தமிழ் விக்கிப்பீடியர்கள்

2005 மார்ச் முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கத் தொடங்கினேன். அதற்குப் பிறகு தமிழ் இணையத்தில் பல இடங்களில் சுற்றி வந்துவிட்டாலும், இன்று வரை 100% மன நிறைவு அளிக்கும் ஒரே திட்டம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் மட்டும் தான்.

தணியாத தமிழார்வத்துக்கு களமாக இருப்பது ஒரு காரணம். இன்னொரு முக்கியக் காரணம், தன்னலமற்ற, ஒத்த கருத்துடைய, தோழமை உணர்வு மிகுந்த, பண்பில் சிறந்த, நேர்மையான நண்பர்களுடன் பணியாற்றுவதே தனி இன்பம் தான்.

இவர்களில் சிலர் தமிழ் இணையத்தில் பிற இடங்களில் தென்படாதவர்கள் என்பதால் அவர்களைப் பற்றிய குறிப்பு:

1. மயூரனாதன் –  மீடியாவிக்கி மென்பொருளைப் பெருமளவில் முதலில் மொழிபெயர்த்தவர் இவரே. வேறு நண்பர்கள், உதவி, உற்சாக மொழிகள் இல்லாத நிலையில் தான் செய்யும் பணியில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு தன்னந்தனியாக இவர் தமிழ் விக்கிமீடியா திட்டங்களை முன்னெடுத்திராவிட்டால், இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது சிரமமே. இன்று வரை 1000க்கும் மேற்பட்ட விரிவான, தெளிவான, முழுமையான, சொந்தக் கட்டுரைகளை பல்வேறு தலைப்புகளிலும் எழுதி இருக்கிறார். அபுதாபியில் வசிக்கும் ஈழத்துக்காரர். தொழில்முறையில் கட்டடக்கலைஞர்.

2. செல்வா – இவர் ஒரு பேராசிரியர் என்ற நினைவே எங்களுக்கு வந்து உறுத்தாதபடி, பொடிப்பசங்களோடு இறங்கி பன்மடங்கு உற்சாகத்தோடு செயல்படுபவர். கலைச்சொல்லாக்கம், அறிவியல் தமிழ் ஆகியவற்றில் அனுபவம், அறிவு மிக்கவர். ஒரு திட்டத்தின் வெற்றிக்கு இளைஞர்களின் வெற்றி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இவர்களைப் போன்றவர்களின் வழிகாட்டுதலும். இவருடைய இயல்பான தமிழ் நடை கொஞ்சும் கட்டுரைகளுக்கு பட்டாம்பூச்சி ஒரு எடுத்துக்காட்டு.

3. நிரோஜன் சக்திவேல் – வயது 19. கனடாவில் வசிக்கும் ஈழத்து மாணவர். தமிழ்த் திரைப்படங்கள் குறித்த 2000க்கும் மேற்பட்ட குறுங்கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு சில நாட்களில் எழுதி எங்களைத் திணறடித்தவர். கூகுள் வீடியோவில் தமிழ்த் திரைப்படங்களை ஏற்றி அங்கிருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு விளம்பரம் தந்து அசர வைக்கிறார்.

4. வினோத் – வயது 20. பொறியியல் மாணவர். சப்பானிய அனிமே கதைப்பாத்திரங்கள், பௌத்த சமயம் போன்ற வேறுபட்ட தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி வருகிறார்.

5. கனக்ஸ் – ஆண்டின் எல்லா நாள்களுக்குமான கட்டுரைகள், சிறப்பு நிகழ்வுகள், கொண்டாட்டங்களுக்கான கட்டுரைகள் என்று நூற்றுக்கணக்கில் எழுதி இருக்கிறார். ஒரு முறை உடல்நலம் குன்றி சரியான மறுநாளே விக்கிக்கு வந்து பங்களிக்கத் தொடங்கி நெகிழச் செய்தார்.

6. நற்கீரன் – தமிழ் விக்கிப்பீடியாவில் கூடுதல் தொகுப்புகளைச் செய்தவர் இவராகத் தான் இருக்க வேண்டும். ஒரு தமிழின ஆய்வாளருக்கு உள்ள ஆர்வத்தோடு இணையத்தில் சிதறிக் கிடக்கும் தமிழ், தமிழர் குறித்த தகவல்களைச் சேகரித்துத் தருகிறார்.

7. கோபிஇணையத்தில் தமிழில் தரமான உள்ளடக்கம் உருவாக்குவதில் தணியாத ஆர்வம் கொண்டவர். இந்த ஆர்வம் இவரது நூலகம் திட்டத்திலும் வெளிப்படுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவுப் பணிகளைக் கவனிக்கிறார்.

8. மு. மயூரன் – மயூரனுக்கு அறிமுகமும் தேவையோ? தான் அறிந்த, அறிய விரும்பும் விசயங்கள் குறித்து தொகுத்து வைக்கும் இடமாகத் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறார். விக்கிப்பீடியா போன்ற விசயங்களுக்குப் பின்னணியில் இருக்கும் திறந்த மூலத் தத்துவம் குறித்தும் தெளிவாக வலைப்பதிவுலகில் எடுத்துரைக்கவல்லவர்.

9. சுந்தர் – புணர்ச்சிப் பரவசநிலைமௌடம் போன்ற சிக்கலான, மாறுபட்ட தலைப்புகளில் கட்டுரை எழுதுவது விருப்பம். பன்மொழி விக்கிமீடியா திட்டங்களுக்கு இடையில் தூதுவர் போல் செயல்பட வல்ல அனுபவம் மிக்கவர். தானியங்கிச் செயற்பாடுகளில் அறிமுகம் உள்ளவர். தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்களைத் தானியக்கமாக ஏற்றியதும் இவரே.

10. சிவகுமார் – நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதில் ஆர்வலர். சிறு சிறு கட்டுரைகளாக நூற்றுக்கணக்கில் எழுதி உள்ளார். நாள்தோறும் பிற கட்டுரைகளைப் படித்துத் திருத்துவது, கருத்து சொல்வது என்று அசர வைக்கிறார்.

11. உமாபதி – கணினி, மென்பொருள்கள் குறித்த நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதி வருகிறார். விக்கிப்பீடியாவை இணையத்துக்கு வெளியேவும் மக்களிடையே நேரடியாகக் கொண்டு செல்வதில் ஆர்வம் மிக்கவர்.

12. டெரன்ஸ் – நாடுகள், கிறித்தவம் குறித்த கட்டுரைகள் எழுதுகிறார். துப்புரவுப்பணிகளில் உதவ தானியங்கிகளை ஏவுகிறார். தள வடிவமைப்பை அழகாக மாற்றப் பல வார்ப்புருக்களை உருவாக்கித் தந்திருக்கிறார்.

விக்கிப்பீடியாவுக்கு அடுத்து தமிழ் விக்சனரி தற்போது உயிர்ப்புடன் செயல்படத் தொடங்கி இருக்கிறது. தமிழ் விக்சனரியர்களுள் தகவலுழவன், மாணிக்கம், உமாசுதன் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ் விக்கிநூல்கள், தமிழ் விக்கிமேற்கோள், தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்கி செய்திகள் போன்றவை இன்னும் துவக்க நிலையிலேயே இருக்கின்றன. 

தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்கு முனைப்புடன் பங்களிப்பவர்களில் கணிசமானவர்கள் ஈழத்தவர்கள்; 20 முதல் 25 வயதுக்காரர்கள்; ஆங்கில வழியத்தில் படித்தவர்கள்; தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்கள்.

***

பி. கு. 1 – ஆண்டுக்கணக்கில் பங்களித்து மனதில் நின்றவர்கள் சிலரைப் பற்றியே சொல்லி உள்ளேன். இன்னும் பலர் இருக்கிறார்கள். அவ்வப்போது வந்து சிறப்பாகப் பங்களித்து மறைபவர்கள் நிறைய. என் மறதி, சோம்பல், இக்கட்டுரை நீளம் காரணமாக விட்டுப் போனவர்கள் பொறுக்கவும். இல்லை, உடனடியாக விக்கிப்பணிக்குத் திரும்ப விடுக்கப்பட்ட அன்பு மிரட்டலாகக் கொள்ளவும் 😉

பி. கு. 2 –

விட்டுப்போன முக்கியமான தமிழ் விக்கிப்பீடியர் ஒருவர்:

ரவி – இவர் 2005 வாக்கில் விக்கிப்பீடியாவில் ஒரு சில கட்டுரைகள் எழுதினார். ஜோதிகா, சிம்ரன் போன்ற கட்டுரைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கருத்து கந்தசாமியாக இருப்பது முக்கிய பணி. விக்கிமீடியா திட்டங்கள் குறித்து தமிழ் இணையத்தில் எடுத்துச் சொல்லி கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி ஒப்பேற்றி வருகிறார் 🙂