இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)

ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு கட்டில்.

அப்புறம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி

அடைந்து கிடக்கும் என் அறையில்,

இன்னும் எதை வாங்கி வைத்தாலும் கேட்கப் போவதில்லை.

சாப்பிட்டாயா என்று.



பட உதவி: LynGi
பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – வணிகமல்லா, மேற்படிப் பயன்பாடு – 2.0

தனிமையின் பெயர்

உறக்கம் வரா ஆம்சுடர்டாம் இரவு 11.30 மணி.
ஏதோ பேசித்தீர்க்க விழையும் மனம்.

பெல்சியம், செருமனி, லக்சம்பர்க், பிரான்சு..

”இத எல்லாம் நாங்க TVல தான் பார்க்கணும்..நீ நேர்லயே பார்க்கிற..” – அப்பா.
“எந்த TVயும் உங்கள காட்டுதில்லையே..” – நான்.

சின்ன வயசுல உலகம் பார்ப்பது சாதனையாம்.
பறவை கூட தான் நாடு விட்டு நாடு போகிறது.

சாதனையா என்ன?

பிழைப்பு !

பார்க்க, பேச வலைப்படக் கருவியும் தொலைபேசியும் உண்டு.
அக்கா மகனை தூக்கிக் கொஞ்சத் தான் தொழில்நுட்பம் இல்லை.

மீந்த பருக்கைகள் தின்ன வரும் குருவிகளுக்கு என் மொழி தெரியாது.
வாரக் கடைசி நண்பர்களுக்கு என் வலி புரியாது.
மது விற்கும் இரவுக்கடைக்காரனுக்கு சிரிக்கத் தெரியாது.

என் கண்ணாடி சன்னலின் வழி
காற்றும் மாசும் இரைச்சலும் எப்போதும் வந்தாலும்
ஒருபோதும் வருவதில்லை ஒரு பறவையும்..

திருமணம் செய்யலாமா, புது நண்பர் பிடிக்கலாமா – அக்கறையோடு கேட்கும் அக்கா.
ஒரு container நிறைய என்னோடு மனிதர்களை போட்டு அடைத்தால் சரியாகி விடுமா என்ன?
இது வெட்ட வெளியில் ஒரு மூச்சுத் திணறல்.

வருகிறார்கள். நுழைகிறார்கள். திரை மூடுகிறது. திரை விலகுகிறது. செல்கிறார்கள்.
20 நிமிடங்கள் – 50 ஐரோ மட்டுமே.
”என்ன செய்யலாம்?”
”என்ன வேண்டுமானாலும்..Su** and F***, two positions..”


ஏதாவது பேசுவாயா என்றா கேட்க முடியும்?
நகர்கிறேன்.

குளிர் நாட்டில் நடுநிசி நாய்களைக் காணோம்.
மனிதர்கள், வண்டிகள், கடைகள் மட்டுமே.

இன்னொரு சன்னல். இன்னொரு பெண்.
அதே உரையாடல்.
நகரப் பார்த்தபோது கேட்டாள்:

”யாரும் வருகிற பாட்டை காணோம்… விடியல் வரை கண் முழிக்கணும்…
சும்மானாச்சும் கொஞ்ச நேரம் ஏதாச்சும் பேசேன்”?


என்ன பேசி விட முடியும்?

போதை, புகை, மாது, கேளிக்கை, கொண்டாட்டம் நிறைய கிடைக்கிறது.
வாழ்க்கை மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதில்லை.

அலைந்த களைப்பில் உறக்கம் வரலாம்.
அப்போதும் யாரும் வரப்போவதில்லை பேசித் தீர்க்க –
எனக்கும் அவளுக்கும் அனைவருக்கும்.