கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி

பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.

தமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன்.

கூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்துகளில் எழுதிக் காட்டும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் கருவியின் திறன், சந்தையில் ஏற்கனவே உள்ள துவணி, MILE கருவிகளை ஒத்துள்ளது. தமிழ்ச் சொல் உச்சரிப்பு குறித்து கூகுள் தனியே ஏதேனும் ஆய்வு செய்துள்ளதா என்று அறிய வேண்டும்.

மிகச் சிறிய, நாம் நன்கு அறிந்த சில சொற்றொடர்களை நிறைவாகவே மொழிபெயர்க்கிறது. பெரிய பக்கங்களை அளிக்கும் போது அதன் திறன் மிகக் குறைவாக உள்ளதுடன், கிடைக்கும் தாறுமாறான மொழிபெயர்ப்பில் இருந்து நாமே தப்பும் தவறுமாக ஊகிக்க வேண்டியதாகவே உள்ளது. இது ஒரு alpha நிலை சோதனைக் கருவி என்பதால் இதற்கு மேல் எதிர்ப்பார்ப்பதும் திறனாய்வதும் பொருத்தமாக இருக்காது. இந்திய சந்தைத் தேவைகளுக்கான ஆய்வில் கூகுள் அவ்வளவாக பணம் செலவிடுவதாகத் தெரியாததால், அடுத்த நிலையான beta கருவி எப்போது வரும், இதன் தரம் மேம்படுமா என்று சொல்வதற்கு இல்லை.

எனினும், இந்தக் கருவியின் உருவாக்கத்துக்குப் பின்னணியில் இருந்த வழிமுறைகள் சர்ச்சைக்குரியவை.

இக்கருவியை உருவாக்க கூகுள் பின்பற்றிய ஆய்வு வழிமுறை statistical machine translation approach எனப்படும். அதாவது, ஒரே உரை இரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், அது போல் இலட்சக்கணக்கான ஆவணங்களைப் படித்துப் பார்த்து, இரண்டு மொழிகளிலும் உள்ள ஈடான சொற்களைப் புரிந்து கொள்கிறது.

Fried rice, Vegetable rice, Egg rice

என்பது தமிழில்

வறுத்து சோறு, காய்கறிச் சோறு, முட்டைச் சோறு

என்று இருக்குமானால், rice = சோறு என்று குத்துமதிப்பாகப் புரிந்து கொள்ளும். இதற்கு, கணினிக்கு தமிழோ ஆங்கிலமோ தெரியவேண்டாம். ஆனால், தனித்தனிச் சொற்களைப் புரிந்து கொண்ட பிறகு, சரியான சொற்றொடர் அமைப்பை உருவாக்க அந்தந்த மொழிகளில் இலக்கண அமைப்புகளைப் புரிந்து கொள்ளவும், அதனைக் கணினிக்குப் புரிய வைப்பதற்கான கட்டளைத் தொடர்களை எழுதவும் குறிப்பிட்ட மொழி அறிவு தேவைப்படும்.

தமிழில் இவ்வாறான இரு மொழி ஆவணங்கள் பெருமளவில் கிடைக்காததால், கூகுளே இத்தகையை ஆவணங்களை உருவாக்க முனைந்தது. இதனை முன்னிட்டு, சில தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களைப் பணியில் அமர்த்தி ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தமிழ் விக்கிப்பீடியாவில் இடச் செய்தது. இதே போன்று இந்தி, தெலுங்கு, வங்காளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் செய்தது.

முதல் சில நூறு கட்டுரைகள் இவ்வாறு இடப்படும் வரை கூகுள் தான் இந்தப் பணியைச் செய்கிறது என்று புரியாமல் இருந்தது. பிறகு, தமிழ் விக்கிப்பீடியரான சுந்தர், எதேச்சையாக இப்பணியில் ஈடுபட்டுள்ள கூகுள்காரர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்ந பிறகே இது கூகுளின் பணி என்று தெரியவந்தது.

கூகுள் இவ்வாறு இட்ட கட்டுரைகள் நீளமாக, முழுமையாக இருந்தாலும் பல சிக்கல்கள் இருந்தன. இவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் தர எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யவில்லை. எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, சொற்றொடர் அமைப்புப் பிழை, தகவல் பிழை மலிந்து இருந்தன. கூகுள் கருவியை உருவாக்குவதற்கான தேவையை முன்னிட்டு மொழிபெயர்ப்புகள் ஏனோ தானோவென்று அமைந்திருந்தனவே தவிர, ஒருவர் அக்கட்டுரையைப் படித்துப் பயன் பெறுவாரா என்ற நோக்கில் அமையவில்லை.

எனினும், கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்று சரியான முறையில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதற்கான பெரிய அளவிலான சாத்தியத்தை முன்னிட்டு, தமிழ் விக்கிப்பீடியா தானாக முன்வந்து கூகுளுடன் சேர்ந்து இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியை ஏற்றுக் கொண்டது. இந்த ஒருங்கிணைப்பின் படிப்பினைகளைப் பொருத்து திட்டத்தைப் பல்வேறு இந்திய மொழிகளிலும் திற்னபடச் செய்யலாம் என்று நினைத்தோம்.

எனினும் கூகுள், மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் இரண்டுமே ஓரளவுக்கு மேல் தத்தம் நலனையே முன்னிறுத்தினவே ஒழிய, தமிழ் விக்கிப்பீடியாவின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு கால ஒருங்கிணைப்பு, 20க்கும் மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்களின் நூற்றுக்கணக்கான மணி நேரங்கள் செலவழிப்பு, பயிற்சிகள், நேரடிச் சந்திப்புகளுக்குப் பிறகு, சொல்லாமல் கொள்ளாமல் இத்திட்டத்தில் இருந்து கூகுள் விலகிக் கொண்டது. இத்திட்டத்தின் மூலம் 1,000+ கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றப்பட்டன. அவற்றின் தரம் நிறைவு அளிக்காததால், அதற்கு மேல் ஒரேயடியாக கட்டுரைகளை ஏற்ற மறுத்து, பல தரக்கட்டுப்பாடுகளை உருவாக்கியதால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்பட்ட சேதம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இப்போதும், அவர்கள் விட்டுச்சென்ற கட்டுரைகளைச் சீர் செய்ய பல ஆயிரம் மணி நேரம் செலவு ஆகும். கூகுளின் போக்கு பிடிக்காமல், வங்காள விக்கிப்பீடியர்கள் தொடக்கத்திலேயே கூகுள் திட்டத்தைத் தடை செய்தார்கள். தமிழ் தவிர பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் இத்திட்டத்தை பெரிய அளவில் சீர்படுத்தவில்லை என்பதால், இவ்விக்கிப்பீடியாக்களின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா என்றால் என்ன, அதன் சமூகத்தின் தன்மை என்ன, கொள்கை – செயல்பாடுகள் என்ன என்று ஏதும் புரிந்து கொள்ளாமல், கூகுள் சகட்டு மேனிக்குக் கட்டுரைகளை உருவாக்கியது தவறு. கூகுள் ஒரு தேடு பொறி என்பதால் அது தானே இணையத்தில் உருவாக்கும் உள்ளடக்கங்கள் தேடல் முடிவுகளில் வந்தால் அதன் முதன்மை நோக்கத்தோடு முரணாகும். இந்தக் காரணத்தாலேயே கூகுளின் இந்ந விக்கிப்பீடியா பணி பெரிதாக அறிவிக்கப்படவில்லை. தவிர, இந்திய மொழிகளை இணையத்தில் வளர்ப்பதற்கான முயற்சி போல் போலித்தனமாகச் செயல்பட்டார்களே ஒழிய, ஒரு போதும் இது தங்கள் கருவியை மேம்படுத்துவதற்கான ஆய்வு முயற்சி என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. இத்திட்டத்தின் போது கூகுளின் இணைந்து செயல்பட்டு நேரடியாக அவர்களின் பண்பை அறிந்ததன் மூலம், அந்நிறுவனத்தில் மேல் வைத்திருந்த மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்பதே உண்மை.

காண்க: சென்ற ஆண்டு விக்கிமேனியாவில், இத்திட்டத்தின் நிறை குறைகள் பற்றி நான் அளித்த கட்டுரை.

நவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு

கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது.

குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார்.

உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. செ. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள் வருகிறார்கள். மாணவர்கள் என்னென்ன தமிழ்க் கணிமைத் திட்டங்களில் ஈடுபடலாம், அவற்றுக்கு யார் உதவியைப் பெறலாம் என்பது குறித்து கலந்துரையாடுவது கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

அனைத்து விக்கிப்பீடியா, வலைப்பதிவு, தமிழ்க் கணிமை ஆர்வலர்களையும் இந்த ஒன்று கூடலுக்கு வரவேற்கிறோம். நன்றி.

இடம்: குமரகுரு பொறியியல் கல்லூரி, கோவை.

D-தொகுதி கருத்தரங்க அறை (முதல் தளம். உணவகத்துக்கு எதிர்ப்புறம்.)

நேரம்: நவம்பர் 7, 2009 சனிக்கிழமை. பகல் 2.00 முதல் 4.00 மணி வரை.

வழி: சரவணம்பட்டி, அன்னூர் செல்லும் பேருந்துகள். பேருந்து எண் 45. பேருந்து நிறுத்தத்தில் இருந்து தானி மூலம் கல்லூரிக்கு வர 30 ரூபாய்.

உதவிக்கு: 99444 36360

தமிழ்க் கணிமை

கணினியில் நம் மொழியில் எழுதவும் படிக்கவும் இயல்வது ஒரு அடிப்படை விசயமல்லவா? இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே? இதுவா தமிழ்க்கணிமை என்று சாருவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், இது விசயத்தில் அவரது பார்வையும் சொற்களும் நம்பிக்கை அளித்தன. அப்படி என்ன சொன்னார்?

செகத் இந்திய மொழி – தமிழ் எழுத்துபெயர்ப்புக் கருவி உருவாக்கிய போது, அதைப் பற்றி Icarus பிரகாசு அறிமுகப்படுத்தி வைக்கையில், “இந்த rangeல் போனால் தமிழ்க் கணிமை சீக்கிரம் வயசுக்கு வந்திடாது?” என்றிருந்தார்.

வயசுக்கு வருவது இருக்கட்டும். இன்னும் தமிழ்க் கணிமை தவழவே தொடங்கவில்லை என்று நொந்து போய் தமிழ்க் கணிமையின் தேவைகள் குறித்து எனக்குத் தெரிந்த அளவில் எழுதி இருந்தேன். கணினியில் நம் மொழியில் எழுதவும் படிக்கவும் இயல்வது ஒரு அடிப்படை விசயமல்லவா? இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே? இதுவா தமிழ்க்கணிமை என்று சாருவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், இது விசயத்தில் அவரது பார்வையும் சொற்களும் நம்பிக்கை அளித்தன. அப்படி என்ன சொன்னார்?

தமிழில் எழுத இயல்வதும் படிக்க இயல்வதும் அடிப்படையான சாதாரண விசயமாக இருக்கலாம். இப்படி வலையில் தமிழில் எழுதுபவர்கள் பலரும் தங்கள் சொந்தக் கதைகளையே கூட எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால், இவை யாவும் தமிழ் மொழி குறித்த கணித்தல் ஆய்வுகளைச் செய்ய நமக்குப் பெருமளவிலான பல்வேறு வகையில் பரந்து அமைந்த தரவுகளைத் தருகின்றன. எந்த ஒரு ஆய்வைச் செய்யவும் முறைமையை உறுதிப்படுத்தவும் சோதனைத் தரவுகள் தேவை தானே?

எடுத்துக்காட்டுக்கு, ஒரு தமிழ் உரை பேசி செய்கிறோம் என்றால் வலையில் காணக்கிடைக்கும் தமிழ் உரைகளில் எழுந்தமானமாக சிலவற்றைத் தெரிவு செய்து நம் உரை பேசி எந்த அளவு திறமாகச் செயல்படுகிறது என்று சோதித்துத் திருத்தலாம். பேச்சை உரையாக மாற்றும் செயலி செய்தால், வலையில் கிடைக்கும் பல்வேறு ஒலிப்பதிவுகளை அதற்குப் பயன்படுத்திப் பார்க்கலாம். இலங்கை, இந்திய, மலேசியத் தமிழ் வேறுபாடுகளை ஆயலாம். தமிழின் நுணுக்கங்களைப் புரிந்து செயல்படும் ஒரு திறமான தேடு பொறி உருவாக்கலாம். எதுவுமே இல்லாவிட்டாலும், இணையத்தில் பதியப்படும் தமிழ்ச் சொற்களைக் கொண்டு இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் எவ்வாறு வளர்ந்து / மாறி வருகிறது, என்னென்ன வேற்று மொழிச் சொற்கள் புழங்குகின்றன, எந்தளவு புழங்குகின்றன என்று ஆராயலாம். தமிழில் எது குறித்த கருத்துக்கள் அதிகம் பதியப்படுகின்றன என்று பார்க்கலாம். தரவுகள் இருந்தால் அவற்றுடன் விளையாடிப் பார்த்து எண்ணில் அடங்கா ஆய்வுகள் செய்வது சாத்தியமே.

இது வரை தன்னார்வல உழைப்பின் மூலமே கணினியில் தமிழை வளர்த்து இருந்தாலும், பல முனைவர்கள் பல ஆண்டு ஆய்வுகள் மூலமே அடைய இயலும் இலக்குகளை தன்னார்வல ஓய்வு நேர உழைப்பில் மட்டும் ஒருங்கிணைத்துச் செய்வது தமிழ்க்கணிமையின் முன்னகர்வுகளைத் தாமதப்படுத்தும். தமிழ்க்கணிமை போன்ற அறிவியல் துறைகளை பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் முன்னெடுப்பதே தொலைநோக்கில் திறம் மிக்க அணுகுமுறையாக இருக்கும்.

சரி. அரசு, பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் விழித்துக் கொள்ளும் வரை, தமிழ்க் கணிமை / கணினியில் தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

கட்டற்றை தமிழ்க் கணிமை போன்ற தன்னார்வல மன்றங்களில் சேருங்கள். கணினியில் தமிழ் பயன்பாட்டில் உங்களுக்கு உள்ள தேவைகள், இடையூறுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அங்கு செய்யப்படும் சோதனை முயற்சிகளில் கலந்து கொண்டு வழுக்களைக் கண்டறிய உதவுங்கள். ஓய்வு நேரத்தில் அங்கு தன்னார்வல உழைப்பை ஈனும் நுட்பியலாளார்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துங்கள். இதில் எதையுமே செய்ய இயலாவிட்டாலும் இக்குழுக்களில் வரும் தமிழ் மடல்களைக் கண்டு வந்தாலே புதிதாய்ப் பல தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்ளலாம் 🙂 அச்சொற்களை உங்கள் வலைப்பதிவுகள், இணையத்தளங்கள், மின்மடல்களில் பயன்படுத்துங்கள்.

– நீங்கள் அறிந்தவர்களுக்கு ஒரு முறையாவது தமிழில் மின்மடல் அனுப்புங்கள். அவர்கள் கணினியில் தமிழ் தெரியும் பட்சத்தில் அவர்களும் உங்களைப் போன்று கற்றுக் கொண்டு தமிழில் எழுத ஆசைப்படலாம். அல்லது, முதல்முறையாக அவர்கள் கணினியைத் தமிழுக்கு அணியமாக்குவார்கள். சில சோம்பல்காரர்கள், உங்கள் மடலைத் திரும்ப ஆங்கிலத்தில் அனுப்பச் சொல்வார்கள். அந்தத் தவறைச் செய்யாதீர்கள். உங்கள் ஒருவரின் தமிழ் மடலை அவரால் படிக்க இயலவில்லை என்பதல்ல பிரச்சினை. அவருடைய கணினியில் எந்தத் தமிழ்த் தளத்தையும் அவரால் பார்க்க இயலாதிருப்பது தான் பிரச்சினை. அவருடைய கணினியில் தமிழைப் படிக்கத் தூண்டுவதன் மூலம் அவரின் தமிழ் சார்ந்த சிந்தனை, செயல்பாடுகளைத் தூண்டலாம்.

– உங்கள் கண்ணில் படும் எந்தக் கணினியிலும் தமிழில் படிக்க, எழுத வழி வகை செய்ய முயலுங்கள். பெரும்பாலானவர்கள் எடுத்துச் சொன்னால் ஆர்வமுடன் செயல்படுத்துகிறார்கள் என்பதே என் அனுபவம். உங்கள் அலுவலகம், கல்லூரியில் தமிழ் எழுத்துக்களைப் படிக்க, எழுத உதவும் மென்பொருள்களை நிறுவ அனுமதி இல்லை என்றால் குறிப்பிட்ட கணினி பராமரிப்பு அலுவலரைப் பார்த்து உதவி கேளுங்கள். “கண்ட மென்பொருளை எல்லாம் நிறுவ இயலாது” என்று அவர் தத்துவம் சொன்னால் “தாய் மொழியில் படிக்க, எழுத இயல்வது உங்கள் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று” 😉 என்று அவருக்குப் புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லுங்கள். தேவையானால், சண்டை போடுங்கள். ஆனால், விட்டுக் கொடுக்காதீர்கள் !

– நீங்கள் கணினி அறிவியல் மாணவர் என்றால் தமிழ் சார்ந்த ஆய்வுகளைச் செய்ய முற்படுங்கள். உங்கள் நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள மாணவர்களை அத்தகைய ஆய்வுகளைச் செய்யத் தூண்டுங்கள். ஒரு தமிழ் மொழியியல் ஆய்வு மாணவரோடு பேசி அவருடைய ஆய்வுக்கு நீங்கள் எப்படி உதவு முடியும் என்று பாருங்கள். தமிழ்க்கணிமைக்கான முன்னெடுப்பை தமிழ் மொழி மாணவர்கள், அறிவியல் மாணவர்கள் இருவரும் சேர்ந்தே திறமாக முன்னெடுக்க முடியும்.

– தமிழை ஒழுங்காகக் காட்டத் தெரியாத மென்பொருள்கள், தளங்களைப் புறக்கணியுங்கள்.

– நீங்கள் அறிந்து கொண்ட, பகிர விரும்பும் விசயங்களைத் தமிழிலும் இணையத்தில் எழுதுங்கள்.

அப்புறம்…

சரி, போதும்… இத்துடன் இன்றைய பரப்புரை இனிதே முற்றிற்று 🙂

தமிழ்க் கணிமை ஆர்வலர்கள்

நான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன்.

(எந்த வரிசையிலும் இல்லை)

1. முகுந்த்தமிழா! அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது.

2. மாகிர்தமிழூற்று – தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில்  தமிழிணையம் சார்ந்து பல நுட்பப் பணிகள் ஆற்றி வருகிறார். தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், விக்கி இயக்கங்கள் தொடர்பில் பயனுள்ள தேடு கருவிகள், வழிகாட்டுக் கருவிகள் உருவாக்கி உள்ளார்.

3. கோபி – இந்திய மொழிகள் பலவற்றுக்குமான ஒருங்குறி எழுது கருவிகள் செய்திருக்கிறார். இது தவிர, பல பயனுள்ள தமிழ் சார் Firefox நீட்சிகள் செய்து தந்திருக்கிறார்.

4. ஜெகத்இனியன் என்ற பெயரில் இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப் பெயர்ப்புக் கருவியைத் தனி உழைப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

5. Voice on Wings – முகுந்த், கோபியுடன் இணைந்து Firefox தமிழ்விசை நீட்சியின் உருவாக்கத்தில் பங்கு வகித்தவர். விக்கிப்பீடியா, வலைப்பதிவுகள் தொடர்பான Firefox நீட்சிகளையும் உருவாக்கி இருக்கிறார். இவரது அண்மைய உழைப்பு – மாற்று!.

6. மயூரன் – தமிழில் கட்டற்ற முயற்சிகள் எங்கிருந்தாலும் அங்கு மயூரனும் இருப்பார்! தமிழ் லினக்சு, தமிழ் உபுண்டு, தமிழ்க் கணிமை குழுக்களில் இவரது ஈடுபாடு பலரும் அறிந்தது.

7. காசி – தமிழ் வலைப்பதிவுகள் பெருகத் தொடங்கிய போது அவற்றைக் காட்சிப்படுத்தி, கூடிய வாசக வெளிச்சம் கிடைக்க உதவியாகத் தமிழ்மணம் திரட்டியை உருவாக்கினார்.

8. சுரதா – தமிழிணையக் கருவிகளுக்கு இவர் உருவாக்கிய சுரதா தளம் ஒரு களஞ்சியம் போல். இவருடைய சுரதா ஒருங்குறி எழுதி, பொங்குதமிழ் கருவிகளைப் பயன்படுத்தி இராதவர்கள் மிகக் குறைவே.

9. மறைந்த உமர் தம்பி அவர்கள் – இவரது உழைப்பும் உணர்வும் கோபி, மாஹிர் போன்ற பலரையும் தூண்டி விட்டது பெரும் சிறப்பாகும்.

10. மறைந்த சாகரன் என்னும் கல்யாண் – தேன்கூடு, பெட்டகம் என பல நல்ல இணையத்தளங்களை உருவாக்கினார். ஆனால், இவரது மறைவுக்குப் பிறகு இம்முயற்சிகளும் மறைந்தது சோகம்.

11. சிந்தாநதி – பல தமிழ் இணைய முயற்சிகளில் பின்னணியில் இருந்து செயல்பட்டு ஊக்குவித்தவர். இவரது அகால மறைவு பெரும் இழப்பு.

12. முனைவர் A. G. Ramakrishnan – இவரது குழுவினர் தமிழில் எழுதிய உரையைப் பேச்சுக்கு மாற்றும் செயலியைக் கண்டுபிடித்துள்ளனர்.

13. K. S. Nagarajan – NHM writer, NHM converter என்ற இரண்டு அருமையான மென்பொருள்களை உருவாக்கியவர். தமிழில் தற்போது கிடைக்கும் எழுதிகளில் NHM writer மிக அருமையானது. முழு நேரமாகவே தமிழ்க் கணிமைகளில் ஈடுபட்டிருக்கும் இவரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

14. சுந்தர் – தமிழ் இலக்கண கணிமை, விக்கி நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தானியங்கியாக தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் சேர்த்தது சுந்தரின் மிக முக்கியமான பங்களிப்பு.