீங்க?

43 – 45 ஆன்மிகம்

ஒரு கோயில் படம். பயணக் குறிப்பு, தல புராணம். மகிமை.

46 – 48 திரைப்படத் துறை ஆட்களின் தொடர்.

இவர் அண்மையில் வெற்றி பெற்ற இயக்குனராகவோ சோத்துக்குத் திண்டாடும் பழைய நடிகராகவோ இருக்கலாம்.

49. வெளியாள் விளம்பரம்.

50. அட்டைப் பட விளம்பரம்.

கிண்டிய பின்:

– இந்த இதழில் கூடுதலாக திரைச் செய்திகள் வந்து விட்டதால் , இதை சினிமா ஸ்பெஷல் என்று அறிவிக்கவும். எல்லா இதழ்களிலும் இதே அளவு திரைச் செய்திகள் இருக்கும். ஆனால், அவற்றை பொங்கல் சிறப்பிதழ், தீபாவளிச் சிறப்பிதழ் என்று பெயர் மாற்றிக் கொள்ளவும்.

– ஜிலீர், பளீர், குற்றால குல்ஃபி, இளமை carnival போன்ற சொற்களைத் தூவி விடவும்.

பொதுவான சமையல் உத்திகள்:

– ஆண்டுக்கு ஒரு முறை newsprint விலை ஏறிவிட்டது என்று புலம்பி விலையேற்றிக் கொள்ளவும். கூடுதல் பக்கங்கள் தருவதாகச் சொல்லி அவற்றில் விளம்பரம் போடவும்.

– ஆறு மாதத்துக்கு ஒரு முறை விகடன் தாத்தா புதுத் தோற்றத்தில் வருவதாகச் சொல்லி அறிவிப்பு விடவும்.

– தீபாவளி, பொங்கலுக்கு இரட்டைச் சிறப்பிதழ் வெளியிடுவதாகச் சொல்லி 25 பக்க அளவில் இரு புத்தகங்கள் தரவும்.

– நேரம் கிடைக்கும்போது முன்பு நன்றாக இருந்த விகடன் படைப்புகளைத் தொகுத்து வைத்தால் தீபாவளி மலரை ஒப்பேற்ற உதவியாக இருக்கும்.

– எத்தனைப் பக்கங்களில் விகடன் கிண்டினாலும் இந்த formulaவை மாற்ற வேண்டாம்.

– எல்லாரும் இதே முறையில் கிண்டினாலும் விகடன் என்ற பெயர் எண்ணியல் நம்பிக்கைப்படி ராசியான ஒன்று. எனவே, கவலைப்படாமல் எப்படி வேண்டுமானாலும் கிண்டவும்.