தமிழ் மொழிக் கல்வி

“ஆங்கில வழியத்தில் பயிலும் குழந்தைகள், வெளிநாடுகளில் வளரும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகின்றன. தமிழ் எழுத்து முறை இலகுவாக்கினால், தமிழ் படிப்பதை இலகுவாக்கலாம்” எனச் சிலர் கருதுகின்றனர்.

குழந்தைகள் தமிழ் கற்கச் சிரம்பபடுவதற்கான காரணங்கள்:

* பாடச் சுமை. ஒன்றாம் வகுப்புப் பிள்ளைக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகளைக் கற்பித்தால் குழம்பாதா?

* ஆர்வமூட்டாத தமிழ் மொழிப் பாடத்திட்டம். அலுப்படிக்கும் பயிற்சி முறைகள். திறம் குறைந்த பள்ளிகள். ஆசிரியர்கள்.

* தமிழ் படித்தால் என்ன நன்மை என்ற எண்ணத்தால் வரும் ஐயம், அலட்சியம்.

* வெளிநாட்டில் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியால் சமூகப் பயன் ஏதும் இல்லை. பெரும்பாலும் வாழும் நாட்டின் உள்ளூர் மொழியிலேயே நண்பர்கள், உறவினர்களுடன் பேசத் தலைப்படுகின்றன. பெற்றோரின் விருப்பத்துக்காக கட்டாயப்படுத்தப்படுபவர்கள் பலர். அதிகபட்சம், தமிழ்த் திரைப்படங்களைப் புரிந்து கொள்ள, ஆங்கிலம் தெரியாத தாத்தா பாட்டிகளுடன் பேசத் தமிழ் தேவைப்படலாம். எழுத, படிப்பதற்கான தேவை இல்லை. தேவையில்லாத ஒன்றைக் கற்றுக் கொள்ள ஆர்வம் குறைவாகவே இருக்கும்.

இது வெளிநாட்டில் வாழும் அனைவரின் தாய்மொழிகள், முதன்மை சமூக, பொருளாதார பயன் தராத, குறைபாடுடைய கல்வி முறைகள் மூலம் கற்பிக்கப்படும் மொழிகள் அனைத்தும் எதிர்க்கொள்ளும் பிரச்சினை. தமிழ் மொழியின் இயல்பு, கட்டமைப்பால் வரும் பிரச்சினை இல்லை.

கணிதம் பயிலச் சிரமமாக இருக்கிறது என யாரும் 1 முதல் 9 எண்களுக்குப் பதிலாக 1, 0 ஆகிய இரு எண்களை மட்டும் பயன்படுத்துவோம் என்பதில்லை. பித்தகாரசு தேற்றம் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கிறது என்று யாரும் தேற்றத்தையே மாற்றுவதில்லை. கல்வி முறையின் குறைபாட்டை, கற்பிக்கப்படும் பொருளின் குறைபாடாக எண்ணக்கூடாது. குழந்தைகள் தமிழ் கற்கச் சிரமப்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித் தரலாம். பாடத்திட்டத்தை, பயிற்சி முறையை இலகுவாக்கலாம். புதிய ஆர்வமூட்டும் பயிற்சி முறைகளைக் கொண்டு வரலாம். ஆசிரியர்களின் திறன்களைக் கூட்டலாம்

வேலை கிடைக்கும், வெளிநாட்டு மேல்படிப்பு வாய்ப்பு கிடைக்கும் என்றால் சிரமமான செருமன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளையே கூட மாணவர்கள் காசு செலவழித்து தனிப்பயிற்சி மூலம் கற்றுக் கொள்ளத் துணிகின்றனர்.  தாய்மொழியைக் கற்க இயலாதா?

தமிழின் சமூக, பொருளாதார பயன்களைக் கூட்டுவதே தமிழ்க் கற்றலைத் தூண்டும். தமிழ் மொழியின் இயல்பையும் கட்டமைப்பையும் மாற்றுவது தீர்வு அல்ல.

தொடர்புடைய ஆய்வுக் கட்டுரை: Tongue-Tied in Singapore: A Language policy for Tamil

ஆங்கில எழுத்து முறை இலகுவானதா?

“ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டுமே உள்ளது.  தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால் குழந்தைகள் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகிறார்கள்” என்று சிலர் எழுதுகிறார்கள்.

ஆங்கில எழுத்துமுறை இலகுவானதா? இல்லை.

ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் 26. இவற்றில் இருந்து மாறுபடும் சிறிய எழுத்து வடிவங்கள் 16. மொத்தம் 42 எழுத்துகள்.

எந்தெந்த இடங்களில் பெரிய எழுத்துகள் வரும், வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

chalk என்பதில் ch ச ஒலி தரும். அதுவே, character என்பதில் ch க ஒலி தரும். சில இடங்களில் t, b அமைதியாகி ஒலி தராது. இலட்சக்கணக்கான சொற்களின் ஒலிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். வெறும் எழுத்துகளை மட்டும் வைத்து புதிய சொற்களின் ஒலிப்பை அறிய இயலாது.

ஒரு மொழி, தந்தி அடிப்பது போல் ஒன்றிரண்டு குறியீடுகளை மட்டும் எழுத்துகளாக வைத்துக் கொள்ளலாம்; சீன மொழி போல் ஆயிரக்கணக்கான எழுத்துகள் வைத்துக் கொள்ளலாம்; இரண்டுமே இலகு இல்லை.

எத்தனை எழுத்துகள் என்றாலும் அவற்றில் சீர்முறை இருப்பது நலம். இச்சீர்முறை தமிழில் உண்டு.  ஒரு முறை எழுத்துகளைக் கற்றுக் கொண்டால், எந்தச் சொல்லையும் படிக்கலாம். எழுதலாம். தமிழில் எழுதுவதற்குத் தேவைப்படும் சிறிதளவு கூடுதல் உழைப்பு, படிப்பதற்குத் தேவைப்படும் உழைப்பை பல மடங்கு குறைக்கிறது. எழுதுவது ஒரு முறையே. பல கோடி மக்கள் பல கோடி முறை அதைப் படிக்கிறார்கள். படிப்பது இலகுவாக இருப்பதே முக்கியம்.

கடினமான ஆங்கில மொழியைக் கற்கும் குழந்தைகளால், கண்டிப்பாக அதை விட பல மடங்கு இலகுவான தமிழையும் கற்றுக் கொள்ள இயலும்.

கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி

தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.

கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி குறித்த சில தமிழ் வலைப்பதிவு இடுகைகள்:

தமிழ் வளர்ப்பு – அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும் – இலவசக் கொத்தனார்

மேற்கண்ட இடுகைக்கு வந்த தக்க எதிர்வினைகள்:

காதுல பூ – வவ்வால்

பள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2% தானா? – புருனோ

இந்த இடுகைகள், மறுமொழிகளில் பிடித்த கருத்துகள்:

* “எதையும் கட்டாயப்படுத்தக்கூடாது. மாணவர் விருப்பத்துக்கு விட வேண்டும்” என்ற சல்லிக்கு எதிராக நவீன் சொன்னது:

* “இப்படி கட்டாயப்படுத்துவது மக்களாட்சியா” என்ற கேள்விக்கு இராமனாதன் சொன்னது.

இந்த விசயம் குறித்த என் சிந்தனைகள்:

தமிழே எழுதப் படிக்கத் தெரியாமல் நல்ல தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி பயின்று தமிழ்நாட்டிலேயே வேலைக்கு அமர்பவர்கள் எப்படி தமிழ் பேசும் பாமர மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும்? (இந்த முக்கியமான பிரச்சினையை வவ்வால் சுட்டி இருந்தார்). ஏற்கனவே ஆங்கில மயமாகி வரும் அரசு, தனியார் துறைகளை தங்கள் வசதிக்காக முழுக்க ஆங்கில மயமாக்குவார்கள். “மனித உரிமை” என்ற பெயரில் தமிழைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கும் தமிழர்களே, தமிழ் முழுக்க அரசு மொழியாவதற்கு பெருந்தடையாக இருப்பார்கள்.

ஆங்கிலப் பாடத்தில் பயிற்சி பெறாத ஒரே காரணத்தால் பள்ளியில் தேர்ச்சி அடையாமல் படிப்பைப் பாதியில் எத்தனை மாணவர்கள் கைவிடுகிறார்கள்? இவர்களின் விருப்பத்தை எல்லாம் கேட்டிருந்தால் முதலில் ஆங்கிலப் பாடத்தைத் தான் வேண்டாம் என்றிருப்பார்கள். தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை இவர்கள் விருப்பம் அறியாமல், அவர்களுக்குத் தேவை இல்லாமல் திணிப்பதை விடவா தாய்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவது பெரிய குற்றம்?

தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினருக்கும் வெளியே போக வர, பேச தமிழ் தேவை என்ற அடிப்படையில் தமிழ் கற்பிப்பது தவறு இல்லை. கட்டாயத் தமிழ்க் கல்வித் திட்டத்துக்கு எந்த மாணவரும் முணுமுணுப்பதாகத் தெரியவில்லை. பெற்றோர்கள் தான் குதிக்கிறார்கள். ஏன்?

தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.

வேறு என்ன சொல்ல?