ரவி மன்றம்

தமிழ் இணையத்தில் மட்டுமல்லாது பொதுவாகவே மன்றங்கள் பக்கம் நான் எட்டிப் பார்ப்பது இல்லை. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லாத மன்ற இடைமுகப்புகள்.

வேர்ட்பிரெஸ் நிறுவனத்தில் இருந்து வரும் bbPress மென்பொருள் மன்றங்களில் உரையாடுவதை எளிதாக்குகிறது.

இதன் பயன்கள்:

* எளிமையான இடைமுகப்பு
* எளிமையான பயனர் கணக்கு உருவாக்கம். 10 நொடிகள் கூட ஆகாது.
* உரையாடல் தலைப்புகளைக் குறிச்சொற்கள் கொண்டு தொகுக்கலாம்.
* ஒவ்வொரு உரையாடல் தலைப்புக்கும் தனித்தனி ஓடை வசதி. எனவே மன்றத்துக்கு வராமலே உங்கள் விருப்ப உரையாடல்களை கூகுள் ரீடர் போன்றவற்றில் படிக்கலாம்.
* பிடித்த உரையாடல் தலைப்புகளை புத்தகக்குறியிடலாம்.

தமிழ் இணையத்தில் bbPress பயன்படுத்தும் மன்றங்கள் இருக்கின்றனவா தெரியவில்லை.

எனவே, சோதனை முயற்சியாக, ரவி மன்றம் தொடங்கி இருக்கிறேன்.

அனைவருக்குமான பயன்கள்:

என் வலைப்பதிவில் என்ன தலைப்பில் எழுதுகிறேனோ அதை ஒட்டியே நண்பர்களால் உரையாட இயல்கிறது. மன்றத்தில் என்றால் அவரவர் தங்களுக்குத் தேவையான தலைப்புகளைத் தொடங்கி உரையாடலாம். மட்டுறுத்தல் இருக்காது.

கணினி, இணையம், வலைப்பதிவு, தமிழ் முதலிய கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் உங்களுக்கு கேள்விகள் இருந்தால், உதவி தேவைப்பட்டால் மனத்தில் தெரிவியுங்கள். மன்றத்தில் உள்ள நண்பர்கள் விரைவாகப் பதில் சொல்லி உதவக்கூடும்.

தமிழ் இணையத்தில் கதை, கவிதை, நகைச்சுவைத் துணுக்குகளைப் பகிர, அரட்டை அடிக்க, முடிவே இல்லாத சூடான விவாதங்கள் செய்ய நிறையவே கருத்தாடல் மன்றங்கள் இருக்கின்றன. எனவே, அவற்றைப் போல இன்னுமொரு மன்றம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். இது ஒரு தகவல், கேள்வி-பதில், அறிவு மன்றமாக வளர்ந்தால் நன்றாக இருக்கும். (ரொம்ப தீவிரமாகப் போய் மண்டை காயாமல் இருக்க அவ்வப்போது இளைப்பாறுவதற்கும் சில அரட்டைத் தலைப்புகளைத் துவக்கலாம் 🙂 இது கோடைக்கால கொள்கைத் தள்ளுபடி 🙂 )

தனிப்பட்ட பயன்கள்:

வேர்ட்பிரெஸ், விக்கி, தமிழ்99, உபுண்டுன்னு பல பேருக்கு ஒரே கேள்விகளுக்குத் திரும்பத் திரும்ப பதில் சொல்லிக்கிட்டுருக்கேன். இவை என் மின்மடலிலும், அரட்டையிலும் இருப்பதால் பொதுப்பார்வைக்கு வருவதில்லை. இனி இவற்றை இந்த மன்றத்தில் செய்தால் பலருக்கும் பயன்படும். நீங்க கேக்கிற கேள்விக்கு எனக்கு விடை தெரியாட்டி தெரிஞ்ச மத்தவங்க உதவவும், விரைவா பதில் தரவும் உதவும். நான் தெரிஞ்சுக்க விரும்புற கேள்விகளையும் எழுதிப் போடலாம்.

எனவே, http://ravidreams.net/forum/register.php போய் 10 நொடியில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி மன்றத்தில் புகுந்து பார்த்து தனியாக Tea ஆத்திக் கொண்டிருப்பவருக்கு உதவ வேண்டுகிறேன் 😉