தமிழ் மொழிக் கல்வி

“ஆங்கில வழியத்தில் பயிலும் குழந்தைகள், வெளிநாடுகளில் வளரும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகின்றன. தமிழ் எழுத்து முறை இலகுவாக்கினால், தமிழ் படிப்பதை இலகுவாக்கலாம்” எனச் சிலர் கருதுகின்றனர்.

குழந்தைகள் தமிழ் கற்கச் சிரம்பபடுவதற்கான காரணங்கள்:

* பாடச் சுமை. ஒன்றாம் வகுப்புப் பிள்ளைக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகளைக் கற்பித்தால் குழம்பாதா?

* ஆர்வமூட்டாத தமிழ் மொழிப் பாடத்திட்டம். அலுப்படிக்கும் பயிற்சி முறைகள். திறம் குறைந்த பள்ளிகள். ஆசிரியர்கள்.

* தமிழ் படித்தால் என்ன நன்மை என்ற எண்ணத்தால் வரும் ஐயம், அலட்சியம்.

* வெளிநாட்டில் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியால் சமூகப் பயன் ஏதும் இல்லை. பெரும்பாலும் வாழும் நாட்டின் உள்ளூர் மொழியிலேயே நண்பர்கள், உறவினர்களுடன் பேசத் தலைப்படுகின்றன. பெற்றோரின் விருப்பத்துக்காக கட்டாயப்படுத்தப்படுபவர்கள் பலர். அதிகபட்சம், தமிழ்த் திரைப்படங்களைப் புரிந்து கொள்ள, ஆங்கிலம் தெரியாத தாத்தா பாட்டிகளுடன் பேசத் தமிழ் தேவைப்படலாம். எழுத, படிப்பதற்கான தேவை இல்லை. தேவையில்லாத ஒன்றைக் கற்றுக் கொள்ள ஆர்வம் குறைவாகவே இருக்கும்.

இது வெளிநாட்டில் வாழும் அனைவரின் தாய்மொழிகள், முதன்மை சமூக, பொருளாதார பயன் தராத, குறைபாடுடைய கல்வி முறைகள் மூலம் கற்பிக்கப்படும் மொழிகள் அனைத்தும் எதிர்க்கொள்ளும் பிரச்சினை. தமிழ் மொழியின் இயல்பு, கட்டமைப்பால் வரும் பிரச்சினை இல்லை.

கணிதம் பயிலச் சிரமமாக இருக்கிறது என யாரும் 1 முதல் 9 எண்களுக்குப் பதிலாக 1, 0 ஆகிய இரு எண்களை மட்டும் பயன்படுத்துவோம் என்பதில்லை. பித்தகாரசு தேற்றம் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கிறது என்று யாரும் தேற்றத்தையே மாற்றுவதில்லை. கல்வி முறையின் குறைபாட்டை, கற்பிக்கப்படும் பொருளின் குறைபாடாக எண்ணக்கூடாது. குழந்தைகள் தமிழ் கற்கச் சிரமப்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித் தரலாம். பாடத்திட்டத்தை, பயிற்சி முறையை இலகுவாக்கலாம். புதிய ஆர்வமூட்டும் பயிற்சி முறைகளைக் கொண்டு வரலாம். ஆசிரியர்களின் திறன்களைக் கூட்டலாம்

வேலை கிடைக்கும், வெளிநாட்டு மேல்படிப்பு வாய்ப்பு கிடைக்கும் என்றால் சிரமமான செருமன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளையே கூட மாணவர்கள் காசு செலவழித்து தனிப்பயிற்சி மூலம் கற்றுக் கொள்ளத் துணிகின்றனர்.  தாய்மொழியைக் கற்க இயலாதா?

தமிழின் சமூக, பொருளாதார பயன்களைக் கூட்டுவதே தமிழ்க் கற்றலைத் தூண்டும். தமிழ் மொழியின் இயல்பையும் கட்டமைப்பையும் மாற்றுவது தீர்வு அல்ல.

தொடர்புடைய ஆய்வுக் கட்டுரை: Tongue-Tied in Singapore: A Language policy for Tamil

ஆங்கில எழுத்து முறை இலகுவானதா?

“ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டுமே உள்ளது.  தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால் குழந்தைகள் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகிறார்கள்” என்று சிலர் எழுதுகிறார்கள்.

ஆங்கில எழுத்துமுறை இலகுவானதா? இல்லை.

ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் 26. இவற்றில் இருந்து மாறுபடும் சிறிய எழுத்து வடிவங்கள் 16. மொத்தம் 42 எழுத்துகள்.

எந்தெந்த இடங்களில் பெரிய எழுத்துகள் வரும், வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

chalk என்பதில் ch ச ஒலி தரும். அதுவே, character என்பதில் ch க ஒலி தரும். சில இடங்களில் t, b அமைதியாகி ஒலி தராது. இலட்சக்கணக்கான சொற்களின் ஒலிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். வெறும் எழுத்துகளை மட்டும் வைத்து புதிய சொற்களின் ஒலிப்பை அறிய இயலாது.

ஒரு மொழி, தந்தி அடிப்பது போல் ஒன்றிரண்டு குறியீடுகளை மட்டும் எழுத்துகளாக வைத்துக் கொள்ளலாம்; சீன மொழி போல் ஆயிரக்கணக்கான எழுத்துகள் வைத்துக் கொள்ளலாம்; இரண்டுமே இலகு இல்லை.

எத்தனை எழுத்துகள் என்றாலும் அவற்றில் சீர்முறை இருப்பது நலம். இச்சீர்முறை தமிழில் உண்டு.  ஒரு முறை எழுத்துகளைக் கற்றுக் கொண்டால், எந்தச் சொல்லையும் படிக்கலாம். எழுதலாம். தமிழில் எழுதுவதற்குத் தேவைப்படும் சிறிதளவு கூடுதல் உழைப்பு, படிப்பதற்குத் தேவைப்படும் உழைப்பை பல மடங்கு குறைக்கிறது. எழுதுவது ஒரு முறையே. பல கோடி மக்கள் பல கோடி முறை அதைப் படிக்கிறார்கள். படிப்பது இலகுவாக இருப்பதே முக்கியம்.

கடினமான ஆங்கில மொழியைக் கற்கும் குழந்தைகளால், கண்டிப்பாக அதை விட பல மடங்கு இலகுவான தமிழையும் கற்றுக் கொள்ள இயலும்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன்.

தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார்.

இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக தமிழகத்துக்கு வெளியே 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் இச்சீர்திருத்தம் அவர்கள் இலகுவாகத் தமிழ் கற்க உதவும் என்றும் சொல்கிறார். இந்த அடிப்படையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இத்தொகையைக் காட்டிலும் பெரிய மக்கள் தொகையை அயலகத்தில் கொண்டுள்ள மொழிகள் எத்தனையோ உள்ளன. (எடுத்துக்காட்டுக்கு, சீனம்.) இந்த மொழிகள் எவையும் இதற்காக தங்கள் எழுத்து முறையை மாற்றுவதில்லை.

அயலக மக்கள் மொழியைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அவர்களுக்குத் தாயக மக்களுக்கு உள்ள கல்வி, சமூகச் சூழல் வாய்க்காததே முக்கிய காரணம். இப்படி ஒரு எழுத்துச் சீர்திருத்தம் செய்தால், அவர்கள் மொழித்திறன் கூடும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை ஆய்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க, இந்த மாற்றம் அவர்களுக்காக தாயகத் தமிழர்களையும் சேர்த்துக் குழப்பும்.

பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்று இதனைக் குறிப்பிடுவதும் ஏற்புடையதாக இல்லை.

அச்சு வில்லைகள் தொடர்பான (நிறுவக் கூடிய) நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் வந்ததாக கேள்வி.

அதுவும் அவர் புதிதாக குறியீடுகள் ஏதும் புகுத்தவில்லை. ஆகார, ஐகார வரிசைகளில் ஏற்கனவே மற்ற உயிர்மெய்யெழுத்துகள் பயன்படுத்திய குறியீடுகளையே றா, னா, ணா, லை, ளை, னை, ணை ஆகியவற்றுக்குப் பொருத்தினார். எழுதும் முறை புதிதானாலும் மக்கள் ஏற்கனவே அக்குறியீடுகளுக்குப் பழகி இருந்தது ஒரு முக்கிய விசயம். தற்போதைய பரிந்துரையில் முழுக்க புதுக் குறியீடுகள் வருவது குழப்பும்.

நூற்றாண்டுகள் தோறும் நேர்ந்த தமிழ் எழுத்து மாற்றம் குறித்த படம் காணலாம். இதில் எனக்கு சில ஐயங்கள்:

* இந்த மாற்றம் ஒரு சில ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதா? அல்லது, சீராக அக்காலத்தைய எல்லா கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் காணப்பட்டதா?

* தகவல் தொடர்பு பெரிதாக இல்லாத அக்காலத்தில் சீரான எழுத்து மாற்றங்கள் இருந்தது எப்படி?

* இந்த எழுத்து மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்திருக்க கூடும்? இப்போது போல் யாரும் முடிவெடுத்து மாற்றி இருப்பார்களா? அதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரம் யாரிடம் இருந்தது?

* இல்லை, எழுதப்பட்ட பொருள், அதற்குப் பயன்படுத்திய கருவிகளின் தன்மை காரணமாக, அதாவது நடைமுறை நுட்பக் காரணங்களால், இம்மாற்றங்கள் தானாக நிகழ்ந்தவையா (யாரும் முடிவெடுத்துச் செயற்படுத்தாமல்)?

தமிழ் மொழி குறித்த இவ்வாதாரங்கள் இல்லாவிட்டாலும் இதே போல் மாற்றங்கள் நிகழ்ந்த பிற மொழிகளின் தன்மைகளையாவது அறிய வேண்டும். இதன் மூலம், நாம் தற்காலத் தமிழில் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்கள் குறித்து ஒரு அறிவடிப்படை நிலைப்பாட்டை எடுக்க இயலும்.

தொடர்புடைய உரையாடல்:  எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு