கையொப்பம்

பத்தாம் வகுப்பு வரை படித்த உறவினர் ஒருவர். ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டு வந்திருந்தார்.

“தமிழ்ல தான் கையெழுத்து போட்டேன். படிக்காத முட்டாள்னு நினைச்சிருப்பாங்க” என்றார்.

“படித்த அறிவாளிகளும்” தமிழில் கையொப்பம் இடத்தொடங்கினால் மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

என்ன செய்யலாம்?

* (ஏற்கனவே உள்ள ஆங்கிலக் கையொப்பத்தை மாற்ற இயலாதோர்) பணம் /அதிகாரம் தொடர்பற்ற இடங்களிலாவது தமிழிலேயே கையொப்பமிடலாம்.

* நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில்,  நம்மைச் சுற்றியுள்ள சிறுவர்களை, தமிழில் கையொப்பமிட ஊக்குவிக்கலாம். “தமிழனே தமிழ்ல கையெழுத்து போடாட்டி, வேற எவன் போடுவான்”னு என் தமிழ் ஆசிரியர் சொன்னதே நான் தமிழில் கையொப்பமிடுவதற்கான தூண்டுதல்.

வாழ்த்துகள்

இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.

இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?

இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.

இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?

இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயேர்கள் வேளைக்கு ஏற்ப வாழ்த்து சொல்வதைப் பார்த்து நாமும் சூடு போடத் தொடங்கிய தமிழ்ப்’படுத்தல்’, எல்லாவற்றுக்கும் ‘வாழ்த்து’ சொல்கிறேன் பேர்வழி என்று போய் முடிகிறது.

எடுத்துக்காட்டுக்கு,

Happy Pongal – ஆங்கில வழக்கம்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் – ஆங்கில வழக்கத்தின் ‘தமிழ்ப்படுத்தல்’?

பொங்கலோ பொங்கல் – தொல் தமிழர் வழக்கம்?

**

வேற என்னவெல்லாம் வருங்காலத்தில் தமிழ்ப்படுத்தலாம்?

Have a nice weekend –  இனிய வாரக்கடைசி வாழ்த்துக்கள் / உங்கள் வாரக்கடைசி இனிதே அமைக !

Bon appetite – இனிதே சாப்பிட வாழ்த்துக்கள் !

😉

**

நீடுழி வாழ்க, நல்லா இருப்பா, மகராசனா இருப்பா போன்ற தமிழ் வாழ்த்துக்கள் எல்லாம் வினைச்சொற்களாக இருப்பதைக் கவனிக்க இயல்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள், மண நாள் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ‘வாழ்த்துக்கள்’ என்ற பெயர்ச்சொல் கூடி வருவன எல்லாம் ஆங்கில வாழ்த்துச் சொற்றொடர்களின் ‘தமிழ்ப்படுத்தலாகவே’ தோன்றுகின்றன.

**

வாழ்த்து சொல்வது, நன்றி சொல்வது முதலியவை நல்ல பழக்கங்கள் என்று நம் சிறு பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிறோம். ஆனால், நம் ஊர்களில் ஏன் இந்தப் பழக்கம் குறைவாக இருக்கிறது? குறிப்பாக, கடைகளில் நமக்கு சேவை ஆற்றுவோருக்கு நாம் ஏன் நன்றி சொல்வதில்லை? அவர்களும் ஏன் ஒரு சிறு புன்னகையும் சிந்தாமல் வேலை செய்கிறார்கள்?

கூட்ட நெரிசல் ஒரு முக்கிய காரணம். இன்னொரு முக்கிய காரணமாக என்ன தோன்றுகிறது என்றால், நம் பண்பாட்டில் சொல்லப்படுவதை விட உணரப்படுவது முக்கியமானதாக இருக்கலாம். குறிப்பாக, நன்றி நவிலல். நன்றி சொல்வதை விட நன்றி உடையவனாக வாழ்வதையே நம் பண்பாடு சிறப்பித்துக் கூறுகிறதோ?

முற்காலங்களில் சிற்றூர்களில் குழுமி வாழ்ந்த போது அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்களோ உறவுகளாகவோ இருந்திருக்கலாம். அந்த ஊரின் பணிகளை ஆளாளுக்குப் பகிர்ந்து செய்திருக்கலாம். எனவே, ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லும் அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாமோ?