தமிழ் செய்திகள்

தமிழ்நாட்டில் தமிழின் நிலை, தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளுக்கான தொடுப்புகளை இங்கு சேகரித்து வைக்க நினைக்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழின் நிலை, தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளுக்கான தொடுப்புகளை இங்கு சேகரித்து வைக்க நினைக்கிறேன்.

* தமிழில் மட்டுமே அரசாணைகள்

* தமிழ் கட்டாயம் – ஆங்கிலமும் முக்கியம் – ராமதாஸ்

* லண்டனா சென்னையா – ராமதாஸ் கேள்வி

* கல்லூரிகளில் கட்டாயத் தமிழ்ப் பாடத்துக்கான பரிந்துரை

* தமிழகத்தில் தமிழின் இழிவு நிலை – தமிழண்ணல் கட்டுரை

* தாய்த்தமிழ் பள்ளி

* திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி

செருப்புக்காக காலை வெட்டுவது எப்படி?

இன்றைய உதவிக் குறிப்பில், புதிதாக வாங்கிய மேலைநாட்டு ஆங்கிலச் சிந்தனைச் செருப்புக்குப் பொருத்தமாக உங்கள் தமிழ்க் காலை வெட்டுவது எப்படி என்று பார்ப்போம்.

1. திற, மூடு, நிறுத்து, துவக்கு போன்ற பல சுருக்கமான தமிழ் வினைச்சொற்களை பயன்படுத்துவது சிரமம் என்பதால் பண்ணு என்ற ஒரே ஒரு “magic வினைச்சொல்லை” மட்டும் பயன்படுத்துங்கள். இதனுடன் open, close , start , stop போன்ற ஆங்கில வினைச்சொற்களைச் சேர்த்துக் கொள்க.

இந்த முறையின் சிறப்புகள் –

ஆங்கில / பண்ணித் தமிழ் / தமிழ் முறைகளுக்குத் தேவைப்படும் எழுத்துக்கள், அதனால் வீணாகும் ஆற்றல், நேரம் குறித்து பார்ப்போம்.

ஆங்கிலம் பண்ணித் தமிழ் தமிழ் பண்ணித் தமிழ் வீணாக்கும் எழுத்துக்கள்
opened ஓபன் பண்ணினேன் திறந்தேன் 3
close க்ளோஸ் பண்ணு மூடு 4
think தின்க் பண்ணு நினை, யோசி 4
cut கட் பண்ணு வெட்டு 2

நல்ல தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசுவது வினைத்திறம் மிக்கது என்பதைக் கண்டுகொள்ள வேண்டாம். பண்ணித் தமிழ் பேசுவது தலையைச் சுற்றி காதைத் தொடுவது போல் தான் என்றாலும் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயன்றால் நிச்சயமாகப் பழக்கப்பட்டு விடும். ஒரு தலைமுறைக்கும் இதைத் தொடர்ந்து செய்தால் தலையைச் சுற்றாமலேயே காதைத் தொடலாம் என்பது அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் போகும் என்பது வரலாற்றுப் பாடம் – பண்ணித் தமிழ் என்ற நான்காம் வகைத் தமிழ் உருவாவது தனிச்சிறப்பு.

– நீங்கள் வளர வளர உங்கள் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் சிரமம் இல்லை. என் அக்கா மகன் twenty nineக்கு அடுத்து twenty ten என்கிறான். அவனைப் போல் நீங்களும் தமிழ் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளாமல் என்றும் சிறியோனாக ஆங்கில வினைச்சொல்+பண்ணு என்ற சமன்பாட்டை எளிதாகப் பின்பற்றலாம்.

– ஆங்கில வழியத்தில் பயிலும் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கற்கச் சிரமப்பட வேண்டாம். இதனால் அவர்கள் பாடச்சுமை குறையும்.

2. பண்ணித் தமிழ் கற்ற பிறகு, கணினியில் அதை எழுதும்போது தமிங்கிலத் தட்டச்சுப் பலகையைப் பயன்படுத்துங்கள். இதனால், உங்கள் தட்டச்சும் நேரம் அதிகமாகும், கை வலிக்கும், தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதிவீர்கள், மூணு சுழி ண-வா இரண்டு சுழி ன-வா என்பது போய் SHIFT+nஆ nஆ என்று நவீனமாகச் சிந்திப்பீர்கள் என்பது பெரு மகிழ்ச்சிக்குரியதாகும்.

எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.

சொல் romanised தமிழ்99 தமிங்கிலத் தட்டச்சு வீணாக்கும் எழுத்துக்கள்
தொழிலாளி thozilaa+SHIFT+li த ஒ ழ இ ல ஆ ள இ 3
வெற்றி ve+SHIFT+r+SHIFT+ri வ எ ற ற இ 2
கணையாழி ka+SHIFT+naiyaazi க ண ஐ ய ஆ ழ இ 4
தந்தம் thantham த ந த ம f 3

இன்னும் விரிவாக அறிய இங்கு பார்க்கவும்.

3. தமிழின் ஒவ்வொரு எழுத்தும் தனித்துவமானது என்று உணராமல், தமிழுக்கு என்று தனித்துவமான இடங்களை ஒருங்குறி அமைப்பில் கேட்டு வாங்காமல், ெ ி ் என்று கொம்பு வேறு கொக்கி வேறு புள்ளி வேறாக இடங்களைப் பெற்று அவற்றை இட்டு ஒட்டி தமிழ் எழுத்துக்களை கணினியில் படம் காட்டுங்கள். இதனால், கணினியில் உள்ள தமிழ்க் கோப்புகள் தேவையற்று மும்மடங்கு அளவு கூடும். தரவுப் பரிமாற்றம் மெதுவாக நடக்கும். கொம்பும் கொக்கியும் உலாவிகளில் பிய்ந்து திரிந்து கண்வலி, தலைவலி வர வைக்கும். பிறகு, நாம் அவற்றை நிரல் எழுதி சரி செய்து நம் நிரலாக்க அறிவை மெச்சிக் கொள்ளலாம். இப்படிப் பிய்த்துப் பிய்த்து தமிழ் எழுத்துக்களை உருவாக்கியதால் ஒரு ஆவணத்தில் உள்ள எழுத்துக்களைத் திறம்பட தேடுதல், வரிசைப்படுத்துதல் எல்லாமே சிரமமாகிப் போகும்.

4. ஆங்கிலச் சொற் திருத்திகளை உருவாக்குபவர்கள் அனைத்து ஆங்கிலச் சொற்களையும் குவித்து ஒரு தொகுப்பு உருவாக்கி அதில் இருந்து பிழைகளை சரி பார்ப்பார்கள். நாமும் இலட்சக்கணக்கான தமிழ்ச் சொற்களை இப்படிக் குவித்து சொற் திருத்தி உருவாக்குகிறோம் என்று ஆமை வேகத்தில் ஆண்டுகணக்கில் கூட்டு முயற்சியில் ஈடுபடுவோம். தமிழ் ஒரு கட்டமைப்புடைய மொழி என்பதையும் அதற்கு இலக்கணத் திருத்தியே கூடிய பொருத்தமாகவும் இருக்கும் என்பதையும் மறந்து எளிமையான சொற் திருத்திகள் உருவாக்கும் முறையைக் கிடப்பில் போடுவோம்.