இன்று சொல்லி வைத்தாற்போல் தமிழ்மணம், கில்லி, தேன்கூடு ஆகிய மூன்று தளங்களும் செயல் இழந்து உள்ளன !! இது மாதிரி நேரங்களில் தான் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் தேவை புலப்படுகிறது. தமிழ்ப் பதிவுகளைப் படிக்காவிட்டால் கையும் காலும் ஓடாதவர்கள், நிலைமை சீராகும் வரை (அதுக்கு அப்புறமும் தான் 🙂 ) தமிழ்ப் பதிவுகள், மாற்று! தளங்களை அணுகலாம். அல்லது, Bloglines, Google Reader, NetVibes மூலம் நீங்களே உங்கள் திரட்டியை உருவாக்கிக் கொள்வது நலம்.
ஆனால், இதில் என்ன பிரச்சினை என்றால், அண்மைக்காலங்களில் தமிழ்மண வடிவமைப்புச் சீரமைப்பு, வழங்கி இடம்பெயர்ப்பு காரணமாக அவ்வப்போது தமிழ்மணம் செயலிழக்க நேரிடுவதால், அது செயல் இழக்கும்போது அதனோடு இணைக்கப்பட்ட 2000+ தமிழ் வலைப்பதிவுகளும் செயல் இழக்கின்றன அல்லது மிகவும் மெதுவாகத் திறக்கின்றன. இதனால் தமிழ்மணத்தைப் பார்க்க இயலாமல் போவதோடு நம் சொந்தப் பதிவுகள், நண்பர்கள் பதிவுகள், தகவல் தேடி செல்லும் பதிவுகள் என்று அனைத்தையும் அணுக முடியாத நிலை உள்ளது. ஒரு தளம் தான் இணைப்பு தரும் தளங்களையும் சேர்த்து முடக்குவது முற்றிலும் ஏற்க இயலாத ஒன்று. தமிழ்மண வழங்கியில் இருந்து நிரல்களைப் பெறுமாறு இப்பதிவுகள் அமைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். தமிழ்மண நிரல்களை அவர்கள் வழங்கியில் இருந்து பெறாமல் தங்கள் வலைப்பதிவிலேயே சேமித்துக் கொள்ளும் வகையில் இருந்தால் இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கலாம். இது குறித்து தமிழ்மணத்துக்கு எழுதி உள்ளேன். விரைவில் சரி செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
பலரும் [email protected] என்ற முகவரிக்கு மடல் இட்டால், இந்தப் பிரச்சினையை முன்னுரிமை கொடுத்து சரி செய்ய தமிழ்மணம் முன்வரலாம்.