கீழே இருக்கிறது தான் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு. படத்தை பெரிய அளவில் பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்.
அம்மான்னு அடிக்க அ ம ம ஆ – னு வரிசையா இடைவெளி இல்லாம அழுத்தணும். சில எடுத்துக்காட்டுக்கள்:
அப்பா – அ ப ப ஆ
தம்பி – த ம ப இ
உனக்கு – உ ன க க உ
கட்டம் – க ட ட ம f
கோடு – க ஓ ட உ
தங்கம் – த ங க ம f
தத்தம் – த அ த த ம f
மேலே உள்ளத இரண்டு மணி நேரம் பயிற்சி செஞ்சாலே எந்த எழுத்து எங்க இருக்குன்னு மனசில பதிஞ்சிடும். பழகிட்டா, ஆங்கிலத்த விட வேகமா எழுத முடியும்.
தயவு செஞ்சு அம்மா என்று எழுத ammaa என்ற மாதிரி உள்ள தமிழ்த் தட்டச்சுக் கருவிகளைப் பயன்படுத்தாதீங்க. துவக்கத்துல, தமிழ் எழுதிப் பார்க்க அது உதவும். ஆனா, வேகமா, சோர்வு இல்லாம எழுத மேல் உள்ள தமிழ்99 முறை தான் உதவும். இது பலரும் பரிந்துரைக்கும் உண்மை.
லினக்சில் எப்படி தமிழ் எழுதறதுன்னு தெரியனும்னா கேளுங்க. தனியா விளக்குறேன். NHM Writer நிறுவ admin access கணினியில் இல்லாதவர்கள், firefoxல் தமிழ் விசை நீட்சியை சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.
மேலே இருப்பது தான் அந்த விசைப்பலகை !
இதில் என்ன சிறப்பா?
1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு. இது தான் முதன்மையான பயன். அடுத்து வரும் சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கெட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் தேவையைக் குறைக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.
சொல்
romanised
தமிழ்99
keystrokes saved
தொழிலாளி
thozilaa+SHIFT+li
த ஒ ழ இ ல ஆ ள இ
3
வெற்றி
ve+SHIFT+r+SHIFT+ri
வ எ ற ற இ
2
கணையாழி
ka+SHIFT+naiyaazi
க ண ஐ ய ஆ ழ இ
4
தந்தம்
thantham
த ந த ம f
3
உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உள்ளிடுவதென்று விசைப்பலகையைப் பார்த்தாலே புரியும். இனி, பிற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் ஒரு சுருக்கமான வழிகாட்டி.
எழுத்து
விசை வரிசை
த்
த f
த
த
தா
த ஆ
தி
த இ
தீ
த ஈ
து
த உ
தூ
த ஊ
தெ
த எ
தே
த ஏ
தை
த ஐ
தொ
த ஒ
தோ
த ஓ
தௌ
த ஔ
2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு,
சொல்
விசைகள்
புள்ளி
பு ள ள இ
கன்று
க ன ற உ
தங்கம்
த ங க ம f
தந்தம்
த ந த ம f
வெற்றி
வ எ ற ற இ
3. பழகுவது எளிது. எழுத்துக்கள் இருக்கிற இடங்களை நினைவில் கொள்வதும் எளிது. உயிரெழுத்துக்கள் ஒரு பக்கமாகவும் அகர உயிரெழுத்துக்கள் இன்னொரு பக்கமாகவும் ஒழுங்காக ஒரு வரிசையில் அமைந்துள்ளன. அகர உயிர்மெய்யெழுத்துக்கள் அமைப்பிலும் நெருக்கமான எழுத்துக்கள் அருகருகே இருக்குமாறு ஒரு ஒழுங்கு இருக்கிறது. அடிக்கடி அடுத்து வரும் எழுத்துக்கள் அருகருகே உள்ளன.
எடுத்துக்காட்டுக்கு,
ந – த; ங – க; ண – ட; ன – ற; ஞ – ச
ஆகிய எழுத்துக்கள் அருகருகில் இருக்கும்.
4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிந்து கொள்கிறோமோ அந்த வகையில தான் இது செயற்படும் விதமும் அமைந்திருக்கிறது. அதாவது, உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் என்பது தான் இவ்விசைப்பலகையின் அடிப்படை.
5. மிக வேகமாக தட்டச்சு செய்யலாம். விரல்களை அயர வைக்காது. கடந்த ஒரு ஆண்டாகத் தான் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துகிறேன். ஆனால், ஏழு ஆண்டுகள் பழக்கமான ஆங்கிலத்தை விட வேகமாக தட்டச்சு செய்ய முடிகிறது. பழகிய பிறகு விசைப்பலகைய பார்க்காமயே தட்டச்சு செய்ய எளிது. ஆங்கில விசைப்பலகைக்கு கூட எனக்கு இன்னும் இந்த நம்பிக்கை வரவில்லை. தட்டச்சுப் பயிற்சி நிலலயத்துக்கு செல்லாமல் நீங்களே இதைக் கற்றுக் கொள்வது எளிது.
6. இது பல தமிழறிஞர்கள் ஒன்று கூடி கலந்து பேசி உருவாக்கி, சோதித்துப் பார்த்து தமிழக அரசால் கணித்தமிழுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விசைப்பலகை. பிற விசைப்பலகைகள் எல்லாம் இந்த மாதிரி இல்லாமல் தனி முயற்சியில் உருவானவை. எனவே அதில் உள்ள நுட்பத் திறமும் குறைவாக இருக்கலாம்.
7. 247 தமிழ் எழுத்துக்களை 31 விசைகளில் அடக்குகிறது இந்த விசைப்பலகை வடிவமைப்பு. இதன் எளிமை பிற மொழி விசைப்பலகைகளில் காணக்கிடைக்காதது. இதன் வடிவமைப்பே புத்திசாலித்தனமானது. நாம் உள்ளிடாமலயே மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப செயல்பட்டு நம் வேலையைக் குறைக்கிறது. இது தொடர்பாக உள்ள 12 புத்திசாலித்தனமான விதிகளைப் பாருங்கள். இதைப் பழகப் பழகத் தான் தமிழ் எவ்வளவு கட்டமைப்பும் ஒழுங்கும் உடைய எளிமையான மொழி என்று வியக்க வேண்டி இருக்கிறது.
8. அனைத்தையும் விட முக்கியமான விசயம், இதைப் பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. romanised / அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை மட்டும் பயன்படுத்த வேண்டாம். முதலில் கொஞ்ச நாள் தமிங்கிலத்தில் எழுதிப் பழகி விட்டு அப்பாவுக்கு காகிதத்தில் கடிதம் எழுதும்போது என்னை அறியாமல் appa eppadi irukkeenga? ungkaL katitham kaNdeen என்று எழுதும் அளவுக்கு உள்மனதில் இந்த எழுத்து முறை பதிந்து விடுகிறது. தமிங்கில குறுஞ்செய்தி அனுப்புவதாலும் இதே பாதிப்பு வருகிறது. அடுத்த தலைமுறை, தமிழுக்கான சொற்களை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக உள்வாங்கிக் கொண்டால் அதை விட அவமானம் உண்டோ? அதனால் இன்றே தமிங்கில தட்டச்சை விடவும். இதனை ஒப்பிட பிற தட்டச்சு முறைகளான பாமினி, typewriting layout எவ்வளவோ பரவாயில்லை. அவற்றைப் பழகியவர்களுக்கு அதை விட்டு தமிழ்99க்கு வர கடினமாக இருக்கும். ஆனால், தமிங்கிலக்காரர்கள் இலகுவாக மாறிக் கொள்ளலாம். தமிங்கிலத் தட்டச்சை விட்டொழிப்பதற்கான இன்னும் வலுவான காரணங்களை அறிய ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும் என்ற கட்டுரையைப் பாருங்கள்.
கணினியில் தமிழ்த் தட்டச்சுக்கு அறிமுகமாகும்போது ஏறக்குறைய எல்லாரும் தமிங்கிலப் பலகை மூலம் தான் அறிமுகமாகிறோம். ஆனால், விரைவில் அடுத்த கட்டமாக தமிழ்99 கற்றுக் கொள்வது நலம். சொந்தக் கணினி வைத்திருப்பவர்கள் தமிழ்99க்கான எ-கலப்பை அல்லது NHM writer பயன்படுத்தலாம். பயர்பாக்சு உலாவி பயன்படுத்துபவர்கள் வைத்திருப்பவர்கள் எ-கலப்பைக்கு ஒத்த தமிழ் விசைநீட்சியைப் பயன்படுத்தலாம்.
ஒருமுறை தமிழ்99 பயன்படுத்திப் பழகிவிட்டால் பிறகு கனவிலும் பிற முறைகளில் தட்டச்ச மனம் வராது.
இறுதியாக, மேல்விவரங்களுக்கு:
1999ஆம் ஆண்டு நடந்த தமிழ் இணைய மாநாட்டின் பகுதியாக அமரர் நா. கோவிந்தசாமி அவர்களின் முன்முயற்சியில் இவ்விசைப்பலகை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மேலும் அறிய, பிற வலைப்பதிவர்கள் தமிழ்99 விசைப்பலகை அருமை பெருமைகள் பற்றி கூறுவதை படிக்க பின் வரும் தளங்களை பாருங்கள்: