புதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா?

புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?

திண்ணையில், சோதிர்லதா கிரிசா எழுதிய தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும் கட்டுரை படியுங்கள்.

அக்கட்டுரையின் முக்கிய கருத்து:

* கங்கை என்பதை kangkai, gangai, gankai என்று பலவாறு பலுக்கிக் குழம்பலாம் என்பதால் g, d, dh, b போன்ற இத்தகைய குழப்பம் தரும் ஒலிகளுக்கு புதிய எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைச் சேர்க்கலாம். இப்படி பல புதிய எழுத்துக்களைப் பெறுவது பிற மொழியினரின் குழப்பத்தை நீக்கி தமிழைத் திக்கெட்டும் பரப்ப உதவும்.

சோதிர்லதாவுக்கு என் கேள்விகள்:

1. read என்று ஒரே மாதிரி எழுதி விட்டு நிகழ்காலத்தில் ரீட் என்கிறார்கள். இறந்த காலத்தில் ரெட் என்கிறார்கள். போதாதற்கு red நிறம் வேறு இருக்கிறது. character – கேரட்கடர் என்கிறார்கள். chalk – சாக் என்கிறார்கள். சொல்லின் முதலில் ch வந்தால் சா என்பதா கா என்பதா என்று குழப்புகிறது. இது போல் ஆங்கிலத்தில் பல குழப்பங்கள். இவற்றைத் தெளிவிக்க எந்த இலக்கண விதிகளும் இல்லை. இவை ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத எனக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இதை யாரிடம் சொல்லி எப்படி மாற்றுவது?

2. இந்தக் குழப்பங்களால் தமிழைக் கற்கச் சிரமமாக இருக்கிறது என்று எத்தனை இலட்சம் வேறு மொழித் தமிழ் மாணவர்கள் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியா+சீன மக்கள் தொகை 250 கோடி பில்லியன் மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை முன்னிட்டு ஆங்கிலத்தை நம் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாமா?

3. இந்தி இந்தியாவில் பரவியதற்கு அம்மொழியின் இனிமை காரணமா? இல்லை, அதனைத் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையும் அதற்குப் பின்னால் இருக்கும் நடுவண் அரசுக் கொள்கையும் காரணமா?

4. நீங்கள் சொல்லும் அத்தனை ஒலிகளையும் / எழுத்துக்களையும் கொண்டுள்ள ஒரு மொழி ஏன் வழக்கொழிந்து போனது?

சரி கேள்விகள் போதும்.

* ஒரு காலத்தில் இந்தியாவில் வடமொழித் தாக்கம் இருந்தது. ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் பிரெஞ்சும் தற்போது ஆங்கிலமும் உலக மொழிகளாக இருக்கின்றன. அடுத்து எந்த மொழி அதிகம் வழங்குமோ! இப்படி ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் வருகிறவர், போகிறவர், பிற மொழி மாணவர்களுக்காக எல்லாம் ஒரு மொழியின் இயல்பை மாற்ற முடியாது.

* ஒரு மொழி எவ்வளவு தான் கடினமாக இருக்கட்டுமே? அதை ஒழுங்காகக் கற்பிக்கத் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கற்றுக் கொள்வது தான் மாணவரின் அழகு. ஒரு கணிதத் தேற்றத்துக்கான நிறுவம் சிரமமாக இருக்கிறது என்று தேற்றத்தையே மாற்ற முடியுமா?

* முதலில் கேட்டு, பிறகு பேசி அதற்குப் பிறகு தான் வாசிப்பது என்னும் நிலைக்கு ஒரு மொழியின் மாணவன் வருகிறான், முதல் இரு நிலைகளிலேயே ஒவ்வொரு சொல்லும் எப்படி ஒலிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் சொற்களில் ஒலிப்பை இப்படித் தான் உணர்கின்றனவே தவிர, எழுத்துக்களைப் பார்த்து அல்ல. இது பிற மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் முறையை மாற்றுவதன் தேவையை உணர்த்துகிறதே தவிர, தமிழையே மாற்ற எந்தத் தேவையும் இல்லை.

* தமிழில் இன்ன ஒலிக்கு அடுத்து இன்ன ஒலிகள் தாம் வரலாம் என்று தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது தமிழின் சுமை இல்லை. அழகு. இது போன்ற இலக்கணம் எத்தனை மொழிகளுக்கு உண்டு? பள்ளிக்கூடம் வந்து கற்றறியாதோரும் அனுவத்தாலேயே இந்த இலக்கணத்தை அறிந்திருக்கின்றனர்.

* எந்த ஒரு மொழியின் அனைத்து ஒலிப்புகளையும் எல்லா பிற மொழிகளாலும் எழுதிக் காட்டி விட முடியாது. இது பிற மொழிகளின் குறை அன்று. அது அவற்றின் இயல்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்தனி உயிரினம் போல. ஒவ்வொரு மொழியின் தோற்றம், வளர்ச்சிக்குப் பின்னும் ஒரு உயிரினத்தின் பரிணாமத்தை ஒத்த கூறுகள் உள்ளன. “ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.

* செருமன் முதலிய உலக மொழிகள் எல்லாம் ஏற்கனவே இருக்கிற எழுத்துக்களைக் குறைத்துத் தான் வருகின்றனவே ஒழிய எந்த பெரிய மொழியும் புதிதாய் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதாய் தெரியவில்லை.

இது போன்று, “புது எழுத்துகளால் தமிழ் வளரும்”, என்ற பரப்புவோர் / பசப்புவோரிடம் பின்வரும் கேள்விகளுக்கு விடை சொல்லலாம்:

– இது போல் புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?

தொடர்புடைய இடுகைகள்:

இது குறித்து திண்ணையில் வெளிவந்த எனது விரிவான கடிதம்

சோதிர்லதா கிரிசாவின் எதிர்வினை

F

in tamil alsoவா?

தனியாக ஒரு தெலுங்குக்காரர் தமிழர்களிடம் மாட்டிக் கொண்டால் அவர் பாடு பெரும் பாடு தான். கருணையே இல்லாமல் GULTI, GOLTI என்று எவ்வளவு ஓட்டித் தள்ளினாலும், நட்புக்கு உலை வைக்காமல் சிரித்தபடியே தாங்கிக் கொள்ளும் நல்லவர்கள்.

பிரசாத் என்று ஆந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். பேசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால், “பிரசாத், what is that in telugu, what is this in telugu” என்று அவரைப் போட்டு புரட்டி எடுப்பது வழக்கம். 12ஆம் வகுப்பு வரை தெலுங்கு வழியத்தில் தான் படித்து இருக்கிறார். ஆனாலும், பல சமயங்களில் திணறுவார். அவர் ரொம்ப யோசித்தால் அதற்கான தமிழ் சொல்லுடன் +உ சேர்த்து சொல்வோம். இல்லை, புலம், பணி போன்ற தமிழ் சொற்களையே சொன்னால், முகம் மலர “in tamil also same word-ஆ” என்பார். “in tamil also இல்ல பிரசாத்..telugu also” என்று திருத்துவோம் 🙂 தமிழ் சொல் ஒத்து வராத வேளையில் அதற்கான வட மொழிச் சொல் சொன்னால் பொருந்தி வரும். அதுவும் இல்லாவிட்டால், ஆங்கிலத்தில் சொன்னால், “yes in telugu also we say like that only. we don have separate telugu word” என்பார். தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகியவற்றை நீக்கினால் தெலுங்கில் என்ன மிஞ்சும் என்றே தெரியவில்லை ! ஆனால், இதில் என்ன வசதி என்றால் நம்மைப் போன்ற அண்டை மொழிக் காரர்கள் அவர்கள் படங்கள், பாடல்கள், உரையாடல்களைக் கேட்கையில் வெகு இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே வேளை, தமிழிலும் ஆங்கிலம், வட மொழி என்று வகை தொகை இல்லாமல் கலந்து கொண்டே போனால் எங்கு போய் நிற்போம் என்பதற்கு கண் முன் சாட்சியாக எச்சரிக்கை மணியடிப்பதாகவும் இருக்கிறது.

எவ்வளவு தான் எடுத்துக்காட்டுகள் தந்தாலும், தெலுங்கு தமிழில் இருந்தும் தோன்றி இருக்கலாம் என்பதை ஒத்துக் கொள்ளவே மாட்டார். வடமொழியில் இருந்து தான் தெலுங்கு தோன்றியது என்று சொல்வதில் என்ன புளங்காகிதம் என்று புரியவில்லை. அவர்கள் பள்ளிக்கூடங்களில் சமசுகிருதப் பாடம், கவிதைகள் படித்தாலும் அதைத் தெலுங்கு எழுத்துகளில் எழுதித் தான் படித்ததாகச் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன் பயன்படாத சில தெலுங்கு எழுத்துக்களை அரசு நீக்கி விட்டதாகவும் சொன்னபோது ஆடிப்போனோம் ! தெலுங்கு மாதப் பெயர்களை அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. கேட்டால், பள்ளிக்கூடத்தில் எங்களுக்கு சொல்லித் தரவில்லை என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். மாதப் பெயர்களைக் கூடச் சொல்லித் தராமல் எப்படி ஒரு பாடத்திட்டம் இருக்கும்? இப்படி மொழி குறித்த அவர்கள் அணுகுமுறை, பார்வையில் பல ஆச்சரியங்கள் எங்களுக்கு. இன்னும் பலரிடம் பழகிப் பார்த்து இந்தக் கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தெலுங்கு, மலையாளம் என்று பிற மொழிகள் குறித்த ஆர்வத்துக்கு இன்னொரு காரணம் – தமிழில் காணாமல் போன பல பழஞ்சொற்கள் எப்படி அங்கு இன்னும் புழக்கத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் சுவாரசியம். முதலில் தெலுங்குச் சொல் என்று நினைத்துக் கொண்டிருந்த சில சொற்கள் அவ்வப்போது திருக்குறள் போன்ற இலக்கியங்களில் தலை காட்டும் போது வரும் மகிழ்ச்சியே தனி. புதிதாக ஏதோ புதையலைக் கண்டெடுத்த மாதிரி ! நேற்று இப்படி ஒரு சொல்லைக் கண்டெடுத்தேன். தெலுங்குல “நச்ச லேதா” அப்படின்னா “விருப்பமில்லையா”ன்னு பொருள். இதே பொருள்ல ஒரு திருக்குறளல் நச்ச என்ற சொல் வருகிறது !!

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
Kural 1008

Prose
When he whom no man loves exults in great prosperity,
‘Tis as when fruits in midmost of the town some poisonous tree.

Translation
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

ஆக, பிரசாத்தை ஓட்ட இன்னொரு tamil also word கிடைத்தது 🙂 நல்லா, நச்சுன்னு ஒரு சொல் தான், இல்ல 🙂