பேச்சுத் தமிழ்

நேத்து கல்லூரி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசினேன். என்னோட பதிவுகளைப் படிச்சு பிடிச்சுப் போய், “ரவிசங்கர், இனி நாம் தூய தமிழிலேயே பேசுவோம், சரியா?” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரம் “தூய” தமிழில் பேசப் பார்த்தான். அதைத் “தூய” தமிழ்னு சொல்லுறத விட உரைநடைத் தமிழ் / மேடைப் பேச்சுத் தமிழ் / மேடை நாடகத் தமிழ் / பழங்காலத் திரைப்படத் தமிழ் – னு சொல்லலாம்.

அவன் கிட்ட நான் பகிர்ந்துகிட்ட கருத்துக்களும் அதுக்கு அப்புறம் மனசில தோணினதும்:

* பேச்சுத் தமிழ் வேற. உரைநடைத் தமிழ் வேற. தமிழ்ல எல்லா காலத்திலயும் இது ரெண்டுக்கும் தெளிவான வேறுபாடு இருந்திருக்கு. தமிழ் தொடர்ந்து நிலைச்சு நிக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம். இதை Diglossia அப்படிங்கிறாங்க. ஒரு மொழியோட பயன்பாடு இளக்கத்தன்மையோட இருக்க இது முக்கியம்.

* நல்ல தமிழில் பேசுறதுங்கிறது உரைநடைத் தமிழ்ல பேசுறது இல்ல. அப்படி பேசுறது செயற்கையாவும் உறுத்தலாவும் அமைஞ்சிடுது. இதனாலேயே நல்ல தமிழ் பேச நினைக்கிறவங்களைப் பார்த்து மத்தவங்க கேலியும் கிண்டலும் செய்ய வாய்ப்பாயிடுது.

ஆங்கிலமே அறியாத நாட்டுப்புறத்துக் காரங்க பேசுறது முழுக்கத் தமிழ் தான். ஆனா, ரொம்ப ஆராஞ்சு பார்த்தா ஒழிய அவங்க ஆங்கிலம் கலக்காம பேசுறாங்கங்கிறது நமக்கு தோணவே தோணாது. தமிழ்ல பேசுறோங்கிறதே உறுத்தாம பேசுறது தான் நல்ல தமிழ். மிச்ச எல்லாம் மொழிபெயர்ப்புத் தமிழ் தான்.

– புது சொற்களைக் கடன் வாங்குறத விட இருக்கிற சொற்களையே பயன்படுத்தாம விடுறது தான் பெரிய ஆபத்து. Current trends in Nonotechnology போன்ற விசயங்களை எல்லாம் தமிழ்ல பேச முற்படுறதுக்கு முன்னாடி, எனக்கு Call பண்ணு, ஒரு walk போனேன்னு சொல்லுறதையாவது மாத்தி தமிழ்ல பேசப் பார்க்கணும். ஏற்கனவே தமிழ்ல இருக்க இலகுவான விசயங்களைத் தமிழ்ல பேசினாலே போதும். பாதித் தமிழைக் காப்பாத்திடலாம்.

– தமிழ்ல பேசும் போது மட்டும், “language is just a communication medium, அடுத்தவனுக்கு நாம சொல்லுறது புரிஞ்சா போதும்”னு சாக்குப் போக்கு சொல்றோம். ஆனா, ஒரு தமிழர் கிட்ட ஆங்கிலத்தில பேசம்போது கூட ஏன் “i was நடந்துfyingனு” சொல்லுறதில்லை? அப்படி சொன்னாலும் அவருக்குப் புரியும் தானே? ஏன்னா, ஆங்கிலம் என்றால் என்ன, அது எப்படி பேசப்படணும்னு தெளிவான கட்டளைகளை நம் மூளைக்குத் தெரிவிக்கிறோம். ஆனா, நம்ம மொழி குறித்த இந்த வரையறைகளை மதிக்காம அலட்சியப்படுத்திடுறோம்.

எந்த மொழியில் கணினி விசைப்பலகையில் எழுதப் போறோம்னு முடிவெடுக்கிற மாதிரி, எந்த மொழியில் பேச நினைக்கிறோம்கிறது நாம நம்ம மூளைக்குத் தரும் ஒரு முக்கியமான தெளிவான கட்டளை. நல்ல தமிழ் பேசணுங்கிற உணர்ச்சிப்பூர்வமான ஆவலுக்கும் மேல இந்தத் தெளிவான முடிவுக்கு மூளையைப் பழக்காவிட்டால், தொடர்ந்து நல்ல தமிழ்ல பேசுறதும் கை கூடாது.

– எந்த வகைத் தமிழைக் கேட்கிறோம், பார்க்கிறோம், படிக்கிறோம்கிறது நம்ம பேச்சையும் எழுத்தையும் பெருமளவில மாத்துது. தொடர்ந்து சன், விசய் மாதிரி தொலைக்காட்சிகள், மிர்ச்சி, சூரியன் மாதிரி வானொலிகள், தினமலர், விகடன் மாதிரி இதழ்களைப் பயன்படுத்தினால் தமிங்கிலம் கூடுவது நிச்சயம். நல்ல தமிழ் விரும்புறவங்க இந்த சேவைகளைப் புறக்கணிக்கிறது நல்லது.

சில பேருக்கு பள்ளிக்கூடத்தில் இல்லாத தமிழ் ஆர்வம் கூட தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் வலைப்பதிவுகள் படிச்சு வருவதைக் கண்டிருக்கேன். அதுக்கு இந்தத் தளங்கள்ல பயன்படுத்துற நல்ல தமிழும் ஒரு முக்கிய காரணம்.

– ரெண்டு ஆண்டு முன்னாடி எங்க ஊர் பள்ளி விழாவுல என்னைப் பேசச் சொன்னாங்க. முடிஞ்ச அளவு ஆங்கிலம் கலக்காம பேசினேன். வெளிநாட்டுல வாழ்ந்திட்டு வந்து எப்படி இப்படி ஆங்கிலம் கலக்காம பேசுறேன்னு ஆச்சர்யப்பட்டாங்க. தங்களால அப்படி பேச இயலலையேங்கிற அவங்க இயலாமையும் அந்தச் சொற்களில் தென்பட்டுச்சு. இப்ப எல்லாம் அப்பாவுக்கு மக்கள் தொலைக்காட்சி பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. காரணம், அதில பேசுற தமிழ் தான். உண்மைல நல்ல தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தருது. ஏதோ இழந்த சொத்து திரும்பக் கிடைச்ச மாதிரி. அப்படி பேசுறது பல பேருக்குப் புடிச்சிருக்கு. ஆனா, அவங்களுக்கு அப்படி பேசத் தெரியலை; பேச வர்றதில்லை. அதுக்கான போதுமான முயற்சி, முடிவு, பயிற்சி எடுக்கிறதில்லை.

– தமிழ்நாடு, இலங்கையின் பகுதிகளில் உள்ள உள்ளூர் வழக்குத் தமிழ் என்பது கலப்புத் தமிழ் இல்லை. இந்த வழக்குத் தமிழ்ச் சொற்கள் எல்லாம் தமிழோட சொத்து. பல பழைய தமிழ்ச் சொற்கள், தமிழர் வரலாறு எல்லாம் இந்த வழக்கு மொழியில தான் புதைஞ்சு கிடக்கு.

இப்ப இந்த வழக்கு மொழிகளுக்கு வந்திருக்க பெரிய ஆபத்து என்னன்னா, தொலைக்காட்சி தான் !!
இந்த வழக்கு மொழிகள் உயிர்ப்போட இருக்க சிற்றூர்கள்ல வீட்டுக்கு வீடு இப்ப தனியார் தொலைக்காட்சி வந்து உக்கார்ந்திக்கிட்டுருக்கு. இந்தத் தொலைக்காட்சிகளில் புழங்குற தமிழ் அவங்களோட வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத தமிழ். நகரத்தில 10 ஆண்டுகளா தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்து அலுத்துப் போய் தொலைக்காட்சி பார்க்கிறதை நிறைய பேர் குறைச்சுக்கிட்டு வர்றாங்க. ஆனா, சிற்றூர்களுக்குத் தனியார் தொலைக்காட்சி ஊடகம் புதுசு. அதைப் பார்த்து தங்கள் உள்ளூர் வழக்குத் தமிழ் பத்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு நகர மேட்டுக்குடி ஊடகத் தமிங்கிலத்துக்கு மாற முற்படுவாங்க. செல்வி, அமுதான்னு பேர் வைச்ச குடும்பங்கள் எல்லாம் இப்ப தொலைக்காட்சி நாடகங்களில் வர்ற நடிகைகளைப் பார்த்து வர்ஷிணி, தர்ஷிணின்னு பேர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க 🙁

வழக்குத் தமிழின் களஞ்சியம் போல இருக்கவங்க பாட்டி, தாத்தாங்க தான். ஆனா, தொலைக்காட்சி வந்த பிறகு இப்ப அவங்க கூட பேசி மகிழ யாருக்கும் நேரம் இல்லை. எல்லாரும் ஒன்னா உக்கார்ந்து தொலைக்காட்சி நாடகங்களை உத்துப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இதனால, அவங்க கிட்ட இருந்து சொற்கள் அடுத்த தலைமுறைக்கு நகர்வது நின்னு போகுது 🙁

* இலக்கியம், உரை நடைலயும் பேச்சுத் தமிழ்ல எழுதலாம். தவறில்லை. இயல்பாவும் இருக்கும். தவிர, பேச்சுத் தமிழ்ல எழுதுறது என்பது ஒரு கலை. சில சமயம் கூட மெனக்கெட வேண்டியும் இருக்கும். எல்லாருக்கும் அது கை கூடாது.

பின் குறிப்பு: இது ஊருக்கு அறிவுரை இல்லை. நானும் இந்த விசயத்தில் எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கு 🙁