இணையத் தமிழ் உள்ளடக்க உருவாக்கம் – தமிழ்நாடு அரசு கவனிக்குமா?

என்றாவது, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்புடைய தமிழக அரசு அமைச்சர் / அதிகாரி கண்ணில் படலாம் என்ற பேராசையில், தமிழக அரசுக்கு சில வேண்டுகோள்கள்.

* தமிழ்நாடு அரசு இணையத்தளத்தின் அனைத்துத் தகவல்களையும் முழுக்கத் தமிழில் தாருங்கள். TSCII வடிவில் இருந்தாலும், கூடவே ஒருங்குறித் தமிழிலும் ஒரு பதிப்பு தாருங்கள். இதன் மூலம் தமிழக அரசுத் தகவல்களை கூகுள் போன்ற தேடுபொறிகளின் மூலம் தேட இயலும்.

* தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி பாட நூல்கள் அனைத்தையும் ஒருங்குறி உரையாகவும், Pdf கோப்புகளாகவும் தாருங்கள். ஆங்கில வழியத்தில் படித்தவர்கள், தமிழ் வழியத்தில் படித்திருந்தாலும் அத்தகவல்கள்-தமிழ்க்கலைச்சொற்கள் மறந்தவர்கள், இலங்கை-சிங்கப்பூர்-மலேசியா வாழ் தமிழர்கள் ஆகியோருக்கு உதவும். இந்நாடுகளின் கலைச்சொல்லாக்கத்திலும் தமிழ்நாட்டுடன் இசைவு இருக்கும். தமிழ்நாட்டுப் பாட நூல்கள் நாட்டுடைமை என்பதால் இவற்றைப் பொதுக் களத்தில் எவருக்கும் பயன்படுவது போல் வைக்க வேண்டும்.

செய்தி: தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடப் பாடநூல்கள் இப்போது இணையத்தில் pdf வடிவில் கிடைக்கின்றன !

* நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்துத் தமிழ் நூல்களையும் ஒருங்குறி உரையாகவும், Pdf கோப்புகளாகவும் தாருங்கள். உலகம் முழுக்க எண்ணற்ற ஆர்வலர்கள் மதுரைத் திட்டம் போன்றவை மூலம் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு இந்நூல்களை மென்னூலாக்கி வருகிறார்கள். இது தேவையற்ற காலம் மற்றும் உழைப்பு விரயமாகும்.

* தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளத்துக்கும் ஒருங்குறித் தமிழ்ப் பதிப்பு தாருங்கள். அத்தளத்தில் உள்ள தேவையற்ற பயனர் எளிமையைக் குலைக்கும் கூறுகளை நீக்கி, எளிமையான உரை வடிவத் தளமாகத் தாருங்கள்.

* தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்கள் அனைத்திலும் தமிழ்ப் பதிப்பு கொண்டு வரப் பணியுங்கள்.

* கடந்த இரண்டு ஆண்டாகத் தமிழ் இணைய மாநாடு நடைபெறவில்லை. அதனை மீளத் தொடங்குங்கள்.

* தமிழ்நாட்டுத் தமிழ்ப் பாடம், கணினி அறிவியல் பாடங்கள் ஆகியவற்றில் கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்துப் பாடங்களைச் சேருங்கள். பள்ளிகளுக்கு வாங்கும் கணினிகளில் தமிழ்99 தமிழ் விசைப்பலகை அச்சிப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு கணினியை அறிமுகப்படுத்தும்போதே தமிழ்த் தட்டச்சையும் சேர்த்து அறிமுகப்படுத்துங்கள். தமிழ் லினக்ஸ், தமிழ் Firefox, தமிழ் Open Office என்று திறமூலத் தமிழ் மென்பொருள்களை ஊக்குவியுங்கள். இதனால் அரசுக்குச் செலவும் மிச்சம். குழந்தைகளும் ஆங்கிலம் மீதான மருட்சி இல்லாமல் எளிதில் கணினியைக் கையாளத் தொடங்குவார்கள்.

* தமிழ்நாட்டில் புதிதாகப் படித்து வெளிவரும் தமிழாசிரியர்களின் தரம் மெச்சிக் கொள்ளும் மாதிரி இல்லை. மிகச் சிறந்த மாணவர்களை தமிழ்ப் படிப்புக்கு ஈர்க்க கல்லூரியில் தமிழ்ப்பட்டப்படிப்பு முழுக்க இலவசமாகவும் (விடுதிச் செலவு உட்பட) அதில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்குங்கள். இதனால், தமிழ்ப் படிப்புக்குப் போட்டி ஏற்பட்டுச் சிறந்த மாணவர்கள் அப்படிப்பை நாடுவார்கள்.