சிங்கப்பூரில் பாதிப்படிப்பை முடித்து மீதிப்படிப்புக்காக வந்துள்ள இடம் செருமன் மாநகரமான முன்சன் (ஆங்கிலத்தில் Munich – மியூனிக்).
முதல் ரெண்டு வாரம் அரிசிச்சோறே சாப்பிடவில்லை. இத்தனை நாட்களுக்கு அரிசி சோறு சாப்பிடாமல் வாழ முடியுமா? அரிசி விற்கும் கடையைக் காட்டுவதாக பக்கத்து அறையிலுள்ள சீன நண்பர் சொல்லியிருக்கிறார். ஒரு வாரமாக முட்டையை வேக வைத்தே தின்ற பின் தான் அதை வைத்து ஆம்லெட் கூட போட முடியும் என நினைவு வந்தது. நான் ஆம்லெட் செய்வதைப் பார்த்த சீனாக்காரன், இது என்ன இந்திய பீட்சாவா என்றான். பன்னிக் கறி நிறைய கிடைக்கிறது. ஆனால் சாப்பிட மனம் ஒப்பவில்லை. பிரட் செய்வதில் ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு நிறைய பிரெட் வகை வைத்திருக்கிறார்கள். விருந்து என்றால் கண்டிப்பாக மது, வைன் உண்டு. ஆண், பெண் பாகுபாடின்றி ரசித்து ரசித்து குடிக்கிறார்கள். புகைக்கிறார்கள்.
எப்போதாவது தான் இந்தியர்கள் தென்படுகிறார்கள். பார்த்தால், மறக்காமல் புன்னகைக்கிறார்கள். நேரம் இருந்தால் கை குலுக்கி ஊர், பெயர், வேலை அறிந்து விடை பெறுகிறார்கள். பெரும்பாலும் மாணவர்களும் மென்பொருள் வல்லுனர்களும் தான். இந்தியப் பெண்கள் ரொம்பக் குறைவு. அப்படியே இருந்தாலும் திருமணமானவர்களாக இருக்கிறார்கள். ம்ம்.. 🙂 பஞ்சாபி உணவகங்களில் நம்மவர்களை விட வெளி நாட்டவர்கள் தான் கூடுதலாக விரும்பிச் சாப்பிடுகின்றனர். இந்தி, தமிழ்த் திரைப்படங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. கொஞ்சம் ஆப்பிரிக்கர்கள், வளைகுடா பகுதி ஆட்கள் தவிர எல்லாரும் வெள்ளையாக இருப்பதால் எந்த நாட்டவர் என்று சொல்ல முடியாது. கல்லூரியில் நிறைய நாட்டவர்கள் இருக்கிறார்கள்.
பத்து மணி வரை சூரியன் இருப்பது புதுமை. குளிர் காலத்தில் 4 மணிக்கு எல்லாம் இருட்டி விடுமாம். போன வாரம் எல்லாருடனும் சேர்ந்து பக்கத்திலுள்ள ஆசுத்திரியா நாட்டுப்பகுதியில் உள்ள ஆல்ப்சு மலைத் தொடருக்கு சென்று வந்தோம். முதன் முறையாக பனி மலை பார்க்கிறேன். நான் ஏன் இன்னும் இமய மலையைப் பார்க்கவில்லை என்று எல்லாரும் கேட்டார்கள். நம்ம ஊர் ஊட்டி, கொடைக்கானல் இன்பச் சுற்றுலா போல் இல்லை. கொஞ்சம் கடினச் சுற்றுலாவாக இருந்தது. பெரிய பெரிய மூட்டைகளை முதுகில் கட்டிக்கொண்டு மலை உச்சி வரை ஏறிச் சென்றோம். அங்கு ஒரு மரக் குடிசையில் இரண்டு நாள் தங்கியிருந்து சமைத்துச் சாப்பிட்டு, விளையாடி, கலந்து பேசி திரும்பினோம். கூட இரண்டு பிரஞ்சுக் காரர்கள் வந்திருந்தார்கள். பிரஞ்சு மொழி தவிர வேறு ஒன்றும் அறியாத நல்லவர்கள்.
பேருந்து, தொடர்வண்டி, ட்ராம் வண்டி எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக மாதச் சீட்டு தந்து விடுகிறார்கள். ஞாயிற்றுக் கிழமை இங்கு உண்மையிலேயே ஓய்வு நாள் போல. பெரும் பாலான கடைகளை மூடி விடுகிறார்கள். பேருந்து வசதியும் குறைவு தான்.
நல்ல அழகான மரபு மிக்க பழங்காலக் கட்டிடங்கள், நிறைய ஏரிகள், ஒரு ஆறு உள்ளன. உலகிலேயே வாழ்க்கைத்தரம் கூடிய நகரங்களில், முன்சனுக்கு ஐந்தாவது இடம். இங்க தான் அடுத்த உலகக் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. கல்லூரிக்கு வெளியில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தால் “என் தாத்தா செய்த நல்வினை” என்று மகிழலாம். வேற்று மொழி உதவியே இல்லாமல் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்!
அறையில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் 20 செருமன் மொழிக் காட்சிகள். போனால் போகிறது என்று சி. என். என் மட்டும் வருகிறது. கொஞ்சமாவது மொழியைக் கற்றுக் கொள்ளலாமே என்று, செருமன் தொலைக்காட்சிகளையும் பார்க்கிறேன். நல்ல வேளையாக செருமன் மொழி எழுத்துக்கள் ஆங்கில எழுத்துகளைப் போல் இருக்கின்றன. சில சொற்களும் ஆங்கிலத்தை ஒத்து இருக்கின்றன. ஒரு நாளைக்கு 10 முறையாவது செருமன் அகரமுதலியைப் பார்க்கிறேன். அது இல்லாமல் வெளியில் செல்வது இல்லை.
சென்னையைத் தாண்டாத என் சில நண்பர்கள் நான் உலகம் சுற்றும் இளைஞனாகி விட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால் , நான் அடிக்கடி கேட்கும் பாட்டு என்னவோ “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா” தான். இப்பொழுது கொஞ்ச நாட்களாக தேசம் படத்திலிருந்து ” உந்தன் தேசத்தின் குரல்” பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வேன். ஏனெனில் இங்கு தமிழ் பேச அவ்வளவாக ஆட்கள் இல்லை !!!