ஊடகத் தமிழ்

“தமிழ் வெகுமக்கள் ஊடக நிறுவனங்கள் பெருமளவு தமிங்கிலத்தில் எழுதுகின்றன. தமிழ் இலக்கண முறைகளை மதிப்பதில்லை. ஆனால், இந்நிறுவனங்களின் தொலைக்காட்சிகள், இதழ்கள், திரைப்படங்கள் நன்றாக “விற்று” வெற்றி பெறுகின்றன. எனவே, இது இவ்வூடகங்கள் முன்னிறுத்தும் “தற்காலத் தமிழுக்கு” மக்கள் தரும் ஆதரவு ஆகும். NewYork Times, Washington Post போன்றவற்றின் எழுத்து நடையை யாரும் விமர்சிப்பது இல்லை. மக்கள் ஊடகங்களான வலைப்பதிவுகள் கூட, வெகுமக்கள் ஊடக நடையிலேயே உள்ளன. எனவே, தமிழ் ஊடகங்களின் எழுத்து நடையை விமர்சிப்பது தவறு. இத்தனைப் பேரைக் காட்டிலும் விமர்சிக்கும் மக்கள் அறிவாளிகளா?” என்று சிலர் கேட்கிறார்கள்.

ஊடகத் தமிழ் மட்டும் தான் தமிழா?

ஊடகத் தமிழ் பெரும்பாலும் சென்னை மாநகர, மேட்டுக்குடி, உயர் சாதி சார்புடையதாக உள்ளது. பல நாட்டுத் தமிழுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், தமிழகம் – ஈழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊர்ப்புற வழக்குகள் வெகுமக்கள் ஊடகங்களில் பதிவாவதில்லை. மக்கள் பேச்சு வழக்கில், நாட்டுப்புறத் தமிழ் வழக்குகளில் எத்தனையோ நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன. ஆனால், வெகுமக்கள் ஊடகங்களோ ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களைக் கூட விட்டு விட்டு வலிந்து ஆங்கிலச் சொற்களைத் திணிக்கின்றன. பார்க்க: ஆனந்த விகடனும் தமிங்கிலமும். எனவே, வெகுமக்கள் ஊடகத் தமிழ் மட்டுமே தமிழ் ஆகாது.

ஒரே மாதிரியான வெகுமக்கள் ஊடக நடை என்று ஒன்றில்லை

வெகுமக்கள் ஊடக நிறுவனங்களுக்கு இடையேயே கூட தமிழ் நடை வேறுபாடு உண்டு. நாளிதழ்கள், வார இதழ்கள், இலக்கியச் சிற்றிதழ்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் ஆகியவை தனித்தனி தமிழ் நடை உடையன. ஒரே வகை இதழ்களுக்குள்ளேயே நாட்டுக்கு நாடு, நிறுவனத்துக்கு நிறுவனம் எழுத்து நடை மாறும். இந்தியா டுடேவுக்கும் விகடனுக்கும் சூரியன் பண்பலை வானொலிக்கும் சிங்கப்பூர் ஒலி பண்பலை வானொலிக்கும் வேறுபாடு உண்டு. எனவே, ஒரே மாதிரியான வெகுமக்கள் ஊடக நடை என்று ஒன்றில்லை. இலக்கு வாசகர்களைப் பொருத்தும் தனி நிறுவனங்களின் மொழிக் கொள்கை, சமூக அரசியலைப் பொருத்தும் எழுத்து நடை மாறுகிறது.

தமிழ் நலம் காப்பது விற்காதா?

மக்கள் தொலைக்காட்சி மேலும் பரவாததற்கு அதன் தமிழ் சார்பா காரணம்? பார்க்கும் கொஞ்சம் ஆட்களும் அதன் தமிழ்ச் சுவையை விரும்பியே பார்க்கிறார்கள். திரைப்படங்களுக்கு உரிய இடம் தராதது, சந்தைப்படுத்துதல் தடைகள், அரசியல் சார்பு என்று பல முக்கிய காரணங்கள் இருக்கலாம். விசய் தொலைக்காட்சி சென்னையைத் தாண்டி பரவாததற்கு அதன் அளவு கூடிய தமிங்கில நடையும் ஒரு காரணம்.

வாழ்த்துகள் என்ற தமிழ்த் திரைப்படம் தோற்றதற்கு அதன் தமிழ் உரையாடல் காரணம் இல்லை. அப்படத்தைத் தமிங்கிலத்தில் எடுத்திருந்தாலும் தோற்றிருக்கும். வலுவற்ற கதை. சொதப்பலான திரைக்கதை. மேட்டுக்குடி நகரத்து ஆங்கிலம் பேசும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கும் உன்னாலே உன்னாலே போன்ற படங்கள் ஊர்ப்புறங்களில் ஓடாது. ஆனால், ஊர்ப்புறக் கதைகள், சொல்லாடல்களை வைத்து வரும் அழகி, பருத்திவீரன் போன்ற படங்கள் நகரத்திலும் ஓடும்.

உள்ளடக்கமும் சந்தைப்படுத்துதலும் சரியாக இருந்தால் தமிழ் சார்பு ஒரு தடையில்லை. எல்லா நாட்டுத் தமிழர்களுக்கும் எல்லா வகுப்புத் தமிழர்களுக்கும் புரியும்படி எழுத, இயன்ற அளவு நல்ல தமிழில் எழுதுவது மட்டுமே ஒரே வழி.

விற்பது எல்லாம் சரியானதா?

ஒரு இதழ் விற்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதை விட தரமான வேறு இதழ் இல்லாததும் ஒரு காரணம். தங்களுக்குத் தேவையான தரத்தில் பொருள் கிடைக்காத போது கிடைக்கிற பொருளைத் தேவைக்குப் பயன்படுத்துவது சந்தை வழமை. அதனால், ஒரு பொருள் விற்பதனாலேயே அதன் அனைத்து கூறுகளும் சரியானவை, மக்கள் ஏற்புடையவை என்று பொருள் ஆகாது.

நடுப்பக்கத்தில் நமிதா படம் போட்டு, நான்கு சோப்புப் பெட்டிகள் தந்து இதழை விற்றுவிட்டு, அதை வைத்து “தங்கள் தமிழ் நடையும் சரி” என்பது முறையா?

எது சமூக ஏற்பு?

சமூகத்தில் ஒரு பரவலான வழக்கம் இருப்பது, அது தான் சிறந்தது என்பதற்கான சான்று இல்லை. தீமை என்று தெரிந்தும் மாற்றிக் கொள்ள முடியாமலும், தவறு என்றே தெரியாமலும் எத்தனையோ சமூக வழக்கங்கள் உள்ளன. மருத்துவர்கள் உட்பட பெரும்பான்மையோர்  மது அருந்துகிறார்கள். அரசே மது விற்கிறது. ஆனால், அதற்காக எந்த மருத்துவரும் மது அருந்துவதைப் பரிந்துரைக்க இயலாது.

ஊடகங்களின் வணிக நோக்கம், சில பிரிவினரின் திட்டமிட்ட தமிழின – மொழி அழிப்பு வேலை, அரசின் மெத்தனம், மக்களின் பழக்க அடிமைத்தனம், உலகமயமாக்கம், தாய்மொழி விழிப்புணர்வின்மையால் தமிங்கிலம் என்னும் நோயும் இதைப் போன்றே சமூகத்தில் பரவும் போது தமிழார்வலர்கள் இவற்றுக்கு எதிராக இயங்கலாமா கூடாதா?


Comments

3 responses to “ஊடகத் தமிழ்”

  1. கலை Avatar
    கலை

    //ஊடகங்களின் வணிக நோக்கம், சில பிரிவினரின் திட்டமிட்ட தமிழின – மொழி அழிப்பு வேலை, அரசின் மெத்தனம், மக்களின் பழக்க அடிமைத்தனம், உலகமயமாக்கம், தாய்மொழி விழிப்புணர்வின்மையால் தமிங்கிலம் என்னும் நோயும் இதைப் போன்றே சமூகத்தில் பரவும் போது தமிழார்வலர்கள் இவற்றுக்கு எதிராக இயங்கலாமா கூடாதா?//

    தாராளமாக இயங்கலாம். இயங்க வேண்டும்.

  2. //உள்ளடக்கமும் சந்தைப்படுத்துதலும் சரியாக இருந்தால் தமிழ் சார்பு ஒரு தடையில்லை. எல்லா நாட்டுத் தமிழர்களுக்கும் எல்லா வகுப்புத் தமிழர்களுக்கும் புரியும்படி எழுத, இயன்ற அளவு நல்ல தமிழில் எழுதுவது மட்டுமே ஒரே வழி.//

    சரியாக சொன்னீர்கள்!!!

  3. சரியாகச் சொன்னீர்கள்! இப்பொழுதுதான் பார்க்கின்றேன் இந்தப் பதிவை! படிக்க வேண்டிய பதிவு இது!