தமிழ் ஆர்வலர் ஒருவருடன் பேசிய போது தனித்தமிழ் இயக்கம் பற்றி பேச்சு வந்தது. திரும்பவும் ஒரு தனித்தமிழ் இயக்கம் வர வாய்ப்புகள் குறைவு என்றார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள்:
* பெருஞ்சித்திரனார், மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் போல் ஒரு இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் இப்போது இல்லை.
* சென்ற தனித்தமிழ் இயக்கம் வந்த 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இருந்த உலக கருத்துச் சூழல் இப்போது இல்லை. உலகமே இப்போது பொருள்முதல்வாதமாகவும் வலது சாரி சிந்தனை உடையதாகவும் மாறி வருகிறது. பல விழுமியங்களுக்கும் அறங்களுக்கும் மதிப்பு குறைந்து வருகின்றது. இத்தகைய சூழலிலேயே தமிழில் ஆங்கிலம், பிற மொழிகள் கலப்பை நோக்க வேண்டி உள்ளது. தமிங்கிலம் ஒரு தனி நோய் இல்லை. அது அதை விடப் பெரிய சமூகச் சீர்கேட்டின் பல அறிகுறிகளுள் ஒன்று.
* சென்ற தனித்தமிழ் இயக்கத்தின் குறி தமிழில் அளவு கடந்து இருந்த வடமொழிச் சொற்களை விலக்குவது. வடமொழி கலந்து பேசியோர் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்பதால், அதே வேளையில் தொடங்கிய திராவிட இயக்கம் என்னும் சமூக, அரசியல் இயக்கத்தின் பின்னணி தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுக்க பெரிதும் உதவியது. திராவிட இயக்கம் வேரூன்றா இலங்கையில் இன்றும் வடமொழியின் தாக்கம் கூடுதலாக இருப்பதைக் நோக்கலாம். ஆனால், தமிங்கிலம் என்பதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்று வரையறுக்க முடியாமல் அனைத்து மட்ட தமிழர்களிடமும் பரவி வருவதால் தடுப்பது கடினம்.