தலை எழுத்து

ஒவ்வொருவர் அறியாமை, அரசியல், கொள்கைக்கு ஏற்பவும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வம் என்று ஒன்று தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. அத்தகைய அதிகாரம் ஒன்று இருந்தாலும் நம்முடைய கொள்கைகளைப் புறந்தள்ளி அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

நம்முடைய பிறருடைய பெயர்களையும் தமிழ்த் தலை எழுத்துகளைக் கொண்டே எழுத முன்வர வேண்டும்.

எடுத்துக்காட்டு, முத்துச்சாமியின் மகன் வெற்றிவேல் = மு. வெற்றிவேல்.

ஏன்?

* மு.Vetrivel அல்லது Mu. Vetrivel என்று எழுதிப் பார்த்தால் இதன் முட்டாள்த்தனம் புரியும்.

* முதல் எழுத்து மு தமிழ் எழுத்தைச் சுட்டுகிறது. ஏ, பி, சி, டி, இ, ஜி, ஐ, ஜே, கே, ஓ, பி, டி, யு, வி  போன்றவை எந்தமொழி எனத் தெரியாமல் குழப்பும்.

* 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் பரவலாகவும் தற்போதும் கூட சிற்றூர்களிலும் தமிழிலேயே தலை எழுத்துகளை எழுதும் வழக்கே இருக்கிறது. தலை எழுத்து என்னும் சொல்லையே கூட அருட்பெருங்கோ மூலம் அறிந்தேன். எங்கள் ஊரில் விலாசம் என்பார்கள். சுப்பையாவை சூனா பானா என்பார்கள். சின்னதம்பியைச் சீனா தானா என்பார்கள்.

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சமியாகிய M. S. சுப்புலட்சுமியை ம. ச. சுப்புலட்சமி என்றும் கைலாசம் பாலசந்தராகிய K. பாலசந்தரை கை. பாலசந்தர் என்றும் எழுதத் தயங்குகிறோம்.

இப்படி தயங்குவதற்கான முக்கிய காரணம்:

“இது அதிகாரப்பூர்வப் பெயர். இப்பெயராலேயே பரவலாக அறியப்பெற்றுள்ளனர். தலை எழுத்தை மாற்றினால் குழப்பம் வரும். கே. பாலசந்தரை கை. பாலசந்தர் என்று கை, கால் எல்லாம் போட்டு எழுதுவது மரியாதை குறைவாக உள்ளது.” போன்ற சிந்தனைகளே !

இந்த அதிகாரப்பூர்வப் பெயர் என்ற கருத்துருவும் தயக்கமும்  தேவை அற்றது:

* தனி மனிதர்களின் விருப்பை விட பலர் பேசும் மொழியின் தன்மைக்கு மதிப்பு தருவதே நியாயம்.  பெயருக்குரியவர் அப்படி எழுதிவிட்டார் என்பதற்காக நாமும் தொடர்ந்து மொழியைச் சிதைத்து எழுதலாகாது.

* மக்கள் தொலைக்காட்சி போன்ற பல தமிழார்வல ஊடகங்கள் முழுக்கத் தமிழ் தலை எழுத்துகளைக் கொண்டே செய்திகள் வெளியிடுகின்றன. நாம் புதிதாகவோ கூடாததாகவோ ஒன்றும் செய்யவில்லை.

* சொத்து ஆவணம், வங்கிச் சீட்டு போன்றவற்றில் தான் ஒருவர் எழுதுகிறபடியே பெயர் எழுதவேண்டும். அங்கும் கூட அது அவர் கைப்பட எழுதியது தானா என்றே முதன்மையாகப் பார்க்கப்படும். தமிழா ஆங்கிலமா என்பது இரண்டாம் நிலையே. வேறெங்கும் பெயர் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாக வேண்டிய தேவை இல்லை.

* ஒருவரின் பெயரைத் தமிழில் எழுதினால் மரியாதை குறைவாக இருக்கிறது என்பது ஒரு மொழி சார் இனத்தின் தன்னாண்மைக்கு நேரடியாக விடுக்கப்படும் மிரட்டலாகவே கருத இயலும்.

* Srilanka என்பதை Srilanka அரசு ஸ்ரீலங்கா என்றே எழுதினாலும் ஈழத்தமிழர்கள் ஏன் சிறீலங்கா என்றே எழுதுகின்றனர்? மொழி சார் அரசியல், அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவது தானே காரணம்? ஆனால், ஈழத் தமிழர்கள் பலரும் சிறீலங்கா என்றே எழுதினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏன் விடாது ஸ்ரீலங்கா என்கின்றனர்? பொது வழக்கம், ஈழத் தமிழர்கள் விருப்பம் என்பதைச் சுட்டி தமிழ்நாட்டுத் தமிழரையும் சிறீலங்கா என்றே எழுத வைத்து விட முடியுமா? இதில், எது அதிகாரப்பூர்வமானது என்பதை யார் முடிவு செய்வார்கள்? அதைப் பொது வழக்கில் எப்படி நடைமுறைப்படுத்துவது?

என் புரிதலில் ஒவ்வொருவர் அறியாமை, அரசியல், கொள்கைக்கு ஏற்பவும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வம் என்று ஒன்று தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. அத்தகைய அதிகாரம் ஒன்று இருந்தாலும் நம்முடைய கொள்கைகளைப் புறந்தள்ளி அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

தமிழில் பெயர் எழுதுவோம்.