திரட்டிகளைச் சாராமல் பதிவுகளை அறிமுகப்படுத்துவது எப்படி?

தமிழ்த் திரட்டித் தளங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதில் கூகுள் ரீடரையும் நாமே உருவாக்கும் opml கோப்புகளையும் அறிமுகப்படுத்தினாலே நாளடைவில் திரட்டிகள் உதவியின்றி பதிவர்களால் இயங்க முடியும்.

நிறுவனப்படுத்தப்பட்டு வரும் தமிழ்ப் பதிவுலகத் திரட்டிகளைச் சாராமல் புதிய பதிவர்களுக்கு பதிவுகளை எப்படி அறிமுகப்பபடுத்துவது என்று நண்பர்களுடன் ஒரு உரையாடல் வந்தது.

அந்தக் கேள்விக்கு ஒரு விடையளிக்கும் முயற்சியாக மாற்று! பங்களிப்பாளர்கள் தொகுத்து விரும்பிப் படிக்கப்படும் 450+ பதிவுகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறோம்..

பார்க்க – http://blog.maatru.net/மாற்று-opml/

தமிழ்த் திரட்டித் தளங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதில் கூகுள் ரீடரையும் இது போன்று நாமே உருவாக்கும் opml கோப்புகளையும் அறிமுகப்படுத்தினாலே நாளடைவில் திரட்டிகள் உதவியின்றி பதிவர்களால் இயங்க முடியும் என்று நினைக்கிறேன்..

அன்புடன்
ரவி

மாற்று! எப்படி மாற்று?

மாற்று! தளத்தைப் பார்வையிட்ட நண்பர்கள் பலரும் கேட்ட கேள்வி, இத்தளம் எப்படி ஒரு மாற்றாக விளங்கும் என்பது தான். திரட்டிகள் என்ற அளவில் தமிழ்மணம், தேன்கூடு, TamilBlogs தளங்கள் இருப்பதும் பரிந்துரைத் தளங்களாக கில்லி, DesiPundit போன்ற தளங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேம்போக்காகப் பார்க்கையில், மாற்று! இன்னுமொரு தமிழ்த் தளமாகத் தெரியலாம் என்றாலும், இதன் தோற்றம், செயல்பாடு, நிர்வாகம், ஒருங்கிணைப்பு, தள வடிவமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் உண்டு.

வாசகருக்கான நன்மைகள்

* முழுக்கத் தமிழ் உள்ளடக்கம் உள்ள இடுகைகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படுகின்றன.
* வலைப்பதிவுகள் மட்டுமல்லாது http://www.varalaaru.com , http://www.bbc.co.uk/tamil/ , http://in.tamil.yahoo.com/index.htm , http://tamil.in.msn.com/ போன்று செய்தியோடை வசதி தரும் அனைத்துத் தமிழ்த் தளங்களில் இருந்தும் விருப்ப இடுகைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. விரைவில் எந்த ஒரு தமிழ்த் தளத்தில் இருந்தும் விருப்ப இடுகைகளை காட்சிப்படுத்த இருக்கிறோம்.
* விருப்ப இடுகைகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படுவதால், இடுகைகளின் உள்ளடக்கம், தரம் ஒருவராலாவது விரும்பப்பட்டும் உறுதிப்படுத்தப்பட்டுமே வெளிவருகிறது. இதனால், மதம், இனம், சாதி, மொழி, தேசம், தனி நபர் மற்றும் இன்ன பிற அடிப்படைகளில் வெறுப்புமிழக்கூடிய இடுகைகள், கண்ணியக் குறைவாக எழுதப்பட்ட இடுகைகளை 99.9% மாற்று! தளத்தில் காண இயலாது.
* தானியக்கத் திரட்டிகளில் இணைக்கப்படாத வலைப்பதிவுகளின் இடுகைகளையும் இங்கு காணலாம். ஒரு பதிவரின் ஒவ்வொரு இடுகையும் படிக்கப்பட்டே பகிர்வதால் தரம், சுவை, பயன் மிகவும் குறைந்த இடுகைகளை காண்பது குறைவாக இருக்கும்.
* 40க்கும் மேற்பட்ட தலைப்புகள் வாரியாக பகுக்கப்பட்டு காட்சிப்படுத்தும் வசதி.
* பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட இடுகைகளுக்கு தாரகைப் புள்ளிகள் வழங்குகிறோம். இதனால், மாற்றில் இடுகைகளைப் பார்வையிடும்போதே பெரிதும் விரும்பப்பட்ட இடுகைகளை இனங்காணலாம்.
* முடிவில்லாமல் பின்னோக்கி இடுகைகளைப் படித்துக் கொண்டே செல்லும் வசதி. இதனால் பகுப்புகள், தாரகைப் புள்ளிகள் அடிப்படையில் மிகப் பழைய இடுகைகளையும் தொடர்ந்து படிக்கலாம்.
* எளிமையான, கண்ணை உறுத்தாத, விளம்பரங்கள் இல்லாத பக்க வடிவமைப்பு.
* தானியக்கத் திரட்டிகளின் உள்ளடக்கத்தை எழுத்தாளர்கள் தீர்மானிக்கிறார்கள். ஆனால், மாற்று!-ன் உள்ளடக்கத்தை வாசகர்களே தீர்மானிக்கிறார்கள். இதனால், supplier dictated medium என்பதில் இருந்து மாறி user dictated medium ஆக வாசகரை மையமாக வைத்து மாற்று! செயல்படுகிறது.

இதன் மூலம் கட்டற்ற வாசிப்பனுபவத்தை ஊக்குவிக்க முயல்கிறோம். மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் தரம் உறுதிப்படுத்தப்பட்ட இடுகைகள் எவ்வளவு இருந்தாலும் அவ்வளவையும் எண்ணிக்கை கட்டின்றி காட்சிப்படுத்த முனைகிறோம்.

சிறப்பான ஓடை வசதி:

* மாற்று தளத்தின் செய்தியோடையை இந்த முகவரியில் காணலாம். தாரகைகள் மட்டுமுள்ள செய்தியோடை – http://www.maatru.net/feed.php?tag=starred
பகுப்பு வாரியான செய்தியோடைகள் –
எடுத்துக்காட்டுக்கு, ‘தமிழ்’ என்ற பகுப்புக்கு http://www.maatru.net/feed.php?category=தமிழ்
என்ற முகவரியைப் பயன்படுத்த வேண்டும்.

வலைப்பதிவருக்கான நன்மைகள்

* மாற்று!-ல் தங்கள் தளத்தை இணைக்க என வலைப்பதிவர்கள் ஒரு நிரலையும் இணைத்துக் கொள்ளத் தேவை இல்லை. இதனால், அவர்கள் வலைப்பதிவின் வேகத்தை மாற்று! தளத்தில் இணைந்திருத்தல் பாதிக்காது. நிரல் ஏதும் இல்லாததால் அவர்கள் எந்த வலைப்பதிவு மென்பொருளைக் கொண்டும் வலைப்பதியலாம். தங்கள் வலைப்பதிவுகளை மாற்றில் இணைக்கச் சொல்லி விண்ணப்பிக்கவோ காத்திருக்கவோ தேவையில்லை. மாற்றுக்கு இணைப்பு தரத் தேவையில்லை. ஒவ்வொரு புது இடுகைக்கும் மாற்றுக்குத் தெரிவிக்கத் தேவையில்லை. துறை வாரியாகவும் தாரகைப் புள்ளி வாரியாகவும் இடுகைகளை காட்சிப்படுத்துவதால் சிறப்பாக வலைப்பதிபவர்களுக்கு கூடுதல் வெளிச்சமும் ஊக்கமும் கிடைக்கும்.

ஒவ்வொரு இடுகையாகத் தான் பகிர்கிறோம் என்பதால், ஒரு தமிழ்த் திரட்டியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக பதிவர்கள் தங்களின் ஒரு பதிவு முழுவதும் தமிழில் மட்டுமே எழுத வேண்டிய கட்டாயம் இல்லை.

இதன் மூலம் கட்டற்ற வலைப்பதிதலை ஊக்குவிக்க முனைகிறோம்.

பதிவர்கள் தங்கள் வலைப்பதிவின் பக்கப்பட்டையில் தமிழ் வலைப்பதிவுகளின் செய்தி ஓடை தருவது வழக்கம். மாற்று! குறிச்சொல் ஓடைகளைப் பயன்படுத்தி துறை சார் ஓடைகளை வலைப்பதிவுகளில் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, என் கணிமை வலைப்பதிவில் கணினி, இணையம் குறித்த ஓடைகளைத் தந்திருக்கிறேன்.

தள நிர்வாகம், செயல்பாடு, ஒருங்கிணைப்பு

தளம் துவங்கியதில் இருந்து இன்று வரையும் என்றும் இது ஒரு கூட்டு முயற்சியாகும். தளத்துக்கான ஆலோசனைகள், நிரலாக்கம், வடிவமைப்பு ஆகியவை அனைத்தும் மாற்று! பங்களிப்பாளர்களின் கூட்டு முயற்சியாகும். மாற்று!-ல் பங்களிப்பாளராக ஆவதற்கென்று சிறப்புத் தகுதிகள் ஏதும் இல்லை. மாற்று! கொள்கைகளுக்கு உட்பட்டு இணக்க முறையில் ஒரு குழுவாகப் பங்களிக்கக்கூடிய அனைவரையும் மாற்று! தளத்திற்குப் பங்களிக்க வரவேற்கிறோம். தற்போதைய மாற்று! பங்களிப்பாளர்கள் எவரும் தனிப்பட்ட முறையில் பெரிதும் அறிமுகமானவர்களோ முகம் பார்த்துக் கொண்டவர்களோ இல்லை. எனினும், நேர்மறையான தமிழிணையச் சூழல் என்ற நன்னோக்கத்தை முன்னிறுத்தி இணைந்திருக்கிறோம். தளத்துக்குத் தலைவர், நிர்வாகி, முடிவெடுப்பவர், உரிமையாளர் என்று தனியாக யாரும் கிடையாது. கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே செயல்படுகிறோம். தளம் குறித்த அனைத்து செயல்பாடுகளையும், இடுகைகளின் தரம் குறித்த கருத்து வேறுபாடுகளையும் திறந்த நிலையில் உரையாடுகிறோம்.

ஒருவர் மாற்று! பங்களிப்பாளர் ஆன பின் அவரது இடுகைகளை காட்சிப்படுத்துவதைத் தவிர்க்கிறோம். இதனால், எங்கள் இடுகைகளை நாங்களே விளம்பரப்படுத்தாமல் இருக்க முனைகிறோம்.

இது ஒரு கூட்டு முயற்சி என்பதால் என்றும் ஒரு வணிக நோக்கமற்ற, விளம்பரங்கள் இல்லாத ஒரு தளமாக இருக்கும்.
பெயரளவில் கூட .net ஆக இருப்பதைக் கவனிக்கவும். .com இல்லை.

தமிழிணையச் சூழலில் உள்ளடக்கம், செயல்பாடு, பங்களிப்பு ஆகியவற்றில் மாறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கொண்டு வர மாற்று! முனைகிறது. இதன் மூலம் Quality, Change (வினை) , alternative என்ற பொருள் தரும் மாற்று! என்னும் சொல்லுக்கு ஏற்ப ஒரு ஆக்கப்பூர்வமான தமிழிணையச்சூழலைக் கொண்டு வர முயல்கிறோம்.

செயல்பாட்டு அளவில், பரிந்துரைக்கத்தக்க இடுகைகளின் கட்டற்ற திரட்டியாக மாற்று! விளங்கும்.