Video என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சலனப்படம், அசைபடம், நிகழ்படம், காணொளி, விழியம், ஒளியம் என்று எண்ணற்ற சொற்கள் தமிழ் இணையத்தில் புழங்கி வருகின்றன. இப்படிப் பட்ட சொற்களைப் பயன்படுத்தாது ஏன் வீடியோ என்பதையே தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மயூரன் தமிழ் விக்சனரி குழுமத்தில் கேட்டிருந்தார்.
ஆங்கிலச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனைக்கு ஆதரவாக இருப்பவை:
1. இவை மக்கள் வாழ்வில் ஏற்கனவே புழங்கும் சொற்கள் என்பதால் மக்களால் எளிதாகப் புரிந்து கொள்ளப்படும்.
2. ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு பல்வேறு தமிழ்ச் சொற்கள் இருப்பதால் வரும் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.
3. பல நேரங்களில் ஒற்றை ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்கனவே இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களை ஒட்டு போட்டுப் புதுத் தமிழ்ச் சொல் உருவாக்குகிறோம். எடுத்துக்காட்டுக்கு, photo = புகை + படம், video = நிகழ் + படம் என்று. இவ்வாறு செய்வது மொழியின் வளர்ச்சியா குறுக்கமா என்று தெரியவில்லை. ஏற்கனவே இருக்கிற எளிய சொற்களைக் கொண்டு புதிய கருத்துக்களைப் புரிந்து கொள்வது வரவேற்கத்தக்கது. அதே வேளை, ஒரு குழந்தை குறைந்த சொல் தொகையை வைத்துக் கொண்டு புரிய வைக்க முயல்வது போலவும் ஒரு குற்றவுணர்ச்சி உண்டு. முக்கியமாக, இவை வேர்ச்சொல்லாக்கத்துக்குப் பயன்படுவதில்லை. photo, video போன்றவை எல்லாம் வேர்ச்சொல் போல் செயல்பட்டு இன்னும் பல கூட்டுச் சொற்களை உருவாக்கும். தமிழில் ஏற்கனவே ஒட்டுப்போட்டு தான் இச்சொற்களை உருவாக்கி வைத்திருப்பதால், இவற்றில் இருந்து புதிதாக உருவாகும் சொற்கள் இன்னும் நீண்டு கொண்டே போகின்றன.
4. ஆங்கிலச் சொற்கள் பல சமயங்களில் சுருக்கமாகவும் ஓசை நயம் மிக்கதாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது. ரயில் மேல் மயில் வருது என்று கவிதை எழுதலாம் அல்லவா 😉
5. பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வது ஒரு மொழியின் வளர்ச்சிக்கு உதவும். இது எல்லா மொழிகளிலும் எல்லா காலங்களிலும் நிகழ்வது தான் என்று சிந்தனை.
6. தமிழில் சொல் இல்லை என்பதற்காக சில சமயம் நவீன துறைகளைக் குறித்து எழுதத் தயங்குகிறோம். அதற்கான கலைச்சொல் உருவாகும் வரை காத்திருக்கிறோம். இது புது சிந்தனைகளைத் தமிழர்கள் அறிந்து கொள்வதில் தேவையற்ற தாமதத்தை உண்டாக்குகிறது.
சரி, ஏன் இவ்வாறு ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று என் மனதில் எழும் சிந்தனைகள்:
1. சொற் தொடர்பு:
மொழி என்பது ஒரு ecosystem போல் என்று பேராசிரியர் செல்வகுமார் சொல்வார். ஒவ்வொரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் தொடர்பு இருக்கும் போது தான் அந்த மொழி உயிர்ப்புடன் இருக்கும். video என்ற ஆங்கிலச் சொல்லுடன் visual என்பதைப் பொருத்தலாம். audio என்ற சொல்லுடன் audible என்ற ஆங்கிலச் சொல்லைப் பொருத்தலாம். இந்தச் சொற்களைப் பொருத்திப் பார்த்துப் புரியாத சொல்லைப்புரிந்து கொள்ள முடியும் வசதி ஆங்கிலேயருக்கு இருக்கிறது.
ஆனால், இந்தச் சொல் தொடர்பைக் கணக்கில் எடுக்காமல் தனிச்சொற்களை மட்டும் கடன் வாங்கினால் ஒன்று அந்தச் சொல் புரியாமல் தனித்து நிற்கும். அல்லது, அதைத் தொடர்ந்த சொற்களும் ஆங்கில மூலமாகவே மாறும். கலைச்சொல்லாக்கத்தில் இந்தத் தொடர்பை முக்கியமாக கருதுகிறேன். வலைப்பதிவு என்று சொன்னால், பதிவர், பதிவுலகம், பதிப்பித்தல் என்று தொடர்பு வருவதைப் பாருங்கள். அதே வேளை வலைப்பூ என்றால் பூக்காரன், பூவுலகம், பூப்பூத்தல் என்றா சொல்ல முடியும்? ஆகவே, தமிழ்ச்சொல்லாகவே இருந்தால் கூட இந்த சொல் தொடர்பைப் பேணுவது அவசியம்.
video என்ற ஒற்றைச் சொல்லைப் புகுத்துவது மூலம் வீடியோக்காரர், வீடியோக்கலை, வீடியோ கடை என்று எத்தனை இடங்களில் ஒரு சொல்லைப் புகுத்துகிறோம் பாருங்கள்.
2. இலக்கணச் சிதைவு:
தமிழ் இலக்கணப்படி ஒவ்வொரு சொல்லும் தன்னாலேயே பொருளுடையது. ஒவ்வொரு சொல்லின் ஒலிப்பும் சில இலக்கணங்களுக்கு உட்பட்டது. இப்படி தேவையே இல்லாமல் கடன்வாங்கப்படும் சொற்கள் தமிழின் ஒலிப்பையும் பொருட்செறிவையும் குறைப்பதைக் காணலாமே? எடுத்துக்காட்டுக்கு, photo என்ற சொல்லைக் கடன் வாங்கி அதைத் தமிழில் எழுதிக் காட்ட ஃபோட்டோ என்று எழுதுகிறோம். ஆனால், இப்படி ஆய்த எழுத்தை முதலில் எழுதுவதால் ஆய்த எழுத்தின் ஒலிப்பையும் ஆய்த எழுத்து சொல் முதலில் வராது என்ற தமிழ் இலக்கணத்தையும் சிதைக்கிறோம். ballஐ பால் என்று எழுதுகிறோம். paal என்று வாசிக்க வேண்டியதை baal என்று வாசிக்கிறோம். ஆங்கிலச் சொற்றொடர்கள் எழுதும் போது இலக்கணத் திருத்திகள் கொண்டு எல்லாம் பயபக்தியுடன் சரி பார்த்து தானே செயற்படுகிறோம். ஆனால், தமிழ்ச் சொற்களை எழுதும்போது மட்டும் தமிழின் இலக்கணத்தைப் பொருட்படுத்தாது அலட்சியமாக இருப்பது சரியா? பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்குவதை நிறுத்தினாலே பாதி தமிழ்ச் சிதைவு குறையும் என்று நம்புகிறேன். இலக்கணத்தைக் காலத்துக்குக் காலம் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கலாமோ? எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒவ்வொரு மொழியும் ஒரு உயிரினம் போன்று அதற்கென தெளிவான கட்டமைப்புடன் தான் உருவாகிறது. உயிரினங்கள் தங்களுடன் கலந்து புது இனங்கள் உருவாவது போல் மொழிக்கலப்பால் புதிய மொழிகள் உருவாகலாம். ஆனால், அது முந்தைய மொழிகளின் இருப்புக்கு உறுதி அளிப்பதில்லை. உயிரினப் பல்வகைமையைப் பேண எப்படி விழைகிறோமோ அதே போல் மொழிப் பல்வகைமைகளையும் தனித்துவத்தையும் காக்க முற்படுவதும் அவசியம்.
3. சொல் இழப்பு:
ரயில் என்ற சொல்லுடன் சேர்ந்து ரயில்வே என்ற சொல்லையும் உறுத்தல் இல்லாமல் பயன்படுத்துகிறோம். ரயில் பாதை என்றாவது சொல்லலாம் என்று தோன்றுவதில்லை. இல்லாத சொல் என்று கடன் வாங்கி, அந்தப் புதுச் சொல்லுடன் இணைந்து வரக்கூடிய பிற தமிழ்ச் சொற்களையும் இழந்து விடுகிறோம். rail=இருப்பு என்றே பயன்படுத்தி இருந்திருந்தோமானால் இருப்புவே என்று எழுதுவது உறுத்தி இருப்புப் பாதை என்று இயல்பாக எழுதி இருப்போம்.
4. ஓசை நய அரசியல்:
ரயில், கார் எல்லாம் ஓசை நயமாக இருக்கிறதே? தமிழ் ஒலிப்புக்கும் ஒத்தும் வருகிறதே? எனவே அப்படியே இவற்றை ஏற்றுக் கொள்ளலாமே? என்று சிந்திக்கத் தூண்டுதலாக இருந்தாலும், இந்த ஓசை நயத்துக்குப் பின் ஒளிந்திருக்கும் அரசியல் உறுத்துகிறது. ஒரு மொழியின் சொற்களைக் காட்டிலும் இன்னொரு மொழியின் சொல் ஓசை நயமாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்று தொடங்கும் மொழிக் கலப்பு, பிறகு, இருக்கும் மொழியைக்காட்டிலும் புகுந்த மொழி மேம்பட்டது, புகுந்த மொழியைப் பேசுவோர் மேலோர் என்ற அரசியலில் போய் முடிகிறது. வடமொழிக்கலப்பின் இன, சமூக, அரசியல் வரலாறு இந்தப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. உதவுகிறேன் என்று புகும் மொழி ஒரு இனத்தையே இப்படி அடிமை மனநிலைக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளுவதை ஏற்க இயலாது.
5. பல சொற்கள் இருப்பது நன்மை தான்:
ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு பல தமிழ்ச் சொற்கள் இருப்பது நன்மை தான். தொலை நோக்கில், ஏதாவது ஒரு சொல் மக்கள் ஏற்பு பெற்று நிலைக்கும். நிச்சயம் குழப்பம் வராது. பொருளே தெரியாமல் அப்படியே ஆங்கிலச் சொல்லை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும், இப்படி முயன்று பார்க்கப்படும் பல தமிழ்ச் சொற்கள் தமிழனின் பார்வையில் எப்படி ஒரு சிந்தனை உள்வாங்கப்படுகிறது என்று புரிய உதவும். bicycle என்ற சொல்லின் நேரடிப் பொருளுக்கே தொடர்பு இல்லாமல் மிதி வண்டி என்ற சொல் நிலைப்பதைக் காணலாம். இது குறிப்பது என்னவென்றால், ஒருவேளை தமிழனே bicycleஐக் கண்டுபிடித்திருந்தால் மிதி வண்டி என்றே பெயர் வைத்திருக்கக்கூடும். இன்று நாம் பல சொற்களைக் கடன் வாங்க வேண்டி இருப்பதற்கு முக்கிய காரணம், அச்சொற்கள் குறிக்கும் சிந்தனைகள், புத்தாக்கங்கள் நம் மண்ணில் தோன்றாமை தான். இந்த அடிப்படைப் பிரச்சினையைக் களைய முனையாமல் சொற்களைக் கடன் வாங்கி காலத்தை ஒப்பேற்றுவது மழுங்கிய சமூகத்தின் அறிகுறியாகவே தோன்றுகிறது.
சிந்தனைகளுக்கு மட்டும் அறிமுகம் ஆகாமல் அதோடு சேர்ந்து சொற்களையும் கடன் வாங்குவது தான் பிழையாகப் போய் விடுகிறது. தரமான தாய்மொழிக் கல்வி, தாய்மொழி வழிச் சிந்தனை இவற்றின் மூலம் புத்தாக்கங்களின் ஊற்றுக்கண்ணாக தமிழகம் இருக்கும் என்றால் தமிழகத்தில் இருந்து எழும் புதிய சிந்தனைகள், புத்தாக்கங்கள் இவற்றுக்குத் தமிழிலேயே பெயர் வைப்பது எளிதாகி விடும். பிற மொழிச் சொற்களைத் தமிழில் சேர்க்கலாமா என்ற நிலை மாறி தமிழ்ச் சொற்கள் உலக மொழிகளில் புதுச் சொற்களாகச் சேரும் நிலை வந்தால் எப்படி இருக்கும்? WordPress உலகளாவிய மென்பொருள் தான். ஆனால், பாலம், பால்நிலா, நிகரிலா என்று பெயரில் பிரபலமான WordPress வார்ப்புருக்கள் இருப்பதை அறிவீரா? மென்பொருளாக்கம் போன்ற துறைகளில் உலக அளவில் தமிழர் முன்னணியில் இருக்கையில் நாம் செய்யும் புத்தாக்கங்களுக்கான சிந்தனைகளையும் பெயர்களையும் தமிழிலேயே செய்வோமானால் எவ்வளவோ தமிழ்ச் சொற்கள் உலக அளவில் புழங்கும்.