ஆங்கில எழுத்து முறை இலகுவானதா?

“ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டுமே உள்ளது.  தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால் குழந்தைகள் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகிறார்கள்” என்று சிலர் எழுதுகிறார்கள்.

ஆங்கில எழுத்துமுறை இலகுவானதா? இல்லை.

ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் 26. இவற்றில் இருந்து மாறுபடும் சிறிய எழுத்து வடிவங்கள் 16. மொத்தம் 42 எழுத்துகள்.

எந்தெந்த இடங்களில் பெரிய எழுத்துகள் வரும், வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

chalk என்பதில் ch ச ஒலி தரும். அதுவே, character என்பதில் ch க ஒலி தரும். சில இடங்களில் t, b அமைதியாகி ஒலி தராது. இலட்சக்கணக்கான சொற்களின் ஒலிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். வெறும் எழுத்துகளை மட்டும் வைத்து புதிய சொற்களின் ஒலிப்பை அறிய இயலாது.

ஒரு மொழி, தந்தி அடிப்பது போல் ஒன்றிரண்டு குறியீடுகளை மட்டும் எழுத்துகளாக வைத்துக் கொள்ளலாம்; சீன மொழி போல் ஆயிரக்கணக்கான எழுத்துகள் வைத்துக் கொள்ளலாம்; இரண்டுமே இலகு இல்லை.

எத்தனை எழுத்துகள் என்றாலும் அவற்றில் சீர்முறை இருப்பது நலம். இச்சீர்முறை தமிழில் உண்டு.  ஒரு முறை எழுத்துகளைக் கற்றுக் கொண்டால், எந்தச் சொல்லையும் படிக்கலாம். எழுதலாம். தமிழில் எழுதுவதற்குத் தேவைப்படும் சிறிதளவு கூடுதல் உழைப்பு, படிப்பதற்குத் தேவைப்படும் உழைப்பை பல மடங்கு குறைக்கிறது. எழுதுவது ஒரு முறையே. பல கோடி மக்கள் பல கோடி முறை அதைப் படிக்கிறார்கள். படிப்பது இலகுவாக இருப்பதே முக்கியம்.

கடினமான ஆங்கில மொழியைக் கற்கும் குழந்தைகளால், கண்டிப்பாக அதை விட பல மடங்கு இலகுவான தமிழையும் கற்றுக் கொள்ள இயலும்.


Comments

4 responses to “ஆங்கில எழுத்து முறை இலகுவானதா?”

  1. //தமிழில் எழுதுவதற்குத் தேவைப்படும் சிறிதளவு கூடுதல் உழைப்பு, படிப்பதற்குத் தேவைப்படும் உழைப்பை பல மடங்கு குறைக்கிறது.//

    மிகச் சரியான பார்வை!

  2. ஆங்கிலம் ஒரு குழப்பமான மொழிதான் – உகந்த பயிற்சியில்லாவிட்டால் கொஞ்சம் கஷ்டம். மேலும் ஆங்கிலம் பல வேற்று மொழிச்சொற்களைக் காண்டிருப்பது இன்னும் அதைக் கடினப்படுத்துகிறது. மேலும் அதில் சப்திக்காத எழுத்துக்களும் அதிகம். உதாரணமாக Buffet என்பது புஃபே, என்றோ இல்லது பஃபே என்றோ ஒலிக்கப்படும் ஆனால் எழுத்துக்களின் படி ஒலித்தால் பஃபட் என்றே ஒலிக்க வேண்டும். தமிழ் எவ்வளவோ இலகுவானது.

  3. /ஒரு மொழி, தந்தி அடிப்பது போல் ஒன்றிரண்டு குறியீடுகளை மட்டும் எழுத்துகளாக வைத்துக் கொள்ளலாம்; சீன மொழி போல் ஆயிரக்கணக்கான எழுத்துகள் வைத்துக் கொள்ளலாம்; இரண்டுமே இலகு இல்லை.

    எத்தனை எழுத்துகள் என்றாலும் அவற்றில் சீர்முறை இருப்பது நலம். இச்சீர்முறை தமிழில் உண்டு. ஒரு முறை எழுத்துகளைக் கற்றுக் கொண்டால், எந்தச் சொல்லையும் படிக்கலாம். எழுதலாம். தமிழில் எழுதுவதற்குத் தேவைப்படும் சிறிதளவு கூடுதல் உழைப்பு, படிப்பதற்குத் தேவைப்படும் உழைப்பை பல மடங்கு குறைக்கிறது. எழுதுவது ஒரு முறையே. பல கோடி மக்கள் பல கோடி முறை அதைப் படிக்கிறார்கள். படிப்பது இலகுவாக இருப்பதே முக்கியம்.

    கடினமான ஆங்கில மொழியைக் கற்கும் குழந்தைகளால், கண்டிப்பாக அதை விட பல மடங்கு இலகுவான தமிழையும் கற்றுக் கொள்ள இயலும்./

    உள்ளம் இருந்தால் எல்லாம் உடன்பாடு தான்.

  4. ஆங்கிலத்தில் 26 என்று கூறி மற்றவர்களை ஏய்க்கும் தமிழர்கள் ஏராளம்! இக் கருத்தை நான் எத்தனையோ முறை -நூறுதரம் அல்லது ஆயிரம்தரம்- கூறியிருப்பேன். என்றாலும் நாளும் ஏய்ப்பாளர்கள் ஓய்ந்தார்கள் இல்லை. ஆங்கிலம் அறியாத, பிற ஐரோப்பிய மொழிகள்
    அறியாத தமிழர்களை “ஆங்கிலம் படித்த” தமிழர்கள், 26 எழுத்துகள், 26 எழுத்துகள் என்று ஏய்க்கும் பிழைப்பு என்று தணியுமோ!!
    sew என்று எழுதுவார்கள் so’ என்பதுபோல ஒலிக்க வேண்டும். solder என்று எழுதுவார்கள் அதில் உள்ள “எல்” எழுத்தை விட்டுவிட்டு
    சாடர் என்று சா என்று தொடங்கி பலுக்க வேண்டும். ஆனால் sold சோல்ட்’ gold கோ’ல்ட்’ bold போல்ட்’. Steal என்றால் எப்படி ஒலிப்பீர்கள், ஆனால் steak என்றால் stake என்பதுபோல ஒலிக்க வேண்டும். ஒலிப்பொழுக்கம் மிகக் குன்றிய மொழி ஆங்கிலம். ஆயிரக்கணக்கான விதிகளை நினைவில் கொள்ளவேண்டும், எங்கு பயன்படும், பயன்படாது என்றும் நினைவில் கொள்ளவேண்டும். ஆங்கிலமும், பிரான்சிய மொழியும் இப்ப்டையானது. ஆனால் செருமன் (இடாய்ட்சு மொழி), எசுப்பானியம் (Spanish), இத்தாலிய மொழி போன்ற மற்ற மொழிகள் பலவும் இப்படி இல்லை. சீரான ஒலிப்புகள் கொண்ட மொழிகள்.