தமிழ் மோதிரம்

சென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று.

பெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம்.

முன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை.

“தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா?”

“இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”.

“ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.”

“இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”

“ஏங்க… அதுவும் ஒரு எழுத்து தானங்க.. என்ன என்னவோ நுணுக்கமான வேலைப்பாடுகள் எல்லாம் செய்யுறீங்க? ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா?”

“இல்லீங்க.. வர்றதில்லீங்க..”

“ம்ம்.. இப்ப ஒருத்தர் வந்து 100 பவுன்ல வாங்கிறன்னு சொல்லிக் கேட்டா செய்வீங்களா மாட்டீங்களா? .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே?”

“…”

பக்கத்தில் இருந்த ஒரு சில விற்பனையாளர்களும் நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.

எனக்குத் தெரிந்த பொற்கொல்லர் ஒருத்தர் ஊரில் இருக்கிறார். அவருக்கு அழைத்து இது மாதிரி தமிழில் எழுத முடியுமா என்று அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டேன்.

“சரிங்க.. நாங்க ஊர்ல போயே பண்ணிக்கிறோம்”

“கொஞ்சம் இருங்க… இதைப் பத்தி phone பண்ணிக் கேட்டுத் தான் சொல்ல முடியும்.”

“சரி, கேட்டுச் சொல்லுங்க”ன்னுட்டு மோதிர மாதிரிகளைப் பார்க்கத் தொடங்கினோம்.

“இப்பல்லாம் யாருங்க தமிழ்ல கேட்கிறாங்க? மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க? பிள்ளங்களைக் கூட English mediumல தான் சேர்க்கிறாங்க”

“நாங்களும் English mediumல படிச்சிட்டு வெளிநாட்டுல எல்லாம் வேலை பார்த்துட்டுத் தான் வந்திருக்கோம்”

“ஓ.. அப்படிங்களா.. அப்படின்னா ஒன்னும் சொல்றதுக்கில்ல..” என்று பம்மத் தொடங்கினார்.

“இவ்வளவு பெரிய சென்னைல யாருமே தமிழ்ல எழுதித் தரக் கேட்பது இல்லையா?”

“இல்லீங்க..”

“இதுக்கும் கலைஞர் ஒரு சட்டம் போட்டால் தான் சரிப்படுமோ?”

சிரித்தார்.

அதற்குள் தொலைப்பேசியில் யாருடனோ பேசி, தமிழில் செய்ய முடியும் என்று உறுதிப்படுத்தினார்கள்.

மோதிரத்தில் பெயர் எழுதுவதில் இரண்டு வகையாம். கீறியது போல் எழுதுவது, அதன் மேலேயே குமிழ் போல் இடுவது.. ( engrave, emboss என்று அவர் தமிழில் சொன்னார் ) இதில் கீறுவது மாதிரி தான் எழுத முடியும் , குமிழ் போல் எழுதுவதில் நுட்பச் சிக்கல் இருக்கிறது என்று சொன்னார். கணினியில் தமிழ் வராது என்று பூச்சி காட்டும் கதை போல் இருக்கிறதே எனக் கடுப்பாக வந்தது. திரும்பவும் பொற்கொல்லரை அழைத்து உறுதி செய்தவுடன் வழிக்கு வந்தார்கள்.

ஒரு தாளைக் கொடுத்து, பெயரை capital letterல் எழுதிக் கொடுக்கச் சொன்னார்.

“தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க…”

அவருக்கு மண்டை காயத் தொடங்கி இருக்க வேண்டும்.

பெயருடன் சேர்த்து முகவரியும் எழுதப் போனேன்.

“முகவரியும் தமிழ்ல தான் எழுதுவீங்களா, இல்லை englishல எழுதுவீங்களா?”

அவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை.

“தமிழ்னா என்னங்க அவ்வளவு நக்கலு? இது தமிழ்க் கடையா இல்ல …… கடையா? நீங்க தமிழ் தான?”

அவருடைய முகம் இறுகத் தொடங்கியது.

“நான், தமிழ், ஆங்கிலம் எல்லாமே பேசுவேன்.”

“தமிழ்நாட்டுல தான கடை வெச்சிருக்கீங்க? தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம்?”

“விடுங்க. அதான் தமிழ்ல மோதிரம் செஞ்சு நீங்க செயிச்சுட்டீங்க இல்ல”

வாடிக்கையாளருக்கு வேண்டியதைத் தருவதை அவர்களுக்கு இழப்போ?

உத்தேச விலையில் 18% சேதாரம், 700 ரூபாய் செய்கூலி போட்டார். மோதிரத்துக்கு இது மிகவும் அதிகம் என்று சொன்னதால், மேற்பார்வையாளர் வந்து 14% வீதம் ஆக்கினார். இந்தக் கடையில் செய் கூலியே இல்லை என்று சொல்லி 700 ரூபாயை நீக்கினார்.

விற்பனையாளரை நிமிர்ந்து பார்த்தேன்.

சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ?