தமிழ்க் கொலை

இணையம் தமிழை வளர்க்கிறது என்ற மகிழ்ச்சி ஒரு புறம். ஆனால், அதே வேளை தமிழில் எழுதுவது குறித்த குறைந்தபட்ச அறிவு, பயிற்சி, பொறுப்பு இல்லாதவர்கள் தமிழைக் கழுத்தை அறுக்காத குறையாக குதறிக் கொலை செய்யும் கொடுமை இன்னொரு புறம். இப்படி இணையத்தில் அடிக்கடி காணப்படும் தமிழ்க் கொலைகளை இந்த இடுகையில் ஆவணப்படுத்தி வைக்க விரும்புகிறேன்.

இணையம் தமிழை வளர்க்கிறது என்ற மகிழ்ச்சி ஒரு புறம். ஆனால், அதே வேளை தமிழில் எழுதுவது குறித்த குறைந்தபட்ச அறிவு, பயிற்சி, பொறுப்பு இல்லாதவர்கள் தமிழைக் கழுத்தை அறுக்காத குறையாக குதறிக் கொலை செய்யும் கொடுமை இன்னொரு புறம். இப்படி இணையத்தில் அடிக்கடி காணப்படும் தமிழ்க் கொலைகளை இந்த இடுகையில் ஆவணப்படுத்தி வைக்க விரும்புகிறேன்.

கொலை 1:

சின்ன என்று எழுதுவதற்குப் பதில் ச்சின்ன என்று எழுதுவது. சின்ன என்று எழுதினாலே chinna என்று தான் வாசிக்க வேண்டும். சகரம் வரும் இடங்களில் எல்லாம் cha என்று வாசிப்பதற்குப் பதில் sa என்று வாசித்து விட்டு chi என்று வாசிப்பதற்காக இப்போது ச்சி என்று எழுதத்தொடங்கி இருக்கிறார்கள். ச்சின்னச்சின்ன ஆசை, ச்சின்னக் கேள்வி என்று தொடங்கி இப்போது ச்சின்னப்பையன் என்று பதிவரே இருக்கிறார்.

மகன், முருகன், காகம் என்று எழுதி மஹன், முருஹன், காஹம் என்று பலுக்குவது என்று இதுவரை பலுக்கற் கொலைகள் தான் நடந்து வந்தன. பலுக்குவதை ஒழுங்காகப் பலுக்கி விட்டு எழுதும் போது ச்சின்ன என்று எழுதுவது புது விதமான கொலையாக இருக்கிறது 🙁

சொல்லின் முதலில் வரும்போதும் தனக்கு முன் வல்லின மெய் வந்தாலோ மட்டும் தான் tha, ka, pa, cha ஒலிப்பு வரும். பிற இடங்களில் dha, ga, ba, sa ஒலிப்பு வரும். அந்த வகையில் சொல்லின் முதலில் சகரம் வந்து சின்ன என்று எழுதும் போது chinna என்றே ஒலிக்க வேண்டும். chi என்ற ஒலியைச் சுட்ட மெனக்கெட்டு இன்னொரு ச் போட்டு எழுத வேண்டாம். தவிர, தமிழில் சொல்லின் முதலில் மெய்யெழுத்து வராது என்பது இன்னொரு எளிய விதி. இதையாவது நினைவில் கொள்ளலாம். இன்றும் தஞ்சைப் பகுதிக் காரர்கள் அழுத்தம் திருத்தமாகச் சகரத்தை ஒலிப்பைத் காணலாம். sevvaaykkizamai என்று சொல்ல மாட்டார்கள். chevvaaykkizamai என்றே சொல்வார்கள். BBC தமிழோசையில் cheythikaL என்றே சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் குறித்த தெளிவான விளக்கத்தை பேராசிரியர் செல்வா அளித்திருக்கிறார்.

செல்வாவின் வரிகளில்:

தமிழின் ஒலிப்பு முறை மிகவும் சீரானது. தமிழ் ஒலிப்பாங்குடைய மொழி (ஒலிப்பு முறை ஒழுக்கம் நிறைந்த மொழி phonetic language). வல்லின ஒலிப்புகளை மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளனர் (2000 ஆண்டுகளுக்கும் முன்னால்!). தாழ் என்பதில் வரும் தகரத்தைப் போலவே தாவணி என்பதையும் thaavaNi என்றுதான் ஒலிக்க வேண்டும். காலப்போக்கில் ஒரே ஒரு வல்லினம் மட்டும் இம்முறையில் இருந்து திரிந்து உள்ளது. அதுதான் சகரம். முதல் எழுத்தாக வரும் எல்லா இடங்களிலும், சகரம் ch என்றுதான் ஒலிக்க வேண்டும். செல்வம், செல்வன், செல்வா, சட்டி, சொல், செப்பு என்று எல்லா இடங்களிலும் chelvam, chelvan, chelvaa… என்றுதான் ஒலிக்க வேண்டும். ஆனால் இவற்றுள் சில காற்றொலி கலந்து Selvam, Selvan, Selvaa என்று ஒலிக்கின்றனர். இது திரிபு.

எச் செல்வம், அச் செல்வம், அச் சொல், அழகுச் செல்வன், புதுச் சட்டி என்று கூறும் பொழுது சரியான இயல்பான வல்லின முதல் சகரம் (chagaram) வருவதைப் பார்க்கலாம். எனவே இது ஒரு திரிபு (இது இன்னும் சிலர் ஷொன்னான் என்று இன்னும் திரிக்கின்றார்கள்). இப்படி முதல் வல்லின சகரம் திரிவது மட்டும் அல்லாமல், மிகப் பழங்காலத்தேயே பசி, கசி, முதலான சொற்களில் மெல்லின மெய்யெழுத்து (ஞ் ) முன்னே வராத இடங்களில் சகரம் காற்றொலி கலந்த சகரம் வருவது விதிவிலக்காக இருந்திருக்க வேண்டும். அல்லது மிகப்பழங்காலத்திலேயே திரிந்திருக்க வேண்டும்.

பஞ்சு, கெஞ்சு, குஞ்சு முதலான சொற்களில் வரும் “சு” ஜு என்று ஒலிப்பது முறையானது, அதே போல் பசி, கசி என்பது, விதிப்படி பஜி , கஜி என்றுதான் இருத்தல் வேண்டும். ஆனால் மெல்லின மெய் இல்லாது இடையே வரும் சகரம் காற்றொலியாய் இருப்பது விதிவிலக்காக உள்ளது. குழந்தைகள் பசிக்கும் பொழுது “அம்மா ரொம்ப பஜிக்குது” என்று கூறுவது தொல் இயல்பாய் இருக்கலாம். கஞ்சியை காஜி என்று கூறுவது இவ்வகையாய் இருக்கலாம். எப்படியாயினும், (மெல்லின ஒற்று (ஞ்) இல்லாமல்) இடையே வரும் சகரம் மட்டுமே விதி விலக்கு. இதுவும் இன்று ஒரே சீராக ஒரு புது விதிப்படி வருவதே. முதலொலி சகரம் காற்றொலியுடன் கூறுவது திரிபு அது விதியில் அடங்காதது (தமிழின் ஒலிப்புச் சீர்மையைக் குலைப்பது).

தொடர்புடைய இடுகைகள்:

* சகரத்தை மீட்போம் – அரவிந்தன்

* எழுதிய படி உச்சரிப்பது எப்படி? – தமிழ் விக்சனரி குழும உரையாடல்.

* ஆய்த எழுத்தைக் கொல்லலாமா? – தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவில் உரையாடல்

உனக்கு English தெரியாதா?

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள முடி திருத்தகம் ஒன்றில் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒருவர் வேலை இழந்த கதையை இராம. கி எழுதி இருந்தார். “இது ஏதோ ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த கதை தானே, இது குறித்து கவலைப்படுவது மிகைப்பட்ட உணர்ச்சியாக இருக்கிறதே” என்று காசி கூறி இருந்தார். ஆனால், வளர்ந்தும் விரிந்தும் வரும் இந்தியப் பெருநகரங்களில் இந்தப் போக்கு தொடர்வது கவலைக்குரியது.

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகள், குறுகிய காலம் உள்ளூரில் வசிப்பவர்களின் வசதிக்காகவே பயன்படுகிறது.

வெளியாட்களை உள்ளூர் மொழி கற்க விடாமல் செய்வதில் உள்ளூர்க்காரர்களுக்கும் பங்குண்டு. இடாய்ட்சுலாந்தில் எட்டு மாதங்கள் வசித்த போது, கல்லூரிக்கு வெளியே இடாயிட்ச் மொழி தெரியாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற காரணத்தால் இரவும் பகலும் இடாயிட்சு அகரமுதலியோடு சுற்றித் திரிந்தது நினைவு வருகிறது.

நெதர்லாந்துக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நெதர்லாந்து மொழி கற்றுக் கொள்ளத் தூண்டுதல் இல்லை. நெதர்லாந்து மக்களுக்கு ஆங்கிலம் நன்கு தெரிவதாலும் உதவும் மனப்பான்மை இருப்பதாலும் ஆங்கிலத்திலேயே நம்முடன் பேசுகிறார்கள். அரை குறையாக நாம் நெதர்லாந்து மொழி பேசிக் கொலை செய்தாலும் அதைக் காணச் சகிக்காமல் ஆங்கிலத்துக்குத் தாவி விடுகிறார்கள். இதனால் நெதர்லாந்துக்கு வரும் பல வெளிநாட்டவர்கள் நெதர்லாந்து மொழியில் தேர்ச்சியும் பயிற்சியும் இன்றி இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டின் பொருளாதாரமே நெதர்லாந்து மொழியால் இயங்குவதால் ஆங்கிலம் அம்மொழியை அழிக்கும் நிலைக்குச் செல்லவில்லை.

தமிழ்நாட்டில் அண்டை, அயல் மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று நமக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்திலாவது பேசுகிறோமே ஒழிய அவர்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான போதுமான தூண்டுதலைத் தருவதில்லை. அவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் எழுத, பேச, அறிவிக்கப் போய் எங்கும் ஆங்கிலமாகி, இறுதியில் “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று நம்மையே திரும்பக் கேட்கும் நிலை.

Sirக்குத் தமிழ் தெரியாதாம்ப்பா” என்ற கனிவான குரல்; “என் பொண்ணுக்கு Tamil எல்லாம் வராது” என்ற அலட்சியமும் பெருமிதமும் கலந்த குரல்; “உனக்கு English தெரியாதா” என்ற ஏளனமான குரல்… மாற்றி மாற்றி தமிழ்நாட்டில் எங்காவது கேட்டுக் கொண்டே இருக்கிறது.

English தெரியாதவன் மரியாதை இழந்து தமிழ்நாட்டிலேயே அவன், இவன், உன் என்றாகிப் போனது எப்போது? இந்த நிலையை எப்படி மாற்றுவது? என்று இந்த நிலை மாறும் ??