கற்றது தமிழ்

தமிழ் M.A (எ) கற்றது தமிழ் படம் பார்க்கும் போது என் பள்ளி வாழ்க்கை, தமிழுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, தமிழ் படித்திருந்தால் நான் எப்படி இருந்திருப்பேன் போன்ற நினைவுகள் வந்து போயின. நம் வாழ்க்கை குறித்த நினைவுகளைக் கிளறி விட இயல்வது ஒரு கலைபடைப்பின் வெற்றி தான். இப்படி ஒரு படம் வந்திருக்காவிட்டால் இன்றைய சூழலில் தமிழ்ப் படிப்பு,  தமிழ்ப் பட்டதாரிகள் நிலை, படம் தொட்டுக் காட்டும் சமூக ஏற்றத் தாழ்வுகள் குறித்து இன்றைய சூழலில் ஒரு விழிப்புணர்வு உரையாடல் இவ்வளவு பெரிதாய் நடந்திருக்க வாய்ப்பில்லை.

படத்தைப் பார்த்து விமர்சித்தவர்கள், உரையாடியவர்கள் பலரும் படத்தின் இறுதியில் சுட்டிக்காட்டிய விசயங்களை அலசினார்களே தவிர, ஒரு படமாய் இதன் கலைத்திறனை விமர்சித்தவர்கள் மிகக் குறைவு. இன்று வரை, இந்தப் படத்தைப் பாருங்கள் என்று எந்தக் காரணத்துக்காகவும் என் நண்பர்களுக்குப் பரிந்துரைக்க இயலவில்லை. படம் அலசும் விசயம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். குத்துப் பாட்டு இல்லை, ஆபாசம் இல்லை என்பதற்காக ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்லி விட முடியாது. இந்த மாதிரிப் படங்களை “critically acclaimed” என்று ஊடகங்கள் கொஞ்சம் போது எரிச்சலே மிஞ்சுகிறது.

படத்தின் பெரும் குறைகள்:

1.  நேர்க்கோட்டிலேயே கதை சொல்லி இருக்கலாம். முன்னும் பின்னுமாகச் சொல்வது எல்லாம் இயக்குநரின் மேதாவித்தனத்தைக் காட்டத் தான் என்று தோன்றுகிறது.

2. படத்தில் சுட்டிக்காட்டும் முக்கிய விசயங்கள் எல்லாம், முக்கியமாக முடிவுக்கு நெருங்கிய, சமூக ஏற்றத்தாழ்வு குறித்த விசயங்கள் எல்லாம் வசனங்களாகவே முன்வைக்கப்படுகின்றன. இந்த வசனம் இல்லை என்றால் இதைத் தான் இயக்குநர் சொல்ல வருகிறார் என்பது ஒருவருக்கும் புரிந்து இருக்காது. இந்த விசயத்தைச் சொல்ல ஒரு சிறந்த மேடைப்பேச்சோ மேடை நாடகமோ போதுமே? 

3. குழப்பமான பாத்திரப் படைப்பு. ஒரு காட்சியில் காலைப் பிடித்துக் கெஞ்சுவது போல் இருக்கிறார் நாயகன். அடுத்த காட்சி ஆவேசமாகப் பேசுகிறார். புரட்சிக்காரன் போல் தன் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்கிறார், அப்புறம், என்னத்துக்காக அதைத் தானே காவல் துறையிடம் கொடுத்து விட்டு கிறுக்குத்தனமாகச் செத்துப் போகிறார் என்று புரியவில்லை.

4. குழப்பமான கதை. அன்பும் ஆதரவுமற்ற சிறு வயது, காதல் தோல்வி, சமூக ஏற்றத் தாழ்வு என்று நாயகனின் மனப்பிறழ்வுக்கு பல காரணிகள் இருக்கும் போது குறிப்பிட்ட எந்தக் காரணியின் மீதும் பார்வையாளின் சிந்தனை செல்வது இயலாததாக இருக்கிறது. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் துவக்கத்திலேயே ஆனந்தியோ பெற்றோரோ நாயகனுடன் இருந்திருந்தால் அவன் இப்படி ஆகி இருப்பானா என்று நினைப்பதைத் தவிர்க்க இயலாது. மனம் பிறழ்ந்த ஒருவனின் கதையை நாடகத்தனமாகச் சொல்லாமல் சமூகத்தில் பலரைப் போல் இருக்கும் ஒருவனின் கதையை இன்னும் நேர்மையாக உறைக்கும் படிச் சொல்லி இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.

தன் வாழ்வில் பார்த்த பலரது நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கதை என்கிறார் இயக்குநர். சொல்வதானால் ஒருத்தனின் வாழ்வில் உண்மையிலேயே நடந்த கதையைக் கொஞ்சம் கூட்டிக் குறைத்துச் சொல்லலாம். பலரது வாழ்வைக் குழப்பி அடித்து சொல்ல நினைப்பதை எல்லாம் ஒரே படத்தில் சொல்ல நினைத்துச் சொதப்பியதாகவே இந்தப் படம் தெரிகிறது.

ஒருவனின் நாய்க்குட்டி சாகிறது, அம்மா சாகிறாள், அப்பா விடுதியில் விட்டு விட்டு இராணுவத்துக்குப் போகிறார், விடுதியில் இருந்த அன்புள்ள தமிழையாவும் இறக்கிறார், காதலித்த பெண் பிரிந்து போகிறாள், காசில்லாத நாயகன் காவலர்களிடம் மாட்டுகிறார், பைத்தியமாகிறார், ஏகப்பட்ட கொலைகள் செய்கிறார், காதலித்த பெண் விலைமாதாகிறாள், திரும்ப சந்தித்து இருவரும் சாகிறார்கள்…uff..இந்தக் கதையை என் நண்பரிடம் சொன்ன போது, ஆள விடுறா சாமி என்று தெறித்து ஓடிவிட்டார் 🙂 படம் ஏன் வணிக ரீதியில் பெரு வெற்றி பெற வில்லை என்று இப்போது புரிகிறது 🙂

அண்மைய தமிழ்த் திரைப்படங்களில் எரிச்சலூட்டும் இன்னொரு போக்கு – காவியப்படுத்தப்படும் சிறு வயது அல்லது பள்ளிக்காலக் காதல். ஏதோ ஓரிரு படத்தில் இப்படி காவியமாக்கிக் காட்டினால் பொறுத்துக் கொள்ளலாம். பல படங்களில் இதையே காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். இது உண்மையில் நிகழக்கூடிய ஒன்றாகவே எனக்குத் தோன்றவில்லை. இந்தக் கதையையே எடுத்துக்கொண்டால், பிரபாகர் ஆனந்தியை வளர்த்த பிறகு பார்த்திருக்காவிட்டால், ஆனந்தி மேல் இவ்வளவும் பற்றுதலும் பாசமும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனந்தி ஒரு மோசமான மாமனிடம் மாட்டி விலை மாதாக ஆகி இராவிட்டால் பிரபாகர் கூப்பிட்டவுடன் உயிர் உருகி வந்து செத்துப் போய் இருக்க மாட்டாள்.

படத்தின் கலைத்திறம் வேறு, படம் சொல்ல முற்படும் செய்தியின் முக்கியத்துவம் வேறு. அந்த விதத்தில் படம் சொல்ல முற்படும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து விரிவாக, ஆழமாக அலசும் அளவுக்கு எனக்கு அறிவு இருப்பதாகத் தோன்றவில்லை 🙂 என்பதால் அது பற்றி ஏதும் எழுதாமல் இருப்பதே நலம்.

—–

நண்பர்கள் சேர்ந்து திரை விமர்சனத்துக்கு என ஒரு கூட்டுப் பதிவு தொடங்கி இருக்கிறோம். பார்க்க – திரை விமர்சனம் . நீங்களும் எங்களுடன் இணைந்து எழுதலாமே?