தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்

ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் அறிய, உருவாக்க ஒரு கலைச்சொல்லாக்கக் குழுமம் உருவாக்கி இருக்கிறோம்.

குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary

இக்குழுமத்தின் நோக்கம்: ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, தேவைப்பட்டால் மேம்படுத்துவது,  புதிய கலைச்சொற்களை உருவாக்குவது. 

இக்குழுமம் கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்குத் துணையாகவும் இயங்குகிறது.  இக்குழுமத்தில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரியில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வர ஏதுவாகிறது.

இந்தக் குழுமம் மூலம் சொற்களை ஆக்குபவர்கள் – சொற்களைப் பயன்படுத்துபவர்கள் – சொற்களைத் தேடுபவர்களை ஒரே புள்ளியில் இணைத்து, உலகம் முழுமைக்குமான ஒரு தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமமாக வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.

விக்சனரி (பன்மொழி – தமிழ் இணைய அகரமுதலி)

கட்டற்ற பன்மொழி – தமிழ் – பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக 2004 முதல் தமிழ் விக்சனரி தளம் செயல்படுகிறது. டிசம்பர் 2008 நிலவரப்படி ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான சொற்களுக்கு பொருள் சேர்த்துள்ளோம்.

ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், பலுக்கல் ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன.

நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே தேடலாம். எடுத்துக்காட்டாக, mosquito ஆங்கிலம் என்று தேடினால் கூகுளில் முதல் பக்கத்திலேயே விக்சனரிக்கான தொடுப்பு இருக்கும்.  தேடிய சொல் கிடைக்காவிட்டால், அதைச் சேர்க்குமாறு தளத்தில் தெரிவிக்கலாம்.  

ஏற்கனவே உள்ள பக்கங்களில் திருத்தங்கள் செய்யலாம். புதிதாக சொற்களைச் சேர்க்கலாம். ஒரு சொல்லின் பொருள் குறித்த ஐயம், ஆலோசனை இருந்தால் கலந்துரையாடலாம். பல பங்களிப்பாளர்களும் தொடர்ந்து தளத்தைக் கவனித்து வருவதால் பிழையான பங்களிப்புகள் உடனடியாக சரி செய்யப்படுவது உறுதி. எவரும் அவர் விரும்பிய வண்ணம் கட்டுப்பாடின்றி பங்களித்துப் பயன்படுத்துவதே விக்சனரியின் சிறப்பு. 

சொற்களுக்கான பொருளை நல்ல தமிழில் விளக்குவதால், தமிழில் கலந்துள்ள பிற மொழிச்சொற்களை இனங்காணலாம். கலைச்சொல்லாக்க முயற்சிகளுக்கான களமாகவும் விக்சனரி திகழும். தற்பொழுது ஆங்கிலம் – தமிழ் அகரமுதலியையே கவனிக்கிறோம் என்றாலும், பங்களிப்பாளர் திறன், அறிவைப் பொருத்து தமிழ் உள்ளிட்ட எம்மொழிச் சொல்லுக்கும் தமிழில் பொருள் தரலாம்.

தமிழ் விக்சனரி

இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் தளத்தின் ஒரத்தில் இட்டு, விக்சனரி பற்றி விளம்ப வேண்டுகிறேன்.