1.1.3. நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21
இந்த உலகத்தில் பெரியவங்க எழுதுன எல்லா நூல்லயும், ஆசையை விட்ட, ஒழுக்கத்தில சிறந்த துறவிகளைப் பத்தி தான் உயர்வா எழுதி இருக்கும்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22
ஆசை, விருப்பு, பிடிப்புகளை விட்டவங்க பெருமைய அளக்கிறது, உலகத்தில இது வரைக்கும் இறந்து போனவங்கள எண்ணுற மாதிரி இயலாத, முடியவே முடியாத செயல்.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23
நல்லது எது, கெட்டது எதுன்னு ஆராய்ந்து நல்லதை மட்டும் பின்பற்றுறவங்க தான் பெருமை அடைவாங்க.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24
மன உறுதி, அறிவு கொண்டு தன்னோட ஐந்து புலன்களையும் அடக்குறவனே, துறவறம், அதனால் கிடைக்கும் பேரின்பத்துக்குத் தகுதியானவனா தன்னை மாத்திக்கிறான்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 25
இந்திரனே கூட தன் புலன்களைக் கட்டுப்பட்டுத்த இயலாம போனது நமக்குத் தெரியும். அப்படின்னா, தன் புலன்களைக் கட்டுப்படுத்தி புகழ் அடைஞ்சவங்க எல்லாம் எவ்வளவு ஆற்றல் மிக்கவங்களா இருந்திருக்கணும் !
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26
பெருமை தரக்கூடிய, செய்வதற்குச் சிரமமான செயல்களைச் செய்யுறவங்க பெரியவங்க. அப்படி ஒன்னும் செய்ய இயலாம இருக்கவங்க சிறியவங்க.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 27
(சுவை, ஒளி, ஓசை, தொடுதல், மணம் இப்படி) ஐந்து புலன்களோட இயல்பு அறிஞ்சு அதைக் கட்டுப்படுத்தி வாழ்றவனுக்கு இந்த உலகமே கட்டுப்பட்டு இருக்கும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28
நல்லா வாழ்ந்தவங்களோட பெருமையை, உலகத்தில் என்னைக்கும் அழியாம இருக்கிற அவங்களோட நூல்கள் மூலமா அறிஞ்சிக்கலாம்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 29
மலை மாதிரி குணத்தில் உயர்ந்து இருக்கவங்க மனசில, கோபம் ஒரு நொடி அளவு தோன்றி மறைஞ்சா கூட, அத நம்மளால தாங்கிக்க முடியாது.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30
எல்லா உயிர்கள் கிட்டயும் அன்பா இருக்கவங்களைத் தான் அந்தணர் அப்படின்னு அழைக்கிறோம்.
**
பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்