Englishland

குறிப்பு: amma not equal to அம்மா என்ற படிமத்தைச் சொடுக்கி இங்கு வருபவர்கள், சிறந்த தமிழ் விசைப்பலகை எது? என்ற தமிழ்99 விசைப்பலகை விளக்கக் கட்டுரைக்குச் செல்லவும். தவிர்க்க இயலாத காரணங்களால் பக்கம் வழ மாறியதற்கு வருந்துகிறேன்.

தமிழ்நாட்டில் தமிழர் தத்தம் பெயர்ச்சுருக்கங்களை ஆங்கிலத்திலேயே எழுதுகிறோம்.

தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் தான் கையெழுத்து இடுகிறோம்.

பிற மொழி, ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசத் தெரியாது. ஆனால், பலரும் ஒரு தமிழ்ச் சொல்லும் கலக்காமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறோம். அதற்கு காசு கொடுத்துப் பயிற்சியும் பெறுகிறோம்.

ஆங்கிலத்தில் பேசுபவன் அறிவாளி. தமிழில் மட்டும் பேசத் தெரிந்தவன் முட்டாள். தமிழில் மட்டுமே பேசுவேன் என்பவன் தமிழ் வெறியன்.

பாலத்தீனப் பிரச்சினைக்குப் பரிந்து பேசுபவனை அறிவுசீவி என்கிறோம். ஈழத்துக்கு ஆதரவாகப் பேசினால் விடுதலைப் புலி.

eppadi irukkada. paaththu romba naal aachchuதமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொல். ரோட்ல டிராபிக் ஜாம் – ஆங்கிலத்தைத் தமிழில் எழுதித் தமிழாக்கு.

ஒரு ஆங்கில உரையின் நடுவிலோ நேர்முகத் தேர்விலோ ஆங்கிலச் சொல் அறியாவிட்டால் வெட்கம் பிடுங்கித் திங்கத் தலை குனி. ஆனால், வெட்கமோ வருத்தமோ இன்றித் தமிங்கிலம் பேசு.

தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தை 10ஆம் வகுப்பு வரையாவது தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழன் உயர்படிப்பில் பொறியியலும் நுட்பமும் மருத்துவமும் படிக்க வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் படிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழரின் கோயிலில் தமிழில் வழிபாடு நடத்த அரசு ஆணை வர வேண்டும்.

அப்பா, அம்மா என்ற சொற்கள் மட்டுமே தெரிந்த சில தமிழ்க் குழந்தைகள்.

பணத்தில் புரளும் பல ஆங்கில வழியப் பள்ளிகள். கூரை கூட இல்லாத தாய்த் தமிழ்ப் பள்ளிகள்.

தமிழ் மட்டுமே தெரிந்திருந்தால் செல்பேசி முதல் கணினி வரை இயக்க முடியா நிலை.

தமிழ்நாட்டு உயர்நீதி மன்றங்களில் தமிழில் வழக்கை நடத்த முடியா நிலை.

தமிழன் மட்டுமே பொருள் வாங்க வரும், தமிழன் நடத்தும் கடையில் பெயர்ப்பலகைகள் மட்டும் ஆங்கிலத்தில். விற்பனைச் சீட்டும் ஆங்கிலத்தில்.

தமிழ்நாட்டில் இருக்கும் வங்கியின் தொலைபேசிச் சேவையை அணுகுகையில் “தமிழில் பேசலாமா” என்று அனுமதி கேட்க வேண்டும். “ஆங்கிலத்தில் தான் பதில் அளிப்போம்” என்று வரும் மறுமொழியைச் சொரணையற்றுக் கேட்டுக் கொள்.

Deutschlandல் (செருமனியில்) Deutsch (செருமன் மொழி) தெரியாமலும் Nederlandல் (நெதர்லாந்தில்) Nederlands (நெதர்லாந்து மொழி) தெரியாமலும் சிரமப்படும் போது தோன்றி மறையும் எண்ணங்கள் இவை.

இவற்றை எல்லாம் மாற்ற முடியாமல் போனாலும் நாட்டின் பெயரிலாவது தமிழ் இருந்து தொலைக்கட்டும் என்று நினைத்துப் பெயர் வைத்தார்களோ என்னவோ தமிழ்நாடு என்று?

Englishland என்று யாராவது பெயரை மாற்றித் தந்தால் குற்றவுணர்வையாவது கழுவிக் கொள்ளலாம் 🙁