நாடி ஜோசியம் !

இந்த முறை ஊருக்குப் போனப்ப, மருதமலை அடில உள்ள ஒரு நாடிஜோசிய மையத்துக்கு அக்கா என்னை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. தம்பி ஆராய்ச்சி பண்ணாம இணையத்துலயே கிடக்குறானே, தேறுவானானு அவங்க கவலை..என்னடா வெளிநாட்டுல ஏதாச்சும் girl friend கிடைக்குமான்னு என் கவலை 😉 ஆக, திருமணக்காண்டம், வேலை காண்டம் இரண்டும் பார்க்குறதுன்னு முடிவு. ஏற்கனவே, அக்காவப் பத்தின விவரங்கள் எல்லாம் அந்த மையத்துல தெளிவா சொல்லி இருந்ததால, நம்மள பத்தி எப்படி சொல்லுறாருன்னு ஒரு பரபரப்பு.

போன உடன என் வயசு, கட்டை விரல் ரேகை ரெண்டும் வாங்கிக்கிட்டு ஒரு disclaimer கொடுத்தாரு. அதாவது, எனக்கான ஓலை அந்த மையத்துல இல்லாட்டி அன்னிக்கு குறி சொல்ல முடியாதுன்னும் அதுனால பணமும் வாங்க மாட்டம்னும் சொன்னாரு. நேர்மை, நேர்மை!

அதிர்ஷ்ட்ட வசமா 🙂 நம்ம விதி எழுதின ஓலை மருதமலை அடிவாரத்தில் துயில் கொண்டிருந்தது. தொடர்புடைய பல ஏடுகள்ள இருந்த என்னைப் பற்றின விவரங்கள் உள்ள ஏட்டைக் கண்டுபிடிச்சார். அது ஒரு knock-out round மாதிரி..எனக்கு ரெண்டு மனைவியா, எங்க அப்பாவுக்கு ரெண்டு மனைவியா, அப்பா பேர்ல சாமி இருக்கா, நான் சிறைக்குப் போயிருக்கனா, எனக்கு உடல் ஊனமா, என் பெயர்ல வடமொழி எழுத்து இருக்கா, ங் இருக்கா, ச் இருக்கான்னு அப்படின்னு வரிசையா பல கேள்விகள். எல்லாம் இல்லை, இல்லைன்னு சொல்லச் சொல்ல கழிச்சுக் கட்டிக்கிட்டே வந்தார். அதுவே, ஒரு game மாதிரி நல்லா இருந்துச்சு. கடைசியா நம்ம ஏடு சிக்கிக்குச்சு.

அப்புறம், அதுல அவரு போட்ட bit என்னன்னா, அன்னிக்கு அந்த ஏடு பத்தி நான் தெரிஞ்சுக்கிணும்னு பிராப்தம் 😉 இருப்பதால் தான் அந்த ஏடு அன்னிக்குக் கிடைச்சதாம். அவர் சொல்லுற விவரங்கள் எல்லாத்தையும் ஒலிநாடாவில் வேற பதிந்தார். ரொம்ப professional தான் !

அப்புறம், என் பேர், பிறந்த நாள், மாதம், ஆண்டு, நேரம், உடன் பிறந்தவர் எத்தனை, அப்பா தொழில், என் தொழில், அப்பா பேர், அம்மா பேர், இருக்கும் இடம் எல்லாம் துல்லியமா சொன்னார் !!

<<இப்ப, நான் வாயைப் பிளந்து கதை கேட்டது மாதிரி ஒரு smiley போட்டுக் கொள்ளவும்>>

எனக்கு அடுத்த ஆண்டு நல்ல வேலை வாய்ப்பு ஒன்று வரும் எனவும் 29 வயதுக்குள் settle (!) ஆகிடுவேன்னும் சொன்னார்.
கல்யாணத்துக்குப் பிறகும் அக்காவுடன் பாசமா இருப்பேன்னு சொன்னார்.

<<இங்க அக்கா முகத்தில் bulb எரிவது போல் ஒரு smiley போட்டுக் கொள்ளவும்>>

நான் பொறுமை இழப்பது கண்ட ஜோசியர் திருமண காண்டத்துக்கு வந்தார். அவர் அடுத்தடுத்து அடுக்கிய குண்டுகள்:

* 29 வயசுல தான் திருமணம் ! (இன்னும் 4 வருசமா 🙁 !!)
* அப்பா அம்மா பார்க்குற பொண்ணு தான் (ஹ்ம்ம்)
* உள்ளூர்ப் பொண்ணு தான் (வெளிநாட்டு வாழ்க்கை வீணா?)
* ஏகப்பட்ட பொண்ணு பார்த்துத் தள்ளிப் போய் தான் திருமணம் இறுதியாகும் (இது வேறயா??)
* பொண்ணுக்கு முழங்கைல மச்சம் இருக்கும் (நல்ல வேளை முழங்கைல இருக்கு. கொஞ்சம் தேடிப் பார்க்கலாம்)

அப்புறம், பொதுவா எனக்குப் பரிகாரம் பார்க்க வேண்டும் என்று சொல்லி ஒரு தொகையைக் கேட்டார். ஏற்கனவே, திருமணத்துக்குப் பிறகு அக்காவுடன் பாசமாக இருப்பேன் என்று ஒரு bit நங்கூரம் போலப் பாய்ச்சப் பட்டிருந்ததால் அக்கா ஒப்புக்கொண்டார். அப்புறம் consulting charge 250 INR+per காண்டம் @ 200 INR ஐ சாமி சாட்சியாக பவ்யமாக அவரிடம் தந்து விட்டு வந்தோம்.

ஜோசியத்துக்குப் பின்:

– இது மூட நம்பிக்கையாகவோ ஏமாற்று வேலையாகவோ இருக்கட்டும். ஆனால், என் பிறந்த நாள் உள்ளிட்ட விவரங்களை எப்படிச் சொல்ல முடிகிறது? இது என்ன technique? mind reading என்று உண்மையிலேயே இருக்கிறதா? இருந்தால் பாராட்டத்தான் வேண்டும்.

– ரெண்டு மனைவிக் காரன், அது தெரியாத முதல் மனைவியுடன் ஜோதிடம் பார்க்க வந்தால் எப்படி உண்மையான பதிலைச் சொல்வது? 😉

– கடந்த காலத்தை அவர் துல்லியமாகச் சொல்வதால் எதிர் காலம் பற்றி அவர் சொல்வதிலும் ஒரு நம்பகம் கலந்த எதிர்ப்பார்ப்பு வருவது உண்மை.

– என்னைப் பற்றி எனக்கு ஏற்கனவே தெரிந்த பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அவர் வாயால் கேட்பதற்கு நானே காசு தருகிறேன். நல்ல comedy, முட்டாள்த்தனம். ஆனா, இது ஒரு நல்ல அனுபவம்.

– இந்த அனுபவத்தைச் சொல்லி இன்னும் ஓரிரு நண்பர்களாவது அந்த மையத்துக்குப் போய் இருப்பார்கள்.

– இந்த மச்ச விவரம், மணப்பபெண் பற்றிய பல விவரங்கள் பொதுவாக பலருக்கும் ஒரே மாதிரி அடித்து விடப்படுகிறது என்று கேள்விப்பட்டேன்.

– திருமணம் என்று ஆனால் என்ன, என்றோ ஆவதற்கான scope இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்று சில நண்பர்கள் positive thinking உடன் ஆறுதல் சொன்னார்கள் 😉

– தமிழகத்தில் இதற்கு நல்ல craze இருக்கிறது. இதற்காக தஞ்சை கோயிலில் வைத்து ஒரு பட்டயப்படிப்பே நடத்துவதாகக் கேள்வி !

அடுத்துப் பார்க்க விரும்பும் நபர்கள் – லாட்ஜ் மருத்துவர்கள், ஆசிரமச் சாமியார்கள் 😉

நாடி ஜோதிடம் குறித்த விக்கிபீடியா கட்டுரை.