தமிழில் பெயர்ப் பலகைகள்

பொருளகம், தங்கும் விடுதி, பெரு அங்காடி, காலணியகம், இனிப்பகம், உணவகம், மின்னணுப் பொருளம், எழுது பொருளகம், கணினி பயிற்சி மையம்.. இப்படிச் சென்னையின் சில கடைகளில் புதிய தமிழ்ப் பெயர்ப் பலகைகள் தென்படுகின்றன. என்னடா, இது தமிழ்நாடு தானா இல்லை இலங்கை, சிங்கப்பூரா என்று குழப்பமாகப் போய் விட்டது 🙂

தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று முன்பே அரசு உத்தரவு இருந்தாலும், இப்போது செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அந்த உத்தரவைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்களாம். நல்ல மாற்றம்.

இருந்தும், பல கடைகளில் மாற்றத்தைக் காணோம். சில கடைகள் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதி உள்ளன. இப்போது மாறியுள்ள சில கடைகளும் தற்காலிகப் பெயர்ப் பலகைகளை வைத்துள்ளன. சென்னைக்கு வெளியே இந்த நடவடிக்கைகளைக் காணவில்லை. மாநாட்டுக்குப் பிறகும் மாற்றம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

நவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு

கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது.

குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார்.

உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. செ. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள் வருகிறார்கள். மாணவர்கள் என்னென்ன தமிழ்க் கணிமைத் திட்டங்களில் ஈடுபடலாம், அவற்றுக்கு யார் உதவியைப் பெறலாம் என்பது குறித்து கலந்துரையாடுவது கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

அனைத்து விக்கிப்பீடியா, வலைப்பதிவு, தமிழ்க் கணிமை ஆர்வலர்களையும் இந்த ஒன்று கூடலுக்கு வரவேற்கிறோம். நன்றி.

இடம்: குமரகுரு பொறியியல் கல்லூரி, கோவை.

D-தொகுதி கருத்தரங்க அறை (முதல் தளம். உணவகத்துக்கு எதிர்ப்புறம்.)

நேரம்: நவம்பர் 7, 2009 சனிக்கிழமை. பகல் 2.00 முதல் 4.00 மணி வரை.

வழி: சரவணம்பட்டி, அன்னூர் செல்லும் பேருந்துகள். பேருந்து எண் 45. பேருந்து நிறுத்தத்தில் இருந்து தானி மூலம் கல்லூரிக்கு வர 30 ரூபாய்.

உதவிக்கு: 99444 36360

நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

நோக்கியாவின் அடிப்படை செல்பேசி வகைகள் சிலவற்றில் தமிழில் எழுதலாம். தமிழ் விசைப்பலகையை முடுக்க குறுஞ்செய்தி எழுதும் பெட்டித் தெரிவுகளில் writing language – > தமிழ் என்று தெரிவு செய்யுங்கள். பல செல்பேசிகளில் தமிழ் எழுத்துகள் அச்சிடப்படாமல் இருக்கலாம். எனவே, விசை எண்  மற்றும் விசையில் உள்ள எழுத்து வரிசைகளைக் கீழே காணலாம்.

1 – புள்ளி, ஆய்தம்.

2 – அ, ஆ, இ, ஈ, உ, ஊ

(உயிரெழுத்துகள் முதல் பகுதி)

3 – எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

(மீதம் உள்ள உயிரெழுத்துகள்)

4 – க, ங, ச, ஞ

(ங்க, ஞ்ச ஒன்றாக வருவன)

5 – ட, ண, த, ந

(ண்ட, ந்த ஒன்றாக வருவன)

6 – ப, ம, ய

(ம்ப ஒன்றாக வரும்)

7 – ர, ல, வ

8 – ழ, ள, ற, ன

(ன்ற ஒன்றாக வரும்)

9 – ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ

(குறைவாகப் பயன்படும் க்ஷ, ஸ்ரீ கடைசியாக)

பள்ளியில் தமிழ் அரிச்சுவடி படித்த வரிசையிலே இவ்விசைகள் அமைந்துள்ளன. அரிச்சுவடி மறந்து விட்டதா ? 🙂 பெரும்பாலும் ஒரு ஒலிக்கான விசை தட்டுப்படும்போதே அதனுடன் வரும் ஒலியும் அடுத்த விசையில் இருக்கும்.

எடுத்துக்ககாட்டு: தம்பி, கம்பி, நம்பி போன்ற சொற்களில் ம்பி என்று ஒன்றாக வருவதைக் காணலாம். எனவே, 6 ஆம் எண் விசையில் ப தட்டுப்படும் போதே அடுத்து ம வரும் என்று உள்ளுணர்வாக அறியலாம்.

தனி எழுத்துகளை எப்படி எழுதுவது?

செல்பேசி ஆங்கில விசைப்பலகையில் 2ஆம் எண்ணில் abc என்று இருக்கும். c வர வேண்டுமானால் 2ஆம் எண்ணை 3 முறை அழுத்துவோம் அல்லவா? அதே போல் தான் தமிழுக்கும். குறிப்பிட்ட எழுத்து வரும் வரை அழுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:

2 = அ

22 = ஆ

333 = ஐ

777 = வ

ஒரே எண்ணை அடுத்தடுத்து அழுத்தும் போது மிக வேகமாக அழுத்த வேண்டும். இல்லாவிட்டால், 22 = ஆ என்று வருவதற்குப் பதில் அஅ என்று வரும்.

கூட்டு எழுத்துகளை எப்படி எழுதுவது?

பா = ப் + ஆ.

பா = ப + புள்ளி + ஆ

பா = 6 + 1 + 22

என்று எழுத வேண்டும் என்று நினைப்பீர்கள். அது தான் இல்லை 🙂

பா = 6 + 2 என்று அழுத்தினாலே போதும்.

6 + 2 = பஅ என்று தான் வர வேண்டும். ஆனால், தமிழில் இப்படி உயிர்மெய் எழுத்துக்கு அடுத்து உயிர் எழுத்து வராது. எனவே, செல்பேசி தமிழ் இலக்கணத்தின் அடிப்படையில் செயற்படத் தொடங்குகிறது. ப என்ற விசை இந்த இடத்தில் ப் என்ற மெய்யெழுத்தைக் குறிக்க வேண்டும் எனப் புரிந்து கொள்கிறது. ப என்ற விசை ப் ஆகிறது. ப்+2 = ப என்ற வர வேண்டும். ஆனால், ஏற்கனவே தான் ப என்ற எழுத்துக்குத் தனி விசை உண்டே. எனவே, பயனர் திரும்பவும் ப அடிக்க முயலவில்லை என்பதை ஊகிக்கிறது. அகரத்துக்கு அடுத்த உயிரைப் பொருத்திப் பார்க்கிறது. எனவே 6 + 2 = பா ஆகிறது. பி = 6 +22, பீ = 6+222 என்று தொடரும்.

சில பயிற்சிகள் பார்ப்போமா?

கணினி = 4 + 55+ 22+ 8888 + 22

வாழ்க = 777 + 2 + 8 + 1 + 4

கொடுப்பினை = 4 + 3333 + 5 + 2222 + 6 + 1 + 6 + 22 + 8888 + 333

என் அப்பா இந்தச் செல்பேசியை வாங்கிய புதிதில் கொ, கோ எல்லாம் எழுத கொம்புகளைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தார் 🙂  க வுக்கு முன்பே கொம்பு வருவதால் முதலில் ஒ அழுத்தி பிறகு க அழுத்திப் பார்த்தார் 🙂

நினைவில் கொள்ளுங்கள்: எப்பொழுதும் மெய் எழுத்து மேல் தான் உயிர் எழுத்து ஏறும். உடம்பில் தான் ஆவி புகும். ஆவிக்குள் உடம்பு புகாது 🙂

எஃகு = 3 + 1 + 4 + 2222

இங்கு எ க்கு அடுத்து 1 அடித்தால் புள்ளிக்குப் பதில் தானே ஆய்த எழுத்து வருவதைக் கவனியுங்கள். ஏனெனில், இலக்கணப் படி உயிர் எழுத்து மேல் புள்ளி வராது என்பதை செல்பேசி புரிந்து கொள்கிறது.

தமிழ்99 முறை அறிமுகமானவர்களுக்கு இந்த முறை மிகவும் எளிதில் பிடிபடும். கணினியில் தமிழ்99 எழுதும் போது அதில் இன்னும் கூட சிறப்பான குறுக்கு வழிகள் உள்ளன. முயன்று பாருங்கள்.

ஒரு முறை writing language தெரிவில் தமிழ் எனத் தந்தால் செல்பேசி முழுக்க எல்லா இடங்களிலும் தமிழ் எழுத்துகள் வரும். எனவே, தேவை இல்லாத போது திரும்ப எழுத்துத் தெரிவுகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

நோக்கியா தவிர்த்த பிற செல்பேசிகளில் தமிழ் எழுதும் முறை எப்படி இருக்கிறது என்று அறிந்தவர்கள் தெரிவியுங்கள். நன்றி.

தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள்

ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழை விரும்பிப் பேசும், ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் உரையாடல் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் தெரிந்து கொள்வது தான் வெற்றிக்கு வழி என்பது போல ஒருவர் தட்டுத்தடுமாறி அழுது கொண்டே ஆங்கிலம் பேசுகிறார். அவரை எல்லாரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தது. ம்.

தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்

1. தமிழ் விக்கிபீடியாவில் இலங்கைத் தமிழ் நடை கூடுதலாகத் தென்படுகிறதே?

தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதல் பெருமளவு ஈழத்தமிழர்கள் ஆர்வத்துடன் பங்களித்து வருகிறார்கள். அவர்கள் நடையிலேயே அவர்கள் எழுதுவது இயல்பான ஒன்று. நாமும் கட்டுரை எழுதாமல், எழுதுவோரையும் எங்கள் நாட்டுத் தமிழ் நடையில் எழுதுங்கள் என்று கோருவது பண்பாடன்று.  எனினும், பன்னாட்டுத் தமிழருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கில் அவர்களும் பெருமளவு பொதுவான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முயல்கிறார்கள். சில கலைச்சொற்கள், ஈழம் சார் சொற்களுக்கு மாற்றுச் சொல் இல்லாத நிலையிலும் பிற நாட்டுச் சொற்களைக் காட்டிலும் ஈழச் சொற்கள் பொருத்தமாகவும் இருக்கையில் ஈழ வழக்கே முதன்மை வழக்காக இருக்கிறது.

பல நாட்டுத் தமிழரும் ஒன்று கூடி ஒரு கூட்டு முயற்சியில் இறங்குவது புதிது. இதில் பெரும்பான்மை முதலிய வாதங்களை முன்வைத்து ஒரு நாட்டு வழக்கை மட்டும் திணிக்க இயலாது. அதே வேளை, தமிழை வளப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பு.  தமிழ் இணையம் தோன்றிய பிறகு, எத்தனையோ ஈழத்து வழக்குச் சொற்களை உள்வாங்கி இருக்கிறோம். எடுத்துக்காட்டுக்கு, அவதானிக்கிறேன், பகிடி, கதைக்கிறேன் போன்ற சொற்கள். எப்படி, பிரித்தானிய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம் ஆகிய இரண்டும் இருந்தும் ஒன்றை ஒன்றைப் புரிந்து கொண்டு செயல்பட முடிகிறதோ அதே போன்று தமிழிலும் பல நாட்டு வழக்குகளைப் பற்றிய புரிதலும் ஏற்பும் வர வேண்டும்.

பல நாட்டுத் தமிழர், குறிப்பாக, தமிழ்நாட்டுத் தமிழர் கூடிய அளவில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கத் தொடங்குவதே ஒரு நடுநிலையான பொதுத் தமிழ் நடை வர உதவும்.

2. தமிழ் விக்கிப்பீடியா நடை கடினமாக இருக்கிறதே? ஆங்கில விக்கிப்பீடியா புரிந்து கொள்ள இலகுவாக இருக்கிறதே?

தமிழ் விக்கிப்பீடியாவைப் பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளுமாறு எழுதவே விரும்புகிறோம். இன்னும் நிறைய பேர் பங்களித்து கட்டுரைகளை எளிமையாக எழுத உதவ வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியா 8 ஆண்டுகளுக்கும் மேல் இலட்சக்கணக்கான பங்களிப்பாளர்களால் சீர்செய்யப்பட்டு வருகிறது. தற்போது தான் வளரத் தொடங்கி உள்ள தமிழ் விக்கிப்பீடியாவில் உடனடியாக அந்த சீர்மையை எதிர்பார்க்க இயலாது.

ஒரு கட்டுரையைப் புரிந்து கொள்ள அத்துறை அறிவு, மொழியறிவு இரண்டுமே தேவை. எவ்வளவு தான் ஆங்கில அறிவு இருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள சட்ட ஆவணத்தையோ மருத்துவ ஆவணத்தையோ சட்டென புரிந்து கொள்வது கடினம். எல்லோருக்கும் புரிகிற வெகுமக்கள் ஊடக சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு அனைத்து அறிவுத் துறைகளையும் தமிழில் எழுதி விட முடியாது. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகள் தமிழ்ச் சிந்தனைத் தளத்தில் புதிதாக எழுதப்படுவன. இத்துறைகளுக்குத் தேவையான புதிய கலைச்சொற்களை உருவாக்குவதும் புரிந்து கொள்ள முயல்வதும் தவிர்க்க இயலாதது.

பள்ளிக்கூடத்துக்குப் பிறகு பெரும்பாலான வாசிப்பை ஆங்கிலத்தில் கொண்டிருப்பவர்கள், இலக்கியம்-வெகுமக்கள் பொழுது போக்கு இதழ்கள் என்ற குறுகிய வட்டத்திலேயே தமிழ் வாசிப்பு உள்ளவர்கள், ஆங்கில வழியில் படித்தவர்கள் ஆகியோருக்குத் தமிழ் விக்கிப்பீடியா சற்று கடினமாக இருப்பது எதிர்பார்த்ததே. தமிழை விட ஆங்கிலம் நன்றாகப் புரிந்தால், தயவு செய்து ஆங்கில விக்கிப்பீடியாவே பயன்படுத்துங்கள். அல்லது, தமிழ் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். தமிழ் மட்டுமே அறிந்ந, தமிழ் வழியில் அறிவு பெற விரும்புவோருக்காக மட்டுமே தமிழ் விக்கிப்பீடியா எழுதப்படுகிறது.

3. தமிழ் விக்கிப்பீடியாவில் ஏன் பல துறை கட்டுரைகள் இல்லை? ஏன் ஒரு சில துறைகள் குறித்து நிறைய கட்டுரைகள் உள்ளன? ஏன் விரிவான கட்டுரைகள் இல்லை?

தமிழ் விக்கிப்பீடியா 2003 முதல் இயங்குகிறது. இதில் முனைப்புடன் தொடர்ந்து பங்களிப்போர் 20-25 பேர் தான்.

தமிழ் விக்கிப்பீடியாவில் 18,000+ கட்டுரைகள் என்று சொன்னாலும், அவற்றில் பெரும்பான்மை குறுங்கட்டுரைகளே. பல முக்கிய துறைகளில் அடிப்படை கட்டுரைகளே கூட இல்லை. இருக்கும் கட்டுரைகள் பல ஒரே துறை சார்ந்தவை. இவை பங்களிக்கும் சிலரின் ஆர்வப் புலங்கள் சார்ந்து வருபவை. கட்டுரைகளில் இலக்கண, எழுத்துப் பிழைகள் மலிந்து உள்ளன. பல தகவல்கள் இற்றைப்படுத்த வேண்டும். இவை யாவும் தமிழ் விக்கிப்பீடியர் மிகவும் நன்கு உணர்ந்த குறைகள். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை விட, தமிழ் விக்கிப்பீடியர் இவை குறித்து இரு மடங்கு கவலையையே கொண்டுள்ளோம். ஆனால், விமர்சிப்பவர், ஆலோசனை கூறுவோர் எவரும் ஒரு துளி பங்களிப்பைக் கூடச் செய்யாமல் எம்மால் எப்படி இவற்றைச் சரி செய்ய இயலும்?

மற்றபடி கட்டுரை எண்ணிக்கை குறித்த வெற்றுப் பெருமை ஏதும் எமக்கில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இது தொடர்பான பின்வரும் பக்கங்களைப் பார்க்கலாம்:

http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தமிழ்_விக்கிப்பீடியா_தரக்_கண்காணிப்பு

http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:Tamil_Wikipedia:_A_Case_Study

மற்ற பல இந்திய விக்கிப்பீடியாக்களை விட, வெற்று எண்ணிக்கையைப் பெருக்கும் கட்டுரைகளை மிகவும் தீவிரமாக எதிர்த்து வருகிறோம். கண்டிப்பாக இனி வரும் காலத்தில் கட்டுரைகளின் துறைப் பரப்பு, ஆழத்தைப் பெருக்க கவனம் செலுத்துவோம்.

4. தமிழ் விக்கிப்பீடியாவில் திரைப்படம் போன்ற ஒரு சில துறை சார் கட்டுரைகள் மலிந்திருப்பது ஏன்?

தமிழ் விக்கிப்பீடியாவில் திரைப்படம், இன்னும் சில துறைகள் குறித்த பெருவாரியான கட்டுரைகள் உள்ளது உண்மை தான். இதற்கு காரணம், தமிழர்களின் பொது ஆர்வமாக திரைப்படம் இருப்பதே. பெரும்பான்மை தமிழர்கள் திரைப்படம் குறித்து தேடுகிறார்கள். அவர்கள் இதன் மூலமாவது விக்கிப்பீடியாவை வந்தடையட்டுமே என்ற நோக்கம் தான். நான் ஆங்கில விக்கியை அதிகம் பயன்படுத்துவதே உலகத் திரைப்படங்கள் பற்றி அறியத் தான். எந்தத் துறையாகினும் அதில் நல்ல உள்ளடக்கத்தைத் தர முயல்வோம்.

இன்னொரு முக்கிய காரணம், திரைத்துறையில் ரசிகர்கள் கூடுதல். விக்கிப்பீடியாவில் அரசியல் கட்டுரைகளின் பிரச்சினைகளை விமர்சித்துக் கொண்டே ஒரு கட்டுரையும் எழுதாமல் இருப்பவர்களைப் போல் அல்லாமல் ரசிகர்கள் தங்கள் விருப்பத் துறை குறித்து கட்டுரைகளை எழுதித் தள்ளுகிறார்கள். இத்திரைப்படம் சார் கட்டுரைகள் பலவும் கனடாவில் உள்ள 20 வயது இளைஞர் நிரோசன் சக்திவேலால் எழுதப்பட்டது. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் நிகழ்பட ஆட்டங்கள் முதற்கண்டு பல துறைகளில் இப்படி ஏராளமான கட்டுரைகள் உள்ளன. ஒரு துறையில் கட்டுரையில் மலிந்திருக்கிறது என்றால் அவர்களைப் பாராட்ட வேண்டும். பிற துறை ஆர்வலர்கள் எழுதாமல் விட்டது அவர்கள் தவறுதல் அல்லவா?

5. தமிழர்கள் கூட்டு உழைப்புக்கு பழகியவர்களா? இத்திட்டம் தமிழகத்தில் வெற்றி பெறுமா?

“தமிழர்கள் கூட்டு உழைப்புக்குப் பழகாதவர்கள், விக்கிப்பீடியா முறைமை ஒத்துவராது” என்ற கூற்றை ஒத்துக் கொள்ள மாட்டேன். இன்னும் போதுமான அளவு நாம் சரியான தமிழர்களை இனங்காணவில்லை என்பதே பிரச்சினை.

பங்களிப்பு குறைவுக்கான காரணங்களை தன்னார்வத் தமிழிணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன் என்ற கட்டுரையில் பார்க்கலாம்.

2001ல் தொடங்கிய ஆங்கில விக்கிப்பீடியாவை ஒரு மாணவனாகிய நானே 2005ல் தான் அறிந்து கொண்டேன். விக்கிப்பீடியா என்று ஒன்று இருப்பதை இன்னும் பல இணையப் பயனர்களுக்குத் தெரியவில்லை. தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருபோர் பலர். ஆங்கில விக்கிப்பயனர்களிலேயே கூட தமிழ் விக்கி என்று ஒன்று இருப்பது தெரியாதோர் பல. இருப்பது தெரிந்தும், விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை நாமே எழுதலாம் என்று அறியாதோர் பலர். என்னுடைய post doc படிக்கும் நண்பர் ஒருவருக்கே நான் இது பற்றிச் சொல்லப் போகத் தான் தெரிந்தது. இது ஒரு விழிப்புணர்வுப் பிரச்சினை. 2009ல் தமிழ் விக்கி பற்றி அறிந்த ஒரு பயனர் 300க்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகளை எழுதி உள்ளார். அவருக்கு 2003லேயே தெரிந்திருந்தால் எவ்வளவு கூடுதலாகப் பங்களித்திருக்க இயலும்? இன்றும் தமிழ் விக்கி பற்றி புதிதாக அறிந்து கொள்வோர், “ஆகா, இது முன்பே தெரியாமல் போனதே” என்று வருந்துகிறார்கள். எம்முடைய இலக்கு விக்கிப்பீடியா பற்றி தெரிந்தும் பங்களிக்க விரும்பாதோர் குறித்து அல்ல. தெரிந்தால் பங்களிக்கக்கூடியவர்களைச் சென்றடைவதே.

6. தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க விரும்புகிறேன். ஆனால், விக்கி மென்பொருளைப் புரிந்து கொள்ள முடியவில்லையே?

விக்கி மென்பொருளை மின்மடல், பிளாகர் போல மேலும் இலகுவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள உதவிப் பக்கங்களையும் கூட்டி வருகிறோம். விக்கியில் பங்களிப்பதற்கான உதவியை எந்தப் பக்கத்தில் வேண்டினாலும் நிச்சயமாக மற்ற பயனர்கள் உதவுவர்.

7. விக்கிப்பீடியாவின் நிருவாகிகள், அதிகாரிகள் வைத்தது தான் சட்டமா? ஏன் இந்த அதிகார அமைப்பு?

குறிப்பு: விக்கிப்பீடியாவின் அதிகார அமைப்பு பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும் ஆங்கில விக்கிப்பீடியா அனுபங்களை வைத்தே. கீழ்க்காணும் குறைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருந்தா.

விக்கிப்பீடியாவில் எல்லா பக்கங்களையும் மாற்றி எழுத எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால், விக்கிப்பீடியா வளர வளர வேண்டுமென்றே தவறான தகவல்களை எழுதும் விசமிகளும் வந்து சேர்கிறார்கள். எனவே, தவறான தகவல்களைக் கண்காணித்து நீக்கவும், விசமிகளைத் தடுக்கவும் சில பயனர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இது கிட்டத்தட்ட காவல்காரன், கூப்பை கூட்டுபவன் வேலை தான். இந்தப் பொறுப்பையும் எல்லாருக்கும் விட்டால், விசமிகள் அவற்றைப் பயன்படுத்தியே விக்கிப்பீடியாவை அழிப்பர். எனவே, தொடர்ந்தும் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் நம்பகமான பயனர்களுக்கு திறந்த முறையில் வாக்கெடுப்புகள் நடத்தி பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. ஒரு சில பக்கங்களில் தொடர்ந்து தீவிரமான விசம வேலைகள் நடந்தால், அந்தப் பக்கத்தைப் நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ பூட்டி வைக்கவும் வேண்டி வருகிறது. புதிதாக வரும் சில பங்களிப்பாளர்களால் இப்பக்கங்களைத் தொகுக்க இயலாமல் இருக்கிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு சில நிருவாகிகளின் நுண்ணரசியல் காரணமாக இந்த அதிகார அமைப்பே கேள்விக்குள்ளாகிறது.

மனிதர்கள் கூடி இயங்கும் எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வகையில் அதிகார அடுக்கு வருகிறது என்றே நினைக்கிறேன். அதிகார அடுக்கு இல்லாமல் செயல்படுவது சாத்தியமா, அத்தகைய அமைப்பு வருமா என்று தெரியவில்லை. ஆனால், இந்த அடுக்குமுறை ஏற்பாடு சமூகத்தில் உள்ள வழமையே என்று புரிந்து கொள்வது முக்கியம். எப்படி ஒரு ஊருக்குள் வந்த புதியவன் அல்லது அந்த ஊரில் உள்ள இளைஞன் சிறிது சிறிதாக நல்லது செய்து மக்களுக்கு அறிமுகமாகி கூடுதல் பொறுப்புகளைப் பெற்றுக் கொள்கிறானோ அதே போல் விக்கிப்பீடியாவிலும் தொடர் பங்களிப்புகள் மூலம் கூடுதல் பொறுப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் ஆங்கில விக்கிப்பீடியாவில் மலிந்து இருந்தால், தமிழ் ஆதரவாளர்களும் அவர்கள் அளவு பொறுமையாகப் பங்களித்தே அணுக்கங்களைப் பெற்றுக் கொள்ள இயலும். சர்ச்சைக்குரிய கட்டுரையில் மட்டும் திடீர் என போய் குதிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பல கட்டுரைகளிலும் பங்களிப்புகளைச் செய்த பின் நிருவாகப் பொறுப்பைக் கோரலாம். எடுத்தவுடனேயே புறக்கணிப்பதால் இழப்பு தமிழருக்கே. தமிழரின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக் குறைவான எண்ணிக்கையிலான எதிரிகள் நிருவாகப் பொறுப்புக்கு முன்னேறும்போது ஒரு சில தமிழர்களாவது அதற்கு இணையாக ஏன் உழைக்கக்கூடாது? ஆங்கில விக்கிப்பீடியாவில் மட்டுமல்ல நிகழ்வாழ்க்கை அரசியலிலும் கோட்டை விட்டு விட்டுப் பிறகு புலம்புவதும், விமர்சனம் செய்வதும் தமிழர் வழக்கமாகவிட்டது.

8. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள குறைகள், அரசியல் தமிழுக்கும் வராது என்று என்ன நிச்சயம்? ஏன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களிக்க வேண்டும்?

ஏனெனில், ஆங்கில விக்கிப்பீடியாவைப் புறக்கணித்துச் செயல்பட்டாலும் ஆங்கிலப் பயனர்களுக்கு ஏராளமான தகவல் தளங்கள் உள்ளன. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மாற்றாக தமிழில் தற்போது எந்தத் திட்டமும் இல்லை.  முழுக்க முழுக்க சரியான திட்டம் என்று ஏதும் இல்லை. உடனடியாக, அத்தகைய திட்டம் தோன்றும் அறிகுறியும் காணோம். அது வரும் வரை காத்திருக்கவும் முடியாது. இணையத்தில் தமிழில் தகவல்களைப் பெறுவது என்பது தமிழர்களின் உடனடித் தேவை. அதற்கு நமக்கு இருக்கிற களங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம். விக்கிப்பீடியாவை வளர்ப்பது எமது நோக்கமல்ல. விக்கிப்பீடியாவும் ஒரு களம். வேறு நல்ல களம் கிடைத்தால் அதற்குப் பெயரவும் உடன்பாடே. விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் கட்டற்ற உரிமத்தில் கிடைப்பதால் அவற்றை வேறு நல்ல திட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசியல் கலக்காமல் எழுதக்கூடிய நுட்பம், அறிவியல், கணிதம், மருத்துவம், கலை போன்ற  மக்களுக்குப் பயன்படக்கூடிய எண்ணற்ற துறைகள் உள்ளன. இந்தத் துறைகளிலாவது பங்களிக்கலாமே?

விக்கிப்பீடியா மேம்படுவதற்கு வாய்ப்பு உண்டென்றால் அது கூடுதல் பங்களிப்பால் மட்டுமே சாத்தியம். புறக்கணிப்பால் அல்ல.

9. தமிழ் விக்கிப்பீடியா தனித்தமிழ் தாலிபான்களின் கையில் உள்ளதா? ஏன் பிற வெகுமக்கள் ஊடக நடையில் இருந்து மாறுபடுகிறது?

தகுந்த இடங்களில் அளவோடு பிற மொழிச் சொற்கள் பயன்பாட்டின் தேவை இருப்பதை உணர்ந்தே இருக்கிறோம். தமிழ் விக்கிப்பீடியாவில் எண்ணற்ற, ஆயிரக்கணக்கான பக்கங்களில் கிரந்த எழுத்துகள், பிற மொழிச் சொற்கள் மலிந்து உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா தனித்தமிழ் தாலிபான்கள் கையில் இல்லை என்பதற்கு இதுவே சான்று. பிற மொழிச் சொற்களை ஒட்டு மொத்தமாக நீக்குவதற்கான முயற்சிகள் ஏதும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. தேவையும் இல்லை. கண்மூடித்தனமாக பிறமொழிக் கலப்பு, கண்மூடித்தனமான பிறமொழி எதிர்ப்பு என்று இந்த இரு நிலைகளின் நடுவிலேயே தமிழ் விக்கிப்பீடியா நலமுடன் தொடர்ந்து இயங்க முடியும்.

வெகு மக்கள் ஊடக நடையை அப்படியே கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஏனெனில், வெகுமக்கள் ஊடகத் தமிழ் நடை என்று ஒன்றுமே இல்லை. கிரந்தத்தின் பொதுப் பயன்பாடு குறித்த உரையாடல்களையும் காணலாம். தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்து வரும் ஒரு தன்னாட்சி மிக்க அறிவூடகம். ஒவ்வொரு நாளும் 50,000+ பக்கப் பார்வைகளுக்கு மேல் பதிவாகிறது. தமிழ் விக்கிப்பீடியா நடை புரியவில்லை என்று எவரும் சொல்வதில்லை. ஏன் வேறு மாதிரி எழுதுகிறீர்கள் என்று தான் கேள்வி வருகிறது.   இவர்கள் இருப்பதை மாற்றாதே என்பார்கள். யார் மாற்றினால் நாம் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்கள்.

தமிழ் விக்கிப்பீடியாவின் நடை எப்படி இருக்க வேண்டும் என்பதை தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களே கூட்டாகப் பேசி முடிவெடுக்கும் உரிமை உண்டு. விக்கி ஒரு கூட்டு முயற்சி என்பதால், எந்த ஒரு பக்கத்தையும் மாற்றி எழுதும் உரிமையும், இப்படி எழுதலாமே என்று கோரும் உரிமையும் உண்டு. எந்த அரசியலும் இன்றி அறியாமையால் பிறமொழி பயன்படுத்துபவர்களிடம் தமிழ் நலம் சார்ந்து வேண்டினால் அதன் நியாயம் உணர்ந்து தங்கள் நடையை மாற்றிக் கொள்ள முன்வருகிறார்கள். மற்றவர்கள் தமிழ் விக்கிப்பீடியா மீது உண்மையற்ற குற்றச்சாட்டுகளை வீசுகிறார்கள்.

தனித்தமிழ் என்பது தமிழ் விக்கிப்பீடியரின் கண்டுபிடிப்போ திணிப்போ அல்ல. ‘ஓட்டல்’, ‘உணவகம்’ என்று தமிழ் மொழி, எழுத்து சார்ந்தே எழுதும் வழக்கம் பொதுமக்களிடம் உண்டு. இதைப் பின்பற்றியும் இதன் தொடர்ச்சியாகவுமே தமிழ் விக்கிப்பீடியாவிலும் இயன்ற இடங்களில் பிற மொழி தவிர்க்கலாமே என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஆனால், “ஹோட்டல் என்று தான் எழுதுவோம். மாற்றி எழுத வேண்டுபவர்கள் தனித்தமிழ் தாலிபான்கள்” என்று சொன்னால் பெரும்பான்மைத் தமிழர்கள் தாலிபான்கள் தான்.

உண்மை என்னவென்றால், இது வரை வளர்ந்து வந்த தமிழ் நடை, கருத்தாக்கம் என்பது அரசுகள், ஊடக அதிபர்கள், அதிகார அமைப்புகளின் கையிலேயே இருந்தது. இந்த அதிகார அமைப்புகள் திணிக்கும் தமிழ் நடையையும் கருத்துகளையும் கேள்வி கேட்கவும் மாற்றி அமைக்கவும் பொது மக்களுக்கு வாய்ப்பு இல்லை. இவை எழுதுவதே சரியான தமிழ் நடை, உண்மை என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். “ஏற்கனவே இருப்பது என்னவாக இருந்தாலும் அதை கேள்வி கேட்காமல் அப்படியே பின்பற்று” என்பது எப்படி அறிவுடைமை ஆகும்? எனவே, விக்கிப்பீடியா போன்ற புதிய வலுமிக்க வெளிகளில் மாற்றுச் சிந்தனைகள், கேள்விகள், உரையாடல்கள் வரும் போது அதிகார மையங்களாலும் அவற்றுக்குப் பழக்கப்பட்டவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பொருளாதாரம், பண்பாடு, சமூகம் என்று அனைத்திலும் “பிற்போக்கு அரசியல்” என்று சாடி “இருப்பதைப் பேணுகிறோம், புதுமையைப் புகுத்துகிறோம்” என்று கண்ணுக்குத் தெரியாமல் மரபுகளை அழிக்கும் “முற்போக்கு அரசியலும்” உண்டு. “தனித்தமிழ் அரசியல்” என்று சாடுவோருக்கு அதை விட மிகப்பெரிய அரசியல் உண்டு.

10. தமிழ் விக்கிப்பீடியாவின் தமிழாதரவு நிலையால் அதன் வளர்ச்சி தடைபடுமா?

இது பூச்சாண்டி காட்டும் வேலை. தமிழாதரவு சர்ச்சைகள் ஏதும் இல்லா, கலப்பு மொழி, கிரந்த ஒலிப்புகள் கூடிய பிற இந்திய, தெற்காசிய மொழி விக்கிப்பீடியாக்கள், இணையங்கள் ஏன் வளராமல் இருக்கின்றன என்று சிந்தித்தால் விடை கிடைக்கும். தன்னார்வத் தமிழிணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன் என்ற கட்டுரையையும் பார்க்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் தமிழாதரவுப் போக்குடன் உடன்படாத ஓரிருவர் வேறு களங்களில், சொந்தத் தளங்களில் தொடர்ந்து தங்கள் நடையில் எழுதுகிறார்கள். அதனாலும் தமிழ் இணைய உள்ளடக்கம் வளரும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சியே. மற்றவர்கள் வாய்ச்சொல் வீரர்கள்.

மேற்கண்ட விமர்சனங்கள் குறித்தும், இன்னும் பொதுவாகவும் சென்னை கிழக்குப் பதிப்பக விக்கி அறிமுக கூட்டத்தில் உரையாடினோம். அந்த விக்கிபீடியா அறிமுக ஒலிப்பதிவில் இன்னும் விரிவாக அறியலாம்.