ஒருங்குறி குறியாக்கத்தில் தமிழில் தோன்றும் வழுக்கள்

இன்று ஒருங்குறி குறியாக்கத்தில் அமைந்த தமிழ்த் தளம் ஒன்றில் Firefox உலாவி கொண்டு தேடுகையில் பின்வரும் வழுவைக் கண்டேன்.

உண்ட என்று தேடினால் உண்டு, உண்டான் உண்ட் என்ற எல்லா உண்+டகர வரிசைச்சொற்களையும் காட்டுகிறது. ஒருங்குறி குறியாக்கத்துக்கு  டா, டு, டி இவையெல்லாம் வேறு வேறு எழுத்துக்கள் என்று தெரியவில்லை. 

ஒருங்குறி குறியாக்கம் கணினியில் தமிழைக் காட்ட உதவும் அளவு கணித்தல் வேலைகளைச் செய்ய உதவவில்லை. எடுத்துக்காட்டுக்கு, திருக்குறளில் எத்தனை இடங்களில் உண்ட என்று வருகிறது என்று கணிக்க வேண்டுமானால் ஒருங்குறி குறியாக்கம் உதவப் போவதில்லை. match whole word என்று சொன்னால் தான் கொஞ்சமாவது துல்லியமான முடிவு கிடைக்கும். அதுவும் செய்யுள்களில் உரைநடை போல் ஒவ்வொரு சொல்லும் தெளிவாக முடியாமல் அடுத்த சொல்லுடன் இணைந்து இருக்கும் என்பதால், match whole word பல இடங்களில் உதவாமல் போகலாம்.

ஒரு ஆவணத்தில் பல இடங்களில் உள்ள ஒரே பிழையைக் கண்டு replace all கொடுக்கும்போதும் சிக்கல் வரும். எடுத்துக்காட்டுக்கு,
உண்ட உண்டு உண்டா என்று எழுதி

உண்ட வரும் இடங்களில் எல்லாம் உண்டா என்று மாற்றச் சொன்னால்,

உண்டா உண்டாு உண்டாா என்று தான் மாற்றங்கள் வரும்.

இந்த இடத்தில் match whole word only என்று கொடுக்க மறக்காமல் இருந்தால் சரியான முடிவுகள் வரும். ஆனால், இதுவும் செய்யுளில் உதை வாங்கலாம்.

ஒருங்குறி் குறியாக்கத்தில் தமிழில் தோன்றும் வழுக்கள், போதாமைகள் குறித்த அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இங்கு.

இந்தப் போதாமைகளில் சிலவற்றை வேறு இடங்களிலும் பார்த்த நினைவு. ஆனால், ஒரு குறிப்புக்காக இங்கு பதிகிறேன்.

தொடர்புடைய சில இடுகைகள்:

* ஒருங்குறிச் செருப்பு.

* கீதா கயீதா ஆன கதை.

* தமிழ் ஒருங்குறி – தேட்டைச் சிக்கல்

* தமிழ் எழுத்துக்கள் வரிசைப்படுத்தல்.