சாலையில் போகிற வண்டியில் புகை வந்தால், சாலையோர மரத்தில் புளியம்பழம் பறிப்பதை விட்டு விட்டு வண்டியை நிறுத்தி எட்டிப் பாருங்கள். வண்டியில் குண்டு இருந்து வெடித்து நீங்கள் செத்தால் 1 இலட்சம் கிடைக்கும்.
ஆளில்லா ரயில் சந்திப்பில் உங்கள் வாகனம் ரயிலோடு மோதி செத்தால், நீங்கள் அரசு ஊழியராயிருக்கும் பட்சத்தில், 2 இலட்சம் கிடைக்கும். இல்லாவிட்டால், 1 இலட்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
CNN, BBC, நம்ம ஊர் தொலைக்காட்சிகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து காட்டுவதற்குத் தகுந்தவாறு யாராவது கொலைகாரனை ஏற்பாடு செய்து அவன் கையால் சாகுங்கள். உங்கள் இறுதிச் சடங்குக்கு வர உறவினர்களுக்கு அரசு காசு கொடுக்கும். இது பல இலட்சம் பெறும்.
ஆழ்குழாய் கிணற்றில் மாட்டி உங்கள் பிள்ளை சாவதை விட பிழைத்துக் கொள்வது நல்லது. எப்படியாவது காப்பாற்றி விடுங்கள். பிழைத்துக் கொண்ட குழந்தை அதிசயக் குழந்தையாகக் கருதப்பட்டு கூடுதல் உதவித் தொகை கிடைக்கும்.
அண்மையில் அரசியல் கட்சித் தொண்டர்கள் தீக்குளித்ததாகத் தெரியவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் 1 லட்சமாவது கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அப்போது எனக்கு அவ்வளவு விவரம் தெரியாது.
நன்றாக விற்பனையாகும் நாளிதழ் ஊழியராக இருந்து அலுவலகத்துக்குள் வைத்துக் கொழுத்தப்பட்டால் 15 இலட்சம் கிடைக்கும்.
சுனாமி, நிலநடுக்கம் வந்து செத்தால் அரசு போக நடிகர்களும் காசு தருவதாக சொல்லுவார்கள். சொன்ன மாதிரி தந்தும் விட்டால், கிடைத்த வரை இலாபம்.
உயிருக்கான இழப்பீட்டுத் தொகை தவிர, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்குப் பூ வைத்து அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று விரும்பினால் அமெரிக்காவிலோ இலண்டனிலோ பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாகுங்கள்.
பொதுவாக, உங்கள் உயிருக்கு அதிக விலை கிடைக்க வேண்டுமானால் கொஞ்சமாவது பரபரப்பாக, ஊடகங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வகையில் சாக வேண்டும். ரொம்ப கும்பல் சேர்க்காமல் கொஞ்சம் பேர் மட்டும் செத்தால் கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒன்றுமே குடும்பத்துக்கு செய்யாமல் குற்ற உணர்வுடன் இறப்பவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்கள் இது போன்ற தருணங்களுக்குக் காத்திருந்து சாவது நலம்.
இதை எல்லாம் விட்டு விட்டு முட்டாள்த்தனமாக பாக்தாத்தின் அன்றாடக் குண்டு வெடிப்புகளால், உலக நாட்டுப் போர்த் தாக்குதல்களால், தீரா நோய்களால், ஊட்டக்குறைவால், பஞ்சம் பிழைக்கப் போன நாட்டில் முதலாளியால் அடித்தே கொல்லப்பட்டால், இன்று இங்கு 135 பேர் பலி என்று வானிலை அறிக்கை போல் தான் ஊடகங்கள் சொல்லும். பைசா தேறாது.
ஆண்டு முடிவில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் இப்படி இறந்தார்கள் என்று புள்ளிவிவரங்கள் வெளியாகும்.
வேறொன்றுக்கும் உதவாது.