வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி?

ஆர்வமுள்ள ஒரு துறை, தொடர்ந்து வலைப்பதிதல், பிற ஆர்வலர்களுடன் உறவாடல், பணம் ஈட்டுவது குறித்து தெளிவான திட்டமிடலும் முயற்சியும் இருந்தால் வலைப்பதிவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன.

நேரடி வழிகள்

1. வலைப்பதிவில் விளம்பரம்

வலைப்பதிவில் பணம் என்றால் பலரும் புரிந்து கொள்வந்து இந்த நேரடி வழியைத் தான்.  வலைப்பதிவு ஆங்கிலத்தில் இருந்தால் கூடுதல் வாய்ப்புகள். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் வருகைகள் வேண்டும். Adsense, தட்டி விளம்பரங்கள், தொடுப்பு விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டலாம். தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது மாணவர் சங்கர் கணேசு Adsense மூலமாக மட்டுமே ஒவ்வொரு மாதமும் 20,000+ பணம் ஈட்டுகிறார்.

2. விளம்பர இடுகைகள்

சில நிறுவனங்களின் பொருட்களைப் பற்றி வலைப்பதிவில் எழுத காசு தருகிறார்கள்.  விளம்பர இடுகைகள் எழுதும் மயூரேசன் கூடுதல் தகவல் தரலாம்.

3. முகவர் திட்டங்கள்

வாசகர்களுக்குப் பயனுள்ள பொருட்களின் முகவர்களாகச் செயல்படலாம். எடுத்துக்காட்டுக்கு, Amazon புத்தக முகவர் திட்டம்,  Hostgator வலையிட வழங்கி முகவர் திட்டம். வாசகர்கள் இந்த தொடுப்புகளை அழுத்திச் சென்று பொருட்களைப் பெறும் போது, நமக்கு ஒரு பங்குத் தொகை கிடைக்கும். இதற்குப் பெரிய அளவில் வாசகர்கள் வேண்டும் என்றில்லை. வழக்கமாக இந்தப் பொருட்களை நம் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் போது கூட இந்தத் தொடுப்புகளை அழுத்தி வாங்கச் சொல்லலாம்.

4. வலைப்பதிவு விற்பனை

நிறைய வாசகர்கள் ஒரு சமூகமாகப் பங்கெடுக்கும், பணம் ஈட்ட வாய்ப்புள்ள ஒரு வலைப்பதிவை உருவாக்கினால், அதை விலை கொடுத்து வாங்குவதற்கு ஆட்கள் உண்டு. மிக இலகுவாக, 500 அமெரிக்க டாலர் தொடக்கம் எந்த விலைக்கும் விற்க இயலும்.

மறைமுக வழிகள்

மேற்குறிப்பிட்ட நேரடி வழிகள் பலவும் அதிக வாசகர் வட்டம் உடைய ஆங்கில வலைப்பதிவுகளுக்கே பொருந்துபவை. ஆனால், ஓரளவு அறிமுகமான தமிழ் வலைப்பதிவுகள் மூலமும் கூட பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

5. வலைப்பதிவு நுட்ப வேலை வாய்ப்புகள்

வேர்டுபிரெசு மென்பொருளை உங்கள் சொந்தத் தளத்தில் நிறுவி வலைப்பதிகிறீர்களா? வலைப்பதிவு நிறுவல், இற்றைப்படுத்தல், பராமரப்பு, பரப்புதல் ஆகியவற்றில் அனுபவம் உண்டா? வலைப்பதிவு வடிவமைப்பு, வரை கலை வடிவமைப்பு, நிரலாக்கம் ஆகியவற்றில் தேர்ச்சி உண்டா? இத்துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஊரோடி பகீ, நான் உட்பட சில தமிழ் வலைப்பதிவர்கள் இது போன்ற WordPress நிறுவல் வேலைகளை எடுத்துச் செய்கிறோம்.

6. வலைப்பதிவு எழுத்து வேலை

பல தொழில் முனைவர்கள் தொழில்முறையில் வலைப்பதிவுகளைத் தொடங்கி அவற்றில் கட்டுரைகள் எழுத எழுத்தாளர்களைத் தேடுகிறார்கள். ஒரு கட்டுரைக்கு 2 அமெரிக்க டாலர் முதல் 200 அமெரிக்க டாலர் வரை வாய்ப்புகள் உள்ளன.

7. தொழில் வளர்ச்சிக்கு வலைப்பதிதல்

நமது தொழில் குறித்த விழிப்புணர்வு, விளம்பர வாய்ப்புகளுக்கும் வலைப்பதிவைப் பயன்படுத்தலாம். நேரடியாக உற்பத்தியாளரிடம் பேசித் தெளிவு பெற இயல்வதால் நம்பகத் தன்மை கூடி கூடுதல் விற்பனைக்கு உதவும். எடுத்துக்காட்டுக்கு, பதிப்புத் தொழில், தனது பதிப்பகம் குறித்து எழுதும் பத்ரி.

8. துறை வல்லுனராகும் வாய்ப்புகள்

நமக்கு ஈடுபாடுள்ள துறை, வேலை குறித்து தொடர்ந்து வலைப்பதிவதன் மூலம்  நம் திறமைகளைக் காட்சிப்படுத்தி புதிய வாய்ப்புகளை வெல்ல இயலும்.  வலைப்பதிவராகத் தொடங்கி அதன் மூலம் இன்று நூல் வெளியிடத் தொடங்கி உள்ளவர்கள், அச்சு ஊடகங்களில் தொடர்கள் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, லக்கிலுக் ஒரு எழுத்தாளராக வளரத் தொடங்கி உள்ளார். விக்கி, தானூர்திகள் துறையில் இந்திய அளவில் மதிப்புக்குரிய வலைப்பதிவராக உள்ளார்.
தொடர்புடைய இடுகைகள்:

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 1

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 2

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 3

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 4